தமிழக சட்டபேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவையை வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், ”ஜி.எஸ்.டி., மசோதாவை அறிமுகப்படுத்திய நேரத்தில், அதற்கு நாங்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும், அதுகுறித்து இன்று விவாதம் நடைபெற்றபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், இதில் இருக்கக்கூடிய பிரச்னைகளை, சங்கடங்களை, எந்தெந்த பொருளுக்கு வரி அதிகமாக இருக்கிறது, எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

அதுமட்டுமல்ல, வாட் வரி விதிக்கப்பட்ட நேரத்தில், அப்போது திமுக ஆட்சி நடைபெற்று, முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சம்பந்தப்பட்ட வணிகப் பெருமக்கள், தொழிலதிபர்கள் அத்தனை பேரையும் அழைத்து, கூட்டம் நடத்தி, அவர்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய கருத்துகளை எல்லாம் கேட்டு, அதன் பிறகுதான் அதனை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். ஆகவே, நியாயமாக ஜி.எஸ்.டி. சட்டமுன் வடிவை இன்று இந்த அவையில் நிறைவேற்றுவதற்கு முன்னால், இதனால் பாதிக்கப்படக்கூடிய வணிகர்கள், தொழிலதிபர்கள், அதற்கான அமைப்புகளை எல்லாம் அழைத்து, பேசியிருக்க வேண்டும். அந்த முறையை இந்த அரசு கையாளவில்லை.

அதன் பிறகு கடைசியாக, இதை செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி, அதன் பிறகு இந்த சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் வைக்கலாம் என்ற கருத்தையும் நான் திமுக சார்பில் தெரிவித்தேன். அதையும் இந்த அரசு ஏற்காத காரணத்தால், இந்த சட்டத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிய நேரத்தில், அதனைக் கண்டித்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என்றார்.

இதையும் படியுங்கள் : வில்லேன்டா… இரண்டு கெட்டப்புகளுடன் சாமியுடன் மோதும் பாபி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்