நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(வியாழக்கிழமை) காலை சென்னை கோட்டைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் 9 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர் :

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உதயமாகிறது. நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.15,000 லிருந்துரூ.16,000 ஆக உயர்த்தப்படும். சுதந்திரப் போராட்ட ஓய்வூதியதாரர்களின் வாரிகளுக்கான உதவித்தொகை ரூ.7500 லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது.