லஞ்ச வழக்கில் கைதான வேலூர் மாவட்டம் ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜன் மற்றும் எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேலூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.
இவர் அரசு மணல் குவாரியில் அனுமதி பெற்று மணல் அள்ளி விற்பனை செய்து வந்தார். தற்போது, அரசு மணல் குவாரிகள் இல்லாததால், செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆம்பூர் டிஎஸ்பி தனராஜன், உதவி ஆய்வாளர் லூர்து ஜெயராஜ் ஆகியோர் பன்னீர் செல்வத்திடம், 1.25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பன்னீர் செல்வம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனப் பவுடர் தடவிய நோட்டுகளை பன்னீர் செல்வத்திடம் கொடுத்து அனுப்பினர். இந்தப் பணத்தை அவர்கள் பெற்றபோது அவர்களைக் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் அவர்களை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஆலந்தூரில் டிஎஸ்பி தனராஜன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதனிடையே டிஎஸ்பி தன்ராஜன் மற்றும் எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் கைது செய்யப்பட்டதை அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் என அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். உடனே டி.எஸ்.பி அலுவலகத்திலிருந்த காவலர்கள் அவர்களை அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்