வேதாந்தா ரிசோர்சஸ் (Vedanta Resources) லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. லண்டன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து 33.5 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு திரும்ப பெற உள்ளதாக கூறியுள்ளது. இந்த நடவடிக்கை வேதாந்தா மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பெருநிறுவன கட்டமைப்பை எளிமையாக்குவதற்காகவே என்று வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலின் வோல்கான் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திடம் வேதாந்தா நிறுவனத்தின் 66.53 % பங்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு பங்கு 825 பென்ஸ் என்கிற வீதத்தில் பங்குகளை திரும்ப பெற உள்ளது. நிறுவனத்தின் மூன்று மாத வர்த்தகத்தின் அடிப்படையில் சராசரியிலிருந்து 14 % அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள வோல்கான் குழுமம் பங்குகளை விற்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளது. பங்குகளை திரும்ப பெறுவதற்கான சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை , லண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா பங்கு 646.8 பென்ஸ் விலையில் வர்த்தகம் முடிந்துள்ளது.

ஏற்கெனவே அறிவித்தபடி , முதலீட்டாளர்களுக்கு 41 சதவீத டிவிடெண்ட் வழங்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் முழுவதுமாக லண்டன் பங்குச் சந்தை பட்டியலிருந்து இருந்து வேதாந்தா வெளியேறும். லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறினாலும் வேதாந்தா நிறுவனம் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகமாகும். இந்த குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனமும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா .

வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடந்து சில வாரங்களுக்கு பிறகு லண்டன் பங்குச்சந்தையிலிருந்து வேதாந்தா குழுமம் வெளியேறுகிறது.

போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர் . வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர் . ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் உள்ள அதன் இயக்குனர் அனில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் அனில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தில் மனுவும் அளித்தனர்.

மேலும் வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here