ஷொராபுதீன் ஷேக் – துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 21 காவலர்கள் உட்பட 22 பேரை விடுதலை செய்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்பு பதவி வகித்தபோது, அவர் மீதும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும், குற்றச்சாட்டில் இருந்து அவர் கடந்த 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு மீதான விசாரணை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே. ஷர்மா, தனது தீர்ப்பை டிசம்பர் 21ஆம் தேதி வெளியிடுவேன் என்று அறிவித்தார். அதன்படி, இந்த வழக்கில் தனது தீர்ப்பை நீதிபதி ஷர்மா இன்று வெளியிட்டார்.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் ஷொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி 3 நாள்கள் கழித்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷொராபுதீன் நண்பரான துளசிராம் பிரஜாபதி 2006ஆம் ஆண்டு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர்கள் மூவரும் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பின்னர் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்த துப்பாக்கிச் சண்டை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி, அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் அமித் ஷா உள்ளிட்ட 16 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனத் தெரிவித்து, அவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து விட்டது. எஞ்சியுள்ள 22 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும், சாட்சிகளும், குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்று கூறி நீதிபதி எஸ்.ஜே. ஷர்மா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட 22 பேரில் 21 பேர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில இளநிலை காவல்துறை அதிகாரிகள் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here