மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது , பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய தேசியத் தலைவர் அமித்ஷா, குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தார். ஷொராபுதீன், போலி என்கவுன்டரால் அரசியல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அமித் ஷா பலன் அடைந்ததாக, முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்கூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமிதாப் தாக்கூர் முன்னாள் சிபிஐ அதிகாரி , 2005 ஆம் ஆண்டு நடந்த ஷோராபுதீன் ஷேக் மீதான போலி என்கவுண்டர் வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்தவர் இவர். போலி என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்த அமிதாப் தாக்கூர் கடந்த 2005-ஆம் ஆண்டு சிபிஐ-யால் நியமிக்கப்பட்டார்.

அமித் ஷாவுடன், பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் டிஐஜி டிஜி வன்சாரா, உதய்பூர் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் தினேஷ் அகமதாபாத் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன், அகமதாபாத் முன்னாள் துணை ஆணையாளர் அபய் சுதாசமா ஆகியோரும் அரசியல் ரீதியாக பலன் அடைந்தனர் என்றும் அமிதாப் தாக்கூர் கூறியுள்ளார்.

ஷொராபுதீனைக் கொல்ல கட்டுமான நிறுவன அதிபர்கள் பட்டேல் சகோதரர்களிடம் அமித்ஷா ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கினார். ஷொராபுதின் என்கவுன்டரால் அமித்ஷா, அரசியல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பயன் அடைந்தார். அதுபோல, குஜராத் தீவிரவாத தடுப்புப் படை முன்னாள் டிஐஜி வென்சராவுக்கு ரூ. 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம், மூன்று செட்டில்மென்டாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

03

2004-ஆம் ஆண்டு, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரின் அமைச்சரவையில் அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தார். நரேந்திர மோடியை கொல்ல திட்டம் தீட்டியதாக, ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி கவுசர்பாய் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, 2005-ஆம் ஆண்டு என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். காந்தி நகர் அருகே அவர்கள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் இணைந்து அவர்களை என்கவுன்டர் செய்தனர். லஸ்கர் இ தொய்பா அமைப்பின் தூண்டுதலின் பேரில், ஷொராபுதீனும் அவரது மனைவியும் மோடியைக் கொல்ல திட்டமிட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இந்த என்கவுன்டரை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரஜாபதி என்பவர். இவரும் ஷொராபுதீனும் மார்பிள் வியாபார விஷயமாகத் தொடர்பு வைத்திருந்தவர்கள். தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்த பிரஜாபதியும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட இந்த என்கவுன்டர் சம்பவங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. தனி நீதிமன்றம் அமைத்து, சிபிஐ, என்கவுன்டர்களின் உண்மைத்தன்மை குறித்துக் கண்டறிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பிலேயே அந்த வழக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அமித்ஷாவின் போன் அழைப்புகளை ஆய்வுசெய்ததில், டிஐஜி வென்சரா, எஸ்பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபூல் குமார் ஆகியோரிடம் அவர் தொடர்ச்சியாகப் பேசியிருப்பது தெரியவந்தது. ‘உள்துறை அமைச்சர் ஒருவர் நேரடியாக எஸ்.பி ரேங்க் அதிகாரிகளிடம் பேச வேண்டிய அவசியமில்லை. அமைச்சர் பதவியில் உள்ளவர், உள்துறைச் செயலர், தலைமைச் செயலாளர், சிறப்பு அதிரடிப் படைத் தலைவர்களிடம்தான் ஆலோசனை நடத்த வேண்டும். மாறாக, எஸ்.பி ரேங்கில் உள்ளவர்களிடம் பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது’ என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகித்தனர். இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா கைதுசெய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here