அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்திக்கும் மேடையிலிருந்து ஒரு படம்.

(ஆகஸ்ட் 1, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

முதலில் முகநூலில் இந்த அமெரிக்கக் குறிப்புகள் வெளியானபோது ”கொஞ்சம் மது…நிறைய காதல்…” என்று தலைப்பிட்டிருந்தேன். இது கவனத்தை ஈர்க்கும் தலைப்பு என்று நண்பர்கள் தொலைபேசினார்கள். அகிம்சைக்கு அடிப்படையான அன்பையும் கலாச்சாரச் சுதந்திரத்தையும் குறிக்கும்விதமாக இதனைத் தலைப்பாகத் தேர்வு செய்தேன். ஆனால் மது அருந்துதல் பற்றிய கல்வி அவசியப்படுகிற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. தனிநபர் சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றி நிறைய உரையாடல்கள் இடம்பெற வேண்டியிருக்கிறது. எனவே வரலாற்று, அறிவியல் உணர்வு சார்ந்த புதிய தலைப்பு இந்த நீள்கட்டுரைக்குச் சூட்டப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு டிசம்பர், 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான அதிகாரி ஹீரா காம்போஜும் செய்தித் தொடர்பாளர் இளையபெருமாளும் தமிழ்நாட்டின் 13 செய்தியாளர்களை நேர்காணல் செய்தார்கள். அப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நான் தலைமைச் செய்தியாளராக இருந்தேன்; என்னைத் தவிர இன்னும் ஐந்துபேர் அமெரிக்காவில் வெளியுறவுக் கொள்கை மற்றும் மனித உரிமைக்கான செய்தியாளர் பயிற்சிக்குத் தேர்வானார்கள். ஆனந்த விகடனின் இணை ஆசிரியர் தேவன் சார்லஸ்; ரெட் பிக்ஸ் யுடியூப் செய்தி சேனலின் இயக்குநர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்; தினமலரின் கல்விச் செய்தியாளர் சதீஷ் குமார்; சன் செய்தி சேனலின் தொகுப்பாளர் நெல்சன் சேவியர்; தந்தி தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் சலீம். ஏப்ரல் 2014ல் அமெரிக்காவுக்கு ஒரு மாத கால பயணமாகப் புறப்பட்டபோது நான் தந்தி தொலைக்காட்சியில் ஆவணப்படங்களை வழங்கிக்கொண்டிருந்தேன். (எனது சில படங்களுக்கான சுட்டிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை பற்றி ஆரம்பம் முதலே விமர்சனபூர்வமான பார்வை கொண்ட செய்தியாளராகவே நான் இருக்கிறேன். அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் குண்டுமழை பொழிந்தபோது அல் ஜசீரா தொலைக்காட்சியின் அலுவலகம் தவிடுபொடியானது; ஒரு திருமண விருந்துக்குப் போய்க்கொண்டிருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்தார்கள்; அமெரிக்க மக்களுக்கு இது பிடிக்கவில்லை; ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். புதிய ஜனாதிபதியாக முதல் முறையாக கறுப்பினத்தவரான ஒபாமாவை தேர்வு செய்தார்கள். மக்களின் விருப்பத்தை முதன்மைப்படுத்தும் ஜனநாயகம் அமெரிக்காவில் சாகாமல் இருக்கிறது. அநீதிக்கு எதிராகப் பொங்குகிற, சுதந்திரத்தைக் காக்கிற அமெரிக்க மக்களை நேரடியாக அவர்களது மண்ணில் ஒரு மாத காலம் சந்தித்து உரையாடியதிலிருந்து மிக முக்கியமான சில தருணங்களை மட்டும் தொகுத்திருக்கிறேன். அமெரிக்க மக்களைப் போலவே இந்திய மக்களும் எப்போதும் மாற்றத்துக்குத் தயாரானவர்கள்தான் என்பதை கடந்த பதினைந்து வருட செய்தியறை வாழ்வு எனக்கு மறுபடியும் மறுபடியும் சொல்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எனது சுகதுக்கங்களில் பங்கேற்று வரும் வாழ்க்கைத்துணை சுபஸ்ரீ தேசிகனுக்கு இந்த நீள்கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.
பீர் முகமது,
சென்னை,
பிப்ரவரி 15, 2015

1.கொஞ்சம் மது….நிறைய காதல்…

ஸ்காட்ஸ்டேல். அரிசோனா மாநிலத்தின் அழகிய நகரம். வசந்த கால விடுமுறைக்கு அமெரிக்கா முழுவதுமிருந்து எளிய மக்கள் வந்து சங்கமிக்கும் மிதவெயில் நகரம். இரவு விடுதிகளும் கேளிக்கை சூதாட்ட கெசினோக்களும் கொண்ட பூமி இது. இங்கே வந்து சேர்ந்த இரவே ரம்மியமாக இருந்தது. ஒடிசாவின் அழகிய கோந்த் பழங்குடியினப் பெண்களின் மூக்குத்திகளைப்போன்ற அணிகலன்களை வெள்ளைப் பெண்களும் கறுப்புப் பெண்களும் பாரபட்சமில்லாமல் அணிந்திருக்கிறார்கள். வாடிக்கையாளருக்காக காத்திருந்த அந்தக் கறுப்புப் பெண்தான் வழி சொன்னாள். நண்பருடன் நடன விடுதிக்குள் சென்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னையில் பால்ஸ், ஸ்டார் இரவு விடுதிகளில் நண்பர் வளர்மதியுடன் சென்ற அதே நினைவுகளைக் கொண்டு வந்தது இந்த விடுதியும். தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள அரிசோனா மாநிலத்துக்கு பக்கத்திலுள்ள கொலராடோ மாநிலம் தனது நதியின் நீரைத் தருகிறது. அந்தக் கொலராடோ மாநிலம் ஆஸ்லே போன்ற பெண்களை இந்த விடுதிக்கு அனுப்பியிருக்கிறது. அவளுக்கு செல்லப்பெயர் ஜிஞ்சர். அப்பா கொலராடோவில் காவல் துறையில் பணிபுரிவதாகவும் அம்மா ஃபீனிக்ஸ் நகரத்தில் முடி திருத்தும் வேலை செய்வதாகவும் சொன்னாள். நடனத்திற்கு இருபது டாலர் பணம் வசூலிக்கிறாள். சமீபத்தில்தான் விடுதியில் காவலாளியாக இருக்கும் மெக்சிகோ நாட்டு இளைஞரைக் காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்திருக்கிறாள்; மோதிரத்தைக் காட்டினாள். எல்லா விடுதிப் பெண்களும் பாலியல் தொழில் செய்வதில்லை; தன்னைப் போன்ற விதிவிலக்குகள் நிறையவே உண்டு என்றாள். பள்ளி நாட்களிலேயே கற்ற நடனமும் அம்மா இந்த சுற்றுலா நகருக்கு முடி திருத்தும் வேலைக்காக வந்ததும் தனக்கு இந்த வேலைவாய்ப்பை உருவாக்கியிருப்பதாய்க் கூறினாள்.

chapter1
துப்பாக்கிக் கடைகளும் வட்டிக் கடைகளும் நிறைந்த மாநிலம் அரிசோனா.

அடுத்த நாள் இரவு ஸ்காட்ஸ்டேலின் மையப்பகுதியில் உள்ள “பாப்பி சுலோ” (இனிய தகப்பன்) விடுதியில் கொஞ்சம் மது அருந்தினோம். அங்குதான் லாரன் தனது கதையைச் சொன்னாள். லாரனும் ஜேம்ஸும் காதலாகி கசிந்துருகி மூன்றாண்டுகள் ஆகிறது. லாரனின் ஆசையெல்லாம் ஜேம்ஸின் குழந்தையை சீக்கிரம் பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான். முப்பத்தாறு வயதாகிவிட்டது. “இரண்டு முறை முயற்சி செய்து தோற்றுவிட்டோம். அடுத்த முறை தப்பாது” என்று நம்பிக்கையோடு சொல்லும் லாரன் ஒரு ஃபேஷன் டிசைனர். ஹாலிவுட்டில் சில காலம் பணியாற்றிய பின்னர் சொந்த ஊரான ஸ்காட்ஸ்டேலுக்கு வந்துவிட்டார். எல்லை மாகாணமான அரிசோனாவில் மெக்சிகோவிலிருந்து வரும் பணியாளர்களைப் பற்றிய வெறுப்பு இருக்கிறது. லாரனிடம் அந்த வெறுப்பைப் பார்க்க முடிந்தது. அந்த வெறுப்பு தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. மிகக் குறைவான பூர்வகுடி மக்களைத் தவிர, அமெரிக்க தேசம் முழுவதுமே பிற தேசங்களிலிருந்து வந்த மக்களின் அவியலாகத்தான் இருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு மெக்சிகோ மக்களும், லத்தீன் அமெரிக்க்கக் கண்டத்து மக்களும் பெரும் நன்மை செய்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளம் இப்போது சுமார் எட்டு டாலராக இருக்கிறது. இதை குறைந்தபட்சம் பன்னிரண்டு டாலராக உயர்த்த அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா பகீரத பிரயத்தனம் செய்கிறார். இதற்கு தொழிலதிபர்கள் ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை.

chapter1a
ஸ்காட்ஸ்டேலில் ஒரு செக்ஸ் கடையில் வரையப்பட்ட ஓவியம்.

2. எட்வர்ட் ஸ்னோடனுக்கு வந்தனம்.

ஸ்காட்ஸ்டேலில் சப்பாரல் விடுதிக்கு வருவதற்கு முன்பு ஒரு வாரம் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் இருந்தோம். அது வாஷிங்டனின் வசந்தகாலம். செர்ரி மலர்கள் எங்கும் பூத்துக்குலுங்கின. காதலர்கள் நகரின் பூங்காக்களில் சந்தித்து ஆரத்தழுவி முத்தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். செர்ரி மலர்த் திருவிழாவைக் கொண்டாட அமெரிக்க தேசம் முழுவதுமிருந்து மக்கள் தலைநகருக்கு வந்திருந்தார்கள். செர்ரி மலர்களும் மக்கள் கூட்டமும் எங்களை வசீகரித்ததுபோலவே ஊடகவியல் பேராசிரியர் ஒருவரது உரையும் எங்களை ஈர்த்தது. வாஷிங்டனில் பேராசிரியர் சார்லஸ் செல்ஃப் எங்களிடம் ஊடகவியல் பற்றி பேசினார். ”மத சுதந்திரத்திலோ, ஊடக சுதந்திரத்திலோ, பேச்சு சுதந்திரத்திலோ, மக்கள் ஒன்றுகூடும் சுதந்திரத்திலோ தலையிடும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றாது” என்று அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் சொல்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தின் இந்த அம்சம் அவ்வப்போது நாடாளுமன்றத்தின் குறுக்கீடுக்கு ஆளானாலும், உச்ச நீதிமன்றம் பெருமளவுக்கு இந்த அம்சத்தைக் காப்பாற்றி வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம்கூட சில சமயங்களில் அரசியல் சாசனம் வழங்கிய சுதந்திரங்களைப் பலவீனப்படுத்தும் தீர்ப்புகளை வழங்குகிறது. “பெரும் வணிக நிறுவனங்களையும் மக்களாகக் கருத வேண்டும்” என்ற பொருள்படும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு உதாரணம். தனிநபர்களே பெரும் வணிக நிறுவனங்களை உருவாக்குகிறார்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இது தத்துவார்த்தரீதியாகச் சரியாகத் தோன்றும். ஆனால் அதிகாரம் இல்லாத வஞ்சிக்கப்படும் மக்களின் நோக்கில் பார்த்தால், இதுபோன்ற புரிதல்கள் எளிய மக்களின் நீதி, நியாயத்திற்கான தேடலை இன்னும் இன்னும் கடினமாக்கியிருக்கின்றன. “பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது ஊடக சுதந்திரம். ஒவ்வொரு அமெரிக்க பிரஜையின் ரத்தத்திலும் ஊறிய விஷயமாக பேச்சு சுதந்திரம் இருக்கிறது. அதனால்தான் ஊடக சுதந்திரத்தில் அரசு தலையிடாத அளவுக்கு மக்களே அரணாக இருக்கிறார்கள்” என்றார் சார்லஸ் செல்ஃப். அமெரிக்க அரசு தனது ரகசியத்தன்மையை விஸ்தரித்து வரும் நேரத்தில், அமெரிக்காவின் முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடன், மக்களை வேவு பார்க்கும் அரசின் திட்டத்தை ஆதாரப்பூர்வமாக அம்பலமாக்கினார். தேசிய பாதுகாப்பு முகமை எனப்படும் அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் வேவு பார்க்கும் திட்டம், சொந்த நாட்டு மக்களையும் நட்பு நாடுகளையும்கூட விட்டு வைக்கவில்லை என்ற ஸ்னோடனின் சாட்சியம் அமெரிக்க மக்களிடமும் அமெரிக்காவின் நட்பு நாடுகளிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கான ஆதாரங்களை பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழுடன் இணைந்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும் வெளியிட்டது. இதுதான் சமகால வரலாற்றில் ஊடக சுதந்திரத்தின் உச்சபட்ச வெளிப்பாடு. இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக தி கார்டியன் நாளிதழுக்கும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கும் 2013 ஆம் ஆண்டின் பொது சேவை ஊடகவியலுக்கான புலிட்சர் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. நியூயார்க் டைம்ஸின் ஆசிரியர் டீன் பேக்வெட் சமீபத்தில் எட்வர்ட் ஸ்னோடனின் ஆதாரங்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு பற்றிய மிகப்பெரிய செய்தியை தாங்கள் கோட்டை விட்டதற்காக மனம் வருந்தி எழுதியிருந்தார். இந்தியாவில் இதற்கு இணையான புலனாய்வு செய்தி ஆஷிஷ் கேதன் அவர்களால் வெளிக்கொணரப்பட்டது. அவருடைய புலனாய்வு, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசுக்குப் பங்கு இருந்ததை அம்பலப்படுத்தியது. “எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்க மக்களிடையே தேசிய பாதுகாப்பின் பெயரில் தனிநபர் சுதந்திரம் மீறப்படலாமா என்கிற பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார். வரலாறு அவரிடம் கருணையாக இருக்கும்” என்று ஊடகவியல் பேராசிரியர் சார்லஸ் செல்ஃப் எங்களிடம் சொன்னார். ஸ்னோடனின் உண்மை அறிவித்தலை அமெரிக்க மக்களும் வரலாறும் கருணையோடு நோக்குவதை அவர் பல வழிகளில் விளக்கினார். “ஒவ்வொரு அமெரிக்கனின் டிஎன்ஏவிலும் ஊடக சுதந்திரம் பற்றிய கருத்து ஆழமாகப் பதிந்திருக்கிறது. எனவே ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.

Former U.S. spy agency contractor Edward Snowden is interviewed
எட்வர்ட் ஸ்னோடன்

வாஷிங்டனில் பேச்சால் இன்னொரு நபர் எங்களைக் கவர்ந்தார். லெபனானிய அமெரிக்கர் அக்ரம் இலியாஸின் பேச்சு அமெரிக்க அரசியல் சாசனத்தைப் பற்றியதாக இருந்தது. அமெரிக்க மாநிலங்கள் எப்படி தன்னாட்சி அதிகாரம் படைத்தவையாக இருக்கின்றன, கூட்டாட்சி என்பது யதார்த்தமானது எப்படி என்பதை அவர் அரசியல் சாசனத்தின் அம்சங்களைக்கொண்டே விவரித்தார். இலியாஸ் சொன்னது இது: “வெறுப்புப் பேச்சுகள் நிறைந்த இந்திய சூழலைப் போலவே அமெரிக்காவிலும் வெறுப்புப் பேச்சுகள் நிறைந்திருக்கின்றன.” வெறுப்புப் பேச்சுகளுக்கு இரண்டே அடிப்படைகள் என்று அவர் விளக்கமளித்தார். “அறியாமையும் பயமும்தான் வெறுப்புப் பேச்சுகளுக்குக் காரணம். யாரைப் பற்றி, எதைப்பற்றி வெறுப்பாளர்கள் பேசுகிறார்களோ, அவரைப் பற்றி, அதைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்; மற்றதைப் பற்றிய, மற்றவர்களைப் பற்றிய பயமும் வெறுப்புப் பேச்சுகளுக்குக் காரணம்” என்றார் அவர். பேச்சு சுதந்திரம் கட்டற்றது என்பதால் வெறுப்புப் பேச்சுகளைத் தடுப்பதற்கு வழிகள் குறைவு என்று அவர் சுட்டிக் காட்டினார். “இருந்தாலும் பொறுப்புள்ள குடிமக்கள் ஒன்றுகூடி, வெறுப்புப் பேச்சுகளை பேசுகிறவர்களைத் தேடிச் சென்று பொறுப்பாகப் பேசும்படி சொல்ல முடியும்” என்று அவர் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட குறுக்கீடும் மக்கள் ஒன்றுகூடுவதற்கு அமெரிக்க அரசியல் சாசனம் வழங்கும் உரிமையிலிருந்து பிறக்கிறது. ”வெறுப்புப் பேச்சுக்கு அணைபோடுவதாக மக்கள் ஒன்றுகூடும் சுதந்திரம் இருக்கிறது. ஃப்ளோரிடாவில் கிறிஸ்தவப் பாதிரியார், திருக் குர் ஆனை எரித்தபோது சிவில் சமூகக் குழுக்கள் அவரை சந்தித்துப்பேசி அந்தச் செயலுக்கு முடிவு கட்டின. மக்களின் எதிர்ப்பே அவரை முடக்கியது” என்றார் அவர்.

3. உன்னை விற்கக் கற்றுக்கொள்.

chapter3
வாஷிங்டனின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக வளாகத்தில் இசைக்கும் மாணவர்கள்

அலெக்சாந்தரா க்ரூஸ். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் முதுநிலை மாணவி. ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவள். அட்லாண்டா பக்கத்தில் கிராமத்திலிருந்து வந்த அவள் வாஷிங்டன் நாளிதழ் ஒன்றுக்கு படம் எடுத்துக்கொடுப்பதில் கொஞ்சம் சம்பாதிக்கிறாள்; அண்மையில் தேசிய பேஸ்பால் போட்டியில் நிறைய படங்கள் எடுத்தது பற்றிச் சொன்னாள். தனது பல்கலைக்கழகத்திற்கு வருகிறவர்களுக்கு அதனை விவரித்துச் சொல்கிற வேலையையும் கூடுதலாகச் செய்கிறாள். ”ஊடக வேலை ஒன்றும் பணம் கொழிக்கிற வேலை இல்லை; இப்போதே எனது திறமைகளை சம்பாதிக்கத் தக்க வகையில் மேம்படுத்திக் கொள்கிறேன்” என்கிறாள். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பு எப்படி இருக்கிறது, தங்கும் வசதி எப்படி இருக்கிறது, கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகும் என்பதையெல்லாம் சுமார் ஒன்றரை மணி நேர பல்கலைக்கழக வளாக சுற்றுலாவில் விவரித்து விடுகிறாள் அவள். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரை நிகழ்த்திய பொது விவகாரப் படிப்புத் துறையின் பெரிய அரங்கத்தைக் காட்டினாள். அந்தச் சுற்றுலாவின்போது இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொன்னாள் அவள். வெள்ளை மாளிகை அங்கிருந்து கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்கும்போது நிறைய இளைஞர்கள், இளம்பெண்களைப் பார்க்கிறீர்களே, அதுவெல்லாம் எங்களைப் போன்ற மாணவர்கள்தான் என்றாள். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச விவகாரப் படிப்பு, வணிகம் போன்றவற்றுக்கான வளாகங்களும் வாஷிங்டனில்தான் இருக்கின்றன. எங்களது வழிகாட்டிகளில் ஒருவரான கேத்தரின் பிளேர், சர்வதேச விவகாரப் படிப்பை அங்குதான் பயின்றதாகச் சொன்னார்.

தங்களது உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏராளம் நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களில் சிலரிடம் அவர்களது உழைப்பை விவரிக்கச் சொன்னால் வார்த்தை கிடைக்காமல் தடுமாறுவார்கள். தங்களை வெளிப்படுத்த உதவாத கல்வியை நமது சமூகம் வழங்குகிறதா என்ற கேள்வியை அடிக்கடி எழுப்புகிற அனுபவம் இது. அலெக்சாந்தரா குரூஸிடம் வார்த்தைகளுக்கான தடுமாற்றம் இல்லை. தன்னை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு இருக்கிறது. தரமான உயர் கல்வியை வழங்குகிற அரசுப் பல்கலைக்கழகங்களும் மெக்டொனால்ட் உணவகங்களைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற பொது நூலகங்களும் அறிவை எல்லோருக்குமானதாக மாற்றியிருக்கின்றன. அறிவைப் பெறுதலுக்கான வழி என்பது இடைஞ்சல்களும் தடங்கல்களும் குறைவான நெடுஞ்சாலையாக இருக்கிறது. அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் வால்டர் கிரான்கைட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிஸத்தில் ஊடகவியல் படிப்புகளுக்கு சராசரி ஆண்டுக் கட்டணம் இருபதாயிரம் டாலர் என்று சொன்னார்கள்; அது ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் வருகிறது. டிஜிட்டல் ஊடகவியல், வணிக ஊடகவியல், விளையாட்டு ஊடகவியல் ஆகியவை மிகவும் விரும்பி எடுக்கப்படுகிற படிப்புகளாக இருக்கின்றன. இதுபோன்ற பிற அமெரிக்க அரசு பல்கலைக்கழகங்களில் இங்குபோல நூறு சதவீத வேலை உத்தரவாதம் இல்லை. இந்தியாவைப்போலவே ஊடகவியல் என்பது உண்மையை உலகிற்கு சொல்லும் தனிநபர் விருப்பத்தால் உந்தப்பட்டு தேர்வு செய்யப்படுகிற பாடமாகவே இருக்கிறது. அச்சு, இணையம், ஒளிப்படம், வீடியோ என எல்லா வகை வெளிப்பாடுகளிலும் ஒரே சமயத்தில் திறன் பெறுவதில் ஊடகவியல் மாணவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். சென்னையிலுள்ள ஏசியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிஸத்தில் இருப்பதைவிட அங்குள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் ஊடகவியல் துறைகளில் வசதிகள் அதிகம்.

4. ‘ஒபாமா ஒரு சமதர்மவாதி’

obama
ஒபாமா மனைவி மிஷெலுடன்

அமெரிக்க பாதுகாப்புத் துறையில் வேலை செய்கிறாள் அவள். கறுப்பினப் பெண். தன் குழந்தையோடு சனி, ஞாயிறு விடுமுறையில் நியூயார்க் வந்துவிட்டு பேருந்தில் வாஷிங்டனுக்கு திரும்பச் செல்கிறாள். தன்னை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமாவின் தீவிர ஆதரவாளர் என்று பெருமையாகச் சொல்கிறாள். ”வரிச்சுமை அதிகமாகிறது. மத்தியதர வர்க்கம் பாதிக்கப்படுகிறது” என்கிற புலம்பலை நியூயார்க்கில் அதிகம் கேட்க முடிந்தது என்று நான் சொன்னேன். ”மெல்ல மெல்ல ஒபாமா தான் சொன்னதைச் செய்து வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்கு மற்றவர்கள் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சாதாரண வறிய மக்களுக்கும் மருத்துவ சேவைக்கான உத்தரவாதத்தை வழங்க ஒபாமா அறிமுகம் செய்த காப்பீட்டுத் திட்டம் அவசியமான ஒன்று” என்றாள். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எண்ணிக்கை பன்னிரண்டு சதவீதமே. கறுப்பினத்தில் பிறந்த ஒபாமா, அமெரிக்க தேசத்தின் கனவுகளை ஒன்றுபடச் செய்தது சாமானிய விஷயமில்லை. பலசமய, பன்மைக் கலாச்சாரப் பின்னணி கொண்ட வறிய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டதில் ஆரம்பித்திருக்கிறது அவரது வெற்றி. 63 சதவீதம் வெள்ளையர்கள், 17 சதவீதம் ஸ்பானிஷ் பேசும் ஹிஸ்பானியர்கள், 12.3 சதவீதம் கறுப்பர்கள், 2.4 சதவீதம் பன்மைக் கலாச்சார அமெரிக்கர்கள், ஐந்து சதவீதம் ஆசிய மக்களைக்கொண்ட தேசத்தில் எல்லோருக்குமான ஒன்றுபட்ட கனவைக் கட்டியெழுப்பியதுதான் ஒபாமாவின் சாமர்த்தியம்.
”ஒபாமா 2008 ஆம் ஆண்டு முதலில் ஜனாதிபதியானபோது அவர் இந்த நாட்டை ஒரு சமதர்மக் குடியரசாக மாற்றப் போகிறார் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது” என்று அரிசோனாவில் சந்தித்த லாரன் சொன்னாள். எல்லா பொது சேவைகளையும் அரசுடமையாக்குவதுதான் சமதர்மம் அல்லது சோசலிஷம் என்று வரையறுக்கப்படுகிறது. ஆனால் அப்படி எதனையும் செய்யாத ஒபாமா மீது வெறுப்பை உருவாக்குவதற்காக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட பிரச்சாரம்தான் “ஒபாமா ஒரு சமதர்மவாதி; தனியுடமைக்கு அச்சுறுத்தலான சக்தி” என்ற கோஷம். ஸ்காட்ஸ்டேல் டேஸ் இன் விடுதியின் உரிமையாளர் சீஸர், ஒபாமாவால் தங்களைப் போன்ற தொழிலதிபர்களுக்கு லாபம் இல்லை என்று சொன்னார். நியூயார்க்கில் ஹேம்ப்டன் இன் விடுதி அறை உதவியாளராக இருக்கும் மேரி, ஒபாமாவின் அரசு ஏழை எளிய மக்களுக்கு அதிகமதிகம் உதவி செய்வதாகச் சொன்னார். தன்னைப்போன்ற மத்தியதர வர்க்கத்து தாய்மார்கள் சிறந்த கல்வியை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்கிறார் மேரி. அரசுப் பள்ளிகளே சிறந்த கல்வியைத் தருவதாகவும் ஏழை-பணக்காரர் பேதம் இல்லாமல் அரசுப் பள்ளிகளை நாடிச் செல்வதாகவும் அவர் கூறினார். அரசுப் பள்ளிகள், மாநில அரசு வழங்கும் நிதி மற்றும் உள்ளூர் மக்கள் வழங்கும் சொத்து வரி ஆகியவற்றைக் கொண்டு நடத்தப்படுகிறது. உள்ளூர் மக்கள் வழங்கும் சொத்து வரி அதிகமாக இருக்கும் பகுதிகளில் பள்ளிக்கல்வியின் தரம் அதிகமாக இருப்பதாக நான் சந்தித்த அமெரிக்க மக்கள் சொன்னார்கள்.

chapter4
அரசின் பொதுத் தபால் துறை ஊழியர் இவர். இவரைப்போன்றவர்கள் மக்கள் நலம் விரும்பும் ஒபாமா அரசை ஆதரிக்கிறார்கள்.

5. பசியும் உணவு வங்கிகளும்

chapter5a
சின்சின்னாட்டி நகரில் பிச்சை கேட்டு நிற்கிற இவரைப்போல ஆயிரக்கணக்கானோர் ஏதுமின்றி இருக்கிறார்கள்.

பிட்ஸ்பர்கில் உறவினர் சம்பத் அவர்களின் மகள் ப்ரீத்தாவை சந்திக்கச் சென்றபோது அவர்கள் வீட்டிலுள்ள உணவில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக தனியே எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள். அண்டை வீட்டாரிடமும் அதுபோல உணவை சேகரம் செய்து ஊரிலுள்ள உணவு வங்கியில் ஒப்படைக்கும் வேலையை ப்ரீத்தாவும் கணவர் பத்மநாபனும் சேர்ந்தே செய்கிறார்கள். விஸ்கான்ஸின் மாநிலம் மேடிசனில் செகண்ட் ஹார்வெஸ்ட் உணவு வங்கியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தன்னார்வத் தொண்டு செய்கிற வாய்ப்பு கிடைத்தது. வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை சமுதாயத் தொண்டு செய்ய வேண்டும் என்ற கரிசனத்தோடு ஏராளம் மக்கள் இந்த உணவு வங்கிக்கு வந்து உணவுப் பொருளைக் கொடுப்பதோடு இங்குள்ள தினசரி வேலைகளில் ஒத்தாசையும் செய்துவிட்டுப் போகிறார்கள். விஸ்கான்ஸின் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை இந்த உணவு வங்கி பூர்த்தி செய்கிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 25,000 கிலோ எடை உணவுப்பொருள்கள் இங்கிருந்து வினியோகமாகிறது. சில மாதங்களில் இங்கிருந்து செல்லும் நான்கு லட்சம் கிலோ உணவுப்பொருள்கள் எளிய மக்களின் பசியைப் போக்குகிறது.

அமெரிக்காவின் ஜனத்தொகை சுமார் 32 கோடி. இதில் சுமார் ஐந்து கோடி பேர் (சரியாகச் சொன்னால் 4.9 கோடி பேர்) மூன்று வேளையும் வயிறார சாப்பிடுவதற்கு இயலாதவர்களாக இருக்கிறார்கள். இதில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள். உணவுப் பற்றாக்குறையால், பல இரவுகளில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிவிட்டு பெற்றோர் பசியோடு தூங்கச் செல்கிறார்கள். இந்த உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அமெரிக்க அரசு 4.65 கோடி பேருக்கு உணவு உதவித்தொகை வழங்குகிறது. தனிநபருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 189 டாலர் உணவு உதவி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பருக்கு முன்பு இது 200 டாலர் உதவியாக இருந்தது. உணவுப்பொருள்களின் விலை அதிகமாகியுள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் இப்படி உதவித்தொகையை குறைத்தது, ஏழை எளிய மக்களின் விமர்சனத்துக்கு ஆளானது. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 90 டாலர் வரை உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசுக்கு 8.7 பில்லியன் டாலர் இந்த நிதியாண்டில் மிச்சமாகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அமெரிக்க அரசு தந்த விளக்கம் பசியால் வாடும் மக்களை சமாதானப்படுத்த போதுமானதாக இல்லை. இன்னொருபுறம், வருடந்தோறும் 6,000 கோடி கிலோ உணவுப்பொருள்கள் அமெரிக்க தேசம் முழுவதும் வீணடிக்கப்படுகின்றன. இந்த உணவுப் பொருள்களை சரியாக சேகரம் செய்து பாதுகாத்து, வினியோகிக்கும் அளவுக்கு உணவு வங்கிகள் போதுமானதாக இல்லை.

6. எல்லோருக்குமான நகரங்கள்

chapter6
சின்சின்னட்டி பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவுடன் தமிழ்நாட்டின் ஆறு தமிழ்ச் செய்தியாளர்களும் எடுத்த படம்.

வாஷிங்டனின் நியூஸியத்தில் மதமும் ஊடகவியலும் பற்றிய கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. மதத்தின் பெயரால் அரசுகள் அடக்குமுறையை ஏவுவது பற்றி டென்மார்க், சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் செய்தியாளர்கள் பேசினார்கள். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் வாக்கு அடிப்படையில் எல்லோருக்குமான ஓர் இறைவனை உணர்தல், கடவுளின் பெயரால் அரசுகள் செய்யும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு சவால் விடும் என்று கருத்து தெரிவித்தேன். கடவுளின் பெயரால் மக்களைப் பிரிப்பதில்தான் அடக்குமுறை தொடங்குகிறது என்று சொன்னதை கருத்தரங்கின் நடுவர் கேத்ரினா ஆமோதித்தார். ”கடவுளைப் பொதுவாக்குவோம்; உலகில் மதவெறி ஒழிப்போம்” என்கிற கட்டுரையை எழுதுவதற்கு இந்தக் கருத்தரங்கு தூண்டுதலாக இருந்தது. இந்தக் கருத்தரங்கில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் இருவர் பயன்படுத்தப்பட்டார்கள். கருத்தரங்கிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள். காது கேளாத, வாய் பேசாத எவ்வளவுபேர் அங்கு இருந்தார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்களுக்கும் சேர்த்து கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் யோசித்திருந்தது சிறப்பு. வாஷிங்டன் மெட்ரோவில் மாலை நான்கு முதல் ஏழு மணி வரை நெரிசல் நேரம். ஏழு மணிக்கு மேல் உங்களது சைக்கிளுடன் இந்த மெட்ரோக்களில் பயணம் செய்யலாம். சைக்கிள்களை உள்ளடக்கி பெருநகரப் போக்குவரத்தை நாமும் திட்டமிட வேண்டும். அறிவை எல்லோருக்கும் பகிர்கிற அருங்காட்சியகங்களும் பொது நூலகங்களும் அரசுப் பல்கலைக்கழகங்களும் மிகைத்திருப்பது தொடர்ந்து அமெரிக்காவை ஓர் அறிவுச் சமூகமாக வைத்திருக்கும் என்று தோன்றியது. அறிவை ஜனநாயகப்படுத்தியதில் அமெரிக்கச் சமூகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்லது நிறவெறி பிடித்தவர்கள் இதனை மாற்றிவிடாதிருக்க மக்கள் இயக்கங்கள் அமெரிக்காவிலும் அவசியமாகியுள்ளன.

சென்னையின் நுரையீரல் பகுதிகளில் ஒன்றான கிண்டி தேசிய பூங்காவைக் காப்பாற்றுவதற்கு இப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் போன்றவர்கள் பாடுபடுகிறார்கள். இதேபோன்ற ஒரு மக்கள் இயக்கத்தை பிட்ஸ்பர்கில் காண முடிந்தது. பிட்ஸ்பர்கின் கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் ஒரு அறிவியல் கதைப்படத்தின் திரையிடலின்போது உள்ளூர் மக்கள் தங்கள் பூங்காக்களை புதிய வளர்ச்சித் திட்டங்களிலிருந்து பாதுகாப்பதற்காக கையெழுத்துக்களை சேகரித்தார்கள். நியூயார்க்கில் வறியவர்களின் பசியைப்போக்குவதற்கு ஒரு மக்கள் இயக்கமே செயல்பட்டு வருகிறது. நமது சென்னை கொடுங்கையூரைப் போலவே, நியூயார்க் நகரத்தின் வறியவர்கள் சிலர் குப்பையிலிருந்து உணவைத் தேடி சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் ஒரு டாலருக்கு பீட்சா விற்கும் கடைகள் இருக்கின்றன. சாலையோர உணவகங்களும் கணிசமாக உள்ளன. இவை ஓரளவுக்கு நியூயார்க் பெருநகரத்து வறியவர்களுக்கு பசி போக்க உதவுகின்றன. நடைபாதை வியாபாரிகளுக்கு நியூயார்க்கில் நிறையவே வியாபாரம் ஆகிறது. பிற கடைகளில் பத்து, பதினைந்து டாலருக்குக் கிடைக்கும் பரிசுப் பொருள்களை நடைபாதை வியாபாரிகள் மூன்று முதல் ஐந்து டாலருக்கு விற்கிறார்கள். நியூயார்க்கின் பங்குச்சந்தை தெருவான வால் ஸ்ட்ரீட்டுக்கு அருகிலும் நடைபாதை வியாபாரிகளைப் பார்க்க முடிந்தது. சுற்றுலாப் பயணிகள்தான் இவர்களுக்கு பெரும் வருவாய் ஆதாரம். பெருநகரங்கள் எல்லோரையும் உள்ளடக்கியதாக, எல்லோரும் வாழத்தக்கதாக இருக்க வேண்டும் என்ற மக்கள் இயக்கம் ஒவ்வொரு ஊருக்கும் அவசியமாகியுள்ள காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

7. உனக்கும் எனக்குமான செய்தி

chapter7
உள்ளூர் செய்தித் தொலைக்காட்சிகள் மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றன. சைக்கிள்களுக்குத் தனி பாதை வேண்டும் என்று குரல் கொடுக்கும் பெண்.

அமெரிக்காவிலும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் உள்ளூர் செய்தித் தாள்களும்தான் மக்களின் பேராதரவைப் பெற்ற ஊடகங்களாக இருக்கின்றன. இப்போது இணைய ஊடகங்கள்கூட உள்ளூர் செய்திகளில் அதிகமதிகம் கவனம் குவிக்கத் தொடங்கிவிட்டார்கள். 58 சதவீதம் அமெரிக்க மக்களிடம் ஸ்மார்ட்ஃபோன் என ப்படும் அதிநவீன செல்பேசிகள் இருக்கின்றன. செல்பேசியிலேயே செய்தியை வழங்குவது, அதனை லாபகரமாக்குவது என்பதுதான் ஊடகவியல் தொழிலில் அடுத்த பெரும் சவாலாக இருக்கிறது. அமெரிக்காவில் விளம்பரத்துக்காக செலவிடப்படும் பணத்தில் பெரும்பகுதி இன்னமும் நாளிதழ்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்தான் செல்கிறது. ஆனால் இந்தப் போட்டியில் இணைய ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. நாளிதழ்களுக்குத் தங்களது இணைய வடிவம் மூலம் வருகிற வருவாய் அச்சு வடிவம் மூலம் வரும் வருவாய்க்கு சமமானதாகக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை. உள்ளூர் நாளிதழ்கள் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. ஒரு நகரில் இறந்துபோனவர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள், அனேகமான உறவினர்களின் பெயர்களைத் தாங்கி வருகின்றன. பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. இணைய ஊடகங்களுக்கும் அச்சு நாளிதழ்களுக்குமான போட்டியே, யாரால் அதிகமதிகம் மக்களுடைய அன்றாட வாழ்வைத் தொட முடிகிறது என்பதைப் பற்றியதுதான். இணையத்தில் எவரிபிளாக், பேட்ச் போன்றவை ஒவ்வொரு ஊரின் ஒவ்வொரு தெருவிலும் உருவாகும் செய்தியை உள்ளூர் மக்களைக்கொண்டே வழங்க முனைகின்றன. மக்களைச் செய்தியில் பங்கேற்பவர்களாக மாற்றுவதன் மூலமாக ஊடகங்கள் தங்களது தேவையை, இன்றைய பொருத்தப்பாட்டை உறுதி செய்கின்றன.

chapter7a
வீடற்றவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளூர் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.

மற்ற தொழில்களைப்போலவே மக்களுக்குத் தேவையானதாக, பயன்படுவதாக இருந்தால்தான் இந்த தொழிலில் நிலைத்திருக்க முடியும். அரிசோனா மாநில அரசுப் பல்கலைக்கழகத்தில் வால்டர் கிரான்கைட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் மாணவர்களிடம் பேசியபோது, பெரும்பாலான மாணவர்கள் இந்தப் புரிதலோடு இருந்தார்கள். ஒரு செய்தி தொழில்முனைவோராக மாறுவது எப்படி என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்கவென்று ஒரு பேராசிரியர் பிரத்யேகமாக அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கிறார். பெரிய பணவசதி இல்லாத ஊடகவியல் அனுபவசாலிகள்கூட செய்தி தொழில்முனைவோராக முடியும் என்கிற சாத்தியப்பாடு எல்லா சமவாய்ப்பு ஜனநாயகத்திலும்- இப்போது இந்தியாவிலும்- உருவாகியுள்ளது. செய்தி மீதான தணியாத காதலும் அதிகமதிகம் மக்களின் வாழ்வைத் தொட வேண்டும் என்ற உத்வேகமும் ஒருவரை செய்தி தொழில்முனைவோராக மாற்றுவதற்கான அடிப்படைகள். ஊடகவியல் பட்டதாரிகளின் புதிய தொழில் முயற்சிக்குத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்ட பல்கலைக்கழக வழிகாட்டி பேராசிரியர் உதவுகிறார். அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் ஊடக அமைப்புகளுக்கும் தனியார் முதலீட்டாளர்களுக்கும் இணக்கமான ஒருங்கிணைவு இருக்கிறது. இளையோருக்கு சமவாய்ப்புச் சூழலை ஏற்படுத்தித் தருவதற்கான முயற்சிகள் பல்கலைக்கழக வளாகங்களிலேயே தொடங்குகின்றன. எனது ஊடகவியல் ஆசான் டாக்டர் கோபாலன் ரவீந்திரன், மாணவர்களாக இருந்த சமயத்திலேயே இதுபோன்ற சமவாய்ப்புச் சூழலை உருவாக்கித்தர முனைந்தார். அதுவே என்னையும் எனது சக மாணவர்கள் பலரையும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஊடகவியலாளர்களாக மாற்றியது.

8. கல்வி வளாகங்களில் ஐந்தில் ஒரு பெண் தாக்கப்படுகிறாள்.

chapter8
chapter8a
கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தின் பாலியல் தாக்குதல் தடுப்பு ஆலோசகரின் அறையின் முன்னுள்ள குறிப்பு; ஆலோசகர்களில் ஒருவரான ஆனி மன்றல்

2014 ஏப்ரல் மாத Ms இதழின் அட்டைப்படக் கட்டுரையே அமெரிக்காவின் கல்வி வளாகங்களில் ஐந்தில் ஒரு பெண், ஒரு முறையேனும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது பற்றியதுதான். ஆண்ட்ரியா பைனோ, ஆனி கிளார்க் ஆகிய இரு பெண்கள் இதுபோல தாக்குதலுக்குள்ளானவர்கள். தங்களைப்போல பிற மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கல்வி வளாகங்களில் பாலியல் தாக்குதலுக்கு எதிராக தொடர்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நாங்கள் சென்று பார்த்த சின்சின்னாட்டி பல்கலைக்கழகத்தில் ஏழு மாணவிகளில் ஒருத்தி மீது பாலியல் தாக்குதல் நடப்பதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியைகள் எங்களிடம் சொன்னார்கள். பாலியல் தாக்குதல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரவு நேரங்களில் சின்சின்னாட்டி பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். நியூயார்க்கில் பிரேக்த்ரூ டிவி அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம். பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் கடைசி ஆளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டு வரும் பெண்களின் குழு இது. தவறு இழைப்பவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் இருப்பதுதான் கல்லூரிகளில் அதிகமாக பெண்கள் பாலியல்ரீதியாக தாக்கப்படுவதற்குக் காரணம் என்று இந்தக் குழுவினர் சொன்னார்கள். கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் பாலியல் தாக்குதல் தடுப்பு ஆலோசகராக இருக்கும் ஆனி மன்றலிடம் இதுபற்றி பேசினேன். அவரும் பாலியல் தாக்குதல் பற்றி எந்த நேரமும் பெண்கள் தைரியமாக முறையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதை விவரித்தார். பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட சில மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதாகவும், சில குற்றவாளி மாணவர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆண்கள் ஏன் பெண்களின் சம்மதம் இல்லாமல் அவர்களது உடல்கள் மீது அத்துமீறுகிறார்கள்? பெண்களைப் பற்றிய பார்வை அரசு மட்டத்தில், நிறுவனங்கள் மத்தியில் மாறிய அளவுக்கு சமூகத்தில் மாறவில்லையா? இந்தக் கேள்விதான் பல்கலைக்கழக வளாகங்களிலும் எழுகிறது. நுகர்வு சமூகமாக இருக்கும் அமெரிக்காவில் வளரும் பருவத்தில் ஆண்களுக்கு பெண்களைப் பற்றிய எதிர்மறையான சித்திரங்கள் அதிக அளவில் போய்ச் சேருகின்றன. இது இப்போது இந்தியாவுக்கும் பொருந்துகிறது. பாலியல் உணர்வுகளை நெறிப்படுத்தும் கல்விச் சூழல் இல்லாததும் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக இருக்கலாம். பெண்களைப் பாலியல் துய்த்தலுக்கும் நுகர்வுக்கும் மட்டுமே உரியவளாகப் பார்க்க வேண்டிய சமூகச் சூழல் அமெரிக்காவில் இல்லாமல் இருக்கலாம். பணிபுரியும் பெண்கள் அதிக அளவில் உள்ள தேசம் இது. பெண்களில் சுமார் 60 சதவீதம்பேர் பணிபுரிகிறார்கள். இருந்தாலும் கல்வி வளாகங்கள் தரும் சுதந்திரம் பொறுப்புடன் சேர்ந்ததாக இல்லை. கல்வி வளாகங்களில் கிடைக்கும் சுதந்திரம் பொறுப்புகளைப் பற்றிய நிபந்தனை அல்லது நினைவூட்டலுடன் வரவேண்டியிருக்கிறது. பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகார்களை பள்ளி நிர்வாகங்களும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் சரிவரக் கையாளாதபோது, அவர்கள் அமெரிக்க மைய அரசின் கல்வித்துறைக்கு புகார்களைக் கொண்டு செல்வதற்கு ஆண்ட்ரியா பைனோ, ஆனி கிளார்க் ஆகிய மாணவிகள் உதவுகிறார்கள். அமெரிக்க அரசின் கல்வித்துறையின் டைட்டில் ஒன்பது என்ற ஷரத்து, கல்வி வளாகங்களில் பாலின வேறுபாட்டைத் தடை செய்கிறது. இந்த ஷரத்தின்படி கொண்டு செல்லப்படும் புகார்கள் டைட்டில் ஒன்பது புகார்கள் என்று பிரபலமாகியுள்ளன. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேசப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் மீது மாணவிகள் தந்த டைட்டில் ஒன்பது புகார்கள் நிலுவையில் உள்ளன. பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அமெரிக்க அரசு முனைப்புடன் செயல்படும் என்று ஜனாதிபதி ஒபாமா உறுதியளிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்சினை இப்போது தேசிய கவனம் பெற்ற, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக மாறியிருக்கிறது.

9. பூர்வகுடி அமெரிக்கர்களின் கதைகள்

chapter9
பூர்வகுடி அமெரிக்கர்களின் வழிவந்த ஜோன், ஒதுக்கீட்டு நிலங்களால் மட்டுமே தங்கள் இனம் தப்பிப் பிழைத்தது என்கிறார்.

பூர்வகுடி மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற நிலஒதுக்கீட்டை அரிசோனாவில் பார்த்தோம். தன்னாட்சி வழங்கப்பட்ட தேசிய இனங்களாக அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பூர்வகுடி அமெரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் அமெரிக்க தேசியக்கொடியுடன் அவர்களுடைய தேசிய இனக்கொடியும் பறக்கிறது. இந்த நிலஒதுக்கீடு மட்டும் கிடைக்கவில்லை என்றால் பூர்வகுடி அமெரிக்கர்கள் முற்றாக ஒழிக்கப்பட்டிருப்பார்கள் என்று பழங்குடி மக்களின் வழியில் வந்த ஜோன் என்னிடம் சொன்னார். பழங்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகளில் கேளிக்கை சூதாட்ட விடுதிகளான கெசினோக்களை அதிகம் பார்க்க முடிந்தது. ”ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் விவசாயம் செய்ய தகுதியற்றவையாக, நீர் ஆதாரம் இல்லாதவையாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த நிலமாவது கிடைத்ததால் எங்கள் மக்கள் பிழைத்திருக்கிறார்கள்,” என்றார் ஜோன். பூர்வகுடி அமெரிக்கச் சமூகங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக பெண்கள் இருந்தார்கள். அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு அடித்தளம் இட்டவர்கள், பழங்குடி அமெரிக்கர்களின் ஆளுகை முறைகளிலிருந்து பலவற்றையும் கற்றுக்கொண்டு அவற்றை செயல்படுத்தினார்கள். அமெரிக்கச் சமூகத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பொறுப்புகளில் பெண்களை அதிகமாகக் காண முடிவதற்கு இப்படியொரு பூர்வகுடி மக்களின் வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. இதற்குப் பல வரலாற்று ஆதாரங்கள் இருப்பதை ஜோன் எனக்கு எழுதிய மின்னஞ்சலிலும் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 2014 ஜூன் மாதத்தில் வடக்கு டகோட்டா மாகாணத்தில் பூர்வகுடி அமெரிக்கச் சமூகங்களைச் சந்தித்தார். சமீபத்தில் கீஸ்டோன் இயற்கை எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் முயற்சி பூர்வகுடி அமெரிக்கர்களைப் பதற்றம்கொள்ளச் செய்தது. கனடாவிலிருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரும் இந்தக் குழாய்கள் தெற்கு டகோட்டா மாகாணத்தில் பூர்வகுடி அமெரிக்கர்களின் நிலங்கள் வழியாகச் செல்லும் என்பதுதான் திட்டம். ‘எப்பாடுபட்டாவது இதைத் தடுப்போம்’ என்று பூர்வகுடி இந்தியச் சமூகங்களின் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் எப்படி சமாதானம் உண்டாகப் போகிறது என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். தங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பூர்வகுடி அமெரிக்கர்கள் காலந்தோறும் இடையறாத போராட்டத்தை நிகழ்த்தி வருகிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்கள் தங்களுடைய கலாச்சாரத் தனித்துவத்தைப் பேணுவதோடு, அமெரிக்க தேசத்தின் ஜனநாயகச் செயல்பாடுகளிலும் பங்கேற்று வருகிறார்கள்.

10. ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு புதிய சவால்கள்

chapter10
கறுப்பின மக்களின் போராட்டம் அன்றாடம் தேவைப்படுகிற விழிப்பாகவும் எழுச்சியாகவும் இருக்கிறது.

நான் இரண்டு தினங்களைச் செலவிட்ட சின்சின்னாட்டியில் காவல் துறையில் 25 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது; 35 சதவீதம் கறுப்பின ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; 40 சதவீதம் இடங்கள் வெள்ளை இன ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தொகையிலுள்ள விகிதாச்சாரப்படி, ஆக்கப்பூர்வமான பங்கேற்பு அரசுத் துறைகளிலும் கல்வி வளாகங்களிலும் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கலிஃபோர்னியா, வாஷிங்டன், ஃப்ளோரிடா, மிச்சிகன், நெப்ராஸ்கா, கொலராடோ, அரிசோனா, நியூ ஹேம்ப்ஷைர், ஒக்லஹோமா ஆகிய ஒன்பது மாநிலங்களில் (அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள்) உயர் கல்வி நிறுவனங்களில் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்குச் சட்டரீதியாகத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற அமெரிக்க அரசியல் சாசனத்தின் அடிப்படையையே ஒன்பது மாநிலங்கள் சட்டம் மூலம் தகர்த்திருக்கின்றன. இந்தத் தடைகளை உச்ச நீதிமன்றமும் ஆமோதித்திருக்கிறது.
சின்சின்னாட்டியில் மிகப்பழமையான மோர்லெய்ன் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏப்ரல் 22, 2014 மதியம் அந்தச் செய்தி அமெரிக்காவையே ஆக்கிரமித்தது. மிச்சிகனின் உயர்கல்வி நிறுவனங்களில் எல்லோருக்கும் வாய்ப்பு அளிப்பதற்கு இருந்த தடையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மிச்சிகனின் சட்டம் பற்றிய தீர்ப்பு எட்டு நீதிபதிகளால் வழங்கப்பட்டிருந்தது. இதில் இரண்டு நீதிபதிகள், தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்தின் முதல் ஹிஸ்பானிக் (ஸ்பானிஷ் பேசும் தென் அமெரிக்கப் பின்புலம் கொண்ட அமெரிக்க பிரஜைகளுக்கு ஹிஸ்பானிக்குகள் என்று பெயர்) நீதிபதியான சோனியா சோடோமேயர், “ஆக்கப்பூர்வமான இடஒதுக்கீடுதான் எனக்கு வாய்ப்புகளின் வாசல்களைத் திறந்தது. இனச்சிறுபான்மையினரை நசுக்கும் இதுபோன்ற சட்டங்களை நாம் கண்காணிக்க வேண்டும்” என்று உறுதிபடக் கருத்து தெரிவித்தார்; தனது ஆட்சேபணையை வலுவாகப் பதிவு செய்தார். கறுப்பினத்து ஒபாமா இரண்டு முறை ஜனாதிபதியானபோதும்கூட இனச்சிறுபான்மையினரை ஒடுக்கும் அமைப்பு முறைகள் இன்னும் நீதித்துறை வாயிலாகவும் காவல் துறை போன்றவற்றின் வழியாகவும் செயல்பட்டு வருவதாக இனச்சிறுபான்மையினருக்கு ஆதரவான செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். மிசவுரி மாநிலத்தின் ஃபெர்குசன் நகரில் 18 வயதான மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பினச் சிறுவனைச் சுட்டுக்கொன்ற டேரன் வில்சன் என்கிற வெள்ளையின காவல்துறை அதிகாரியை குற்றம் சாட்ட அமெரிக்க நீதிமன்றம் மறுத்தது. இதனைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் கறுப்பினத்தவருக்கு ஆதரவான ஜனநாயக இயக்கங்கள் பேரணிகளை, ஆர்ப்பாட்டங்களை இன்றளவும் (டிசம்பர் 7, 2014) தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். போராட்டங்களின் எதிரொலியாக மைக்கேல் பிரவுனைக் கொன்ற டேரன் வில்சன் தனது காவல் துறைப் பணியை ராஜினாமா செய்தார். நீதிக்கான நெடும்பயணம் உலகம் உள்ளவரை ஓயாது.

11. மேடிசனின் ஜனநாயகப் பாடல்கள்

chapter11
chapter11a
மேடிசன் சட்டமன்றக் கட்டடத்தில் இன்றளவும் மக்கள் பாடும் ஜனநாயகப் பாடல்கள், அலைகளைப்போலவே மக்களும் ஓய்வதில்லை என்கிற நம்பிக்கையைத் தருகின்றன.

மேடிசனின் மாநில சட்டமன்றக் கட்டடம், பல்வேறு உணர்ச்சிபூர்வமான ஜனநாயகப் போராட்டங்களுக்குக் களமாக இருந்திருக்கிறது. விஸ்கான்ஸின் மாநில ஆளுநரான ஸ்காட் வாக்கர், ஊதிய உயர்வு போன்ற பொதுப் பிரச்னைகளில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட பேரம் பேசும் உரிமையை ரத்து செய்தார். இதனைக் கண்டித்து மாநிலத் தலைநகரான மேடிசனில் சட்டமன்றக் கட்டடத்தை மக்கள் முற்றுகையிட்டார்கள். இந்தப் போராட்டம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்தது. இடையறாத தொடர் அகிம்சைப் போராட்டம் மூலமாக மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு மேடிசனின் ஜனநாயகப் போராட்டக்காரர்கள் நல்ல உதாரணம். இப்போதும் தினமும் நண்பகல் 12 மணிக்கு உணவு இடைவேளை முதல் ஒரு மணி வரை இருபது போராட்டக்காரர்கள் ”இந்த விஸ்கான்ஸின் நிலம் உனக்கும் எனக்குமானது; எல்லோருக்குமானது. இங்கிருந்து எங்களை ஸ்காட் வாக்கரால் விரட்ட முடியாது,” என்பது உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி வருகிறார்கள். சட்டமன்றக் கட்டடத்தில் இதுபோல ஆளுநருக்கு எதிராகப் பாடக்கூடாது என்று சில முறை காவல் துறை இவர்களைக் கைது செய்தது. ”அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் எங்களது பேச்சு சுதந்திரத்தை உறுதியளிக்கிறது” என்று நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்றுள்ளார்கள்; இன்னமும் அவர்கள் விஸ்கான்ஸின் மக்களின் சுதந்திரத்தைப் பாடி வருகிறார்கள். நான் சட்டமன்ற வளாகத்திலிருந்து வெளியே வரும்போது ”இந்தச் சட்டமன்றக் கட்டடம் உனக்கும் எனக்கும் சேர்த்துதான் கட்டப்பட்டது” என்று அவர்கள் பாடியது கேட்கிறது.
அராஜகத்தின் முன்பு அகிம்சையைக் கடைபிடித்து வெற்றி காண முடியும் என்கிற நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. எனக்கும் பாட்டு எழுதிப் பாட வேண்டும் என்று தோன்றியது. ஒரு ஜனநாயகப் பாடலை ஜனரஞ்சகமான நடையில் எழுதி சுபாவுக்கு மின்னஞ்சல் செய்தேன். அதனை அழகாகப் பாடி எனக்கு அனுப்பினாள். நியூயார்க்கில் பிராட்வேயில் நாடகம் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் டைம்ஸ் சதுக்கத்திற்கு வந்தேன். முழு உற்சாகத்துடன் அந்தப் பாடலைப் பாடினேன். நண்பர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இதனை வீடியோ பதிவு செய்தார். இன்னும் கொஞ்சம் மெருகூட்டி இதனை வெளியிட உத்தேசித்திருக்கிறேன்.

12. நியூயார்க் நகரின் செக்ஸ் கடைகள்.

chapter12
நியூயார்க் நகரின் செக்ஸ் அருங்காட்சியகம். செக்ஸ் பற்றிய வெளிப்படையான தன்மை, அதைப் பற்றிய பொய்மைகளைத் துவம்சம் செய்கிறது.

வாஷிங்டனில் கொஞ்சம் இதமான வெயில் அடித்தது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விடுதி அறைக்கு கொஞ்சம் தொலைவுதான். நண்பர்கள் அழைத்ததால் கார் பிடித்தேன். பாகிஸ்தானி கார் ஓட்டுநரிடம் “இன்று கிளைமேட் நன்றாக இருக்கிறது” என்று உற்சாகக் கூக்குரலுடன் சொல்லிச் சென்றாள் நடந்து சென்ற அந்த வெள்ளைப்பெண். இறைவனும் இயற்கையும் பாரபட்சமாக இருப்பதில்லை; பாகுபாடு செய்வதில்லை. ஏப்ரல் முதல் வாரம் முழுக்கவே இரவு எட்டு மணிக்கு மேல்தான் வாஷிங்டனில் சூரியன் மறைந்த்து. “அடுத்து எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார் ஓட்டுநர். “அரிசோனாவின் தலைநகர் ஃபீனிக்ஸ்” என்றேன். பாலைவனம் மாதிரி அங்கு வெயில் காயும் என்று எச்சரித்தார் அவர். வருடத்தில் 300 நாட்கள் வெயிலுக்குப் பழக்கப்பட்ட இந்திய உடம்புகளுக்கு ஃபீனிக்ஸ் வெயில் ஒரு பொருட்டே இல்லை என்பது அங்கு போனபிறகுதான் தெரிந்தது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவில் முறையான குடியுரிமை இல்லாமல் வாழும் 47 லட்சம்பேருக்கு தண்டனைகள் இல்லை; அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் வாழலாம், வேலை செய்யலாம் என்கிற விதி தளர்வை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். இதனை அறிவிக்கும்போது ”நாம் அந்நியர்களை அடக்குமுறை செய்யக்கூடாது என்று வேதங்கள் சொல்கின்றன. நாம் அந்நியர்களின் இதயத்தை அறிந்தவர்கள். நாமும் முன்பு அந்நியர்களாகத்தான் இருந்தோம்” என்று ஒபாமா சொன்னார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு அருகிலேயே ஹேம்ப்டன் இன் விடுதியில் தங்கியிருந்தேன். ஓர் இரவில் நியூயார்க்கின் செக்ஸ் கடைகளுக்குள் நுழைந்து வந்தேன். வெளிப்படையான பாலுறவுப் படங்கள், பாலுறவில் அதிக இன்பமூட்டும் என்று கருதப்படுகிற இளக்கிகள், சுய இன்பத்துக்கு உதவும் டில்டோ, வைப்ரேட்டர் போன்ற சாதனங்கள் விற்கப்படுகின்றன. ஒரு கடையின் மாடியில் இரண்டு பெண்கள் “உடனடி செக்ஸுக்கு”த் தயார் நிலையில் இருந்தார்கள். இதையெல்லாமும் படம் எடுத்து டிவிடி போட்டு விற்பீர்களா என்று கேட்டேன். கடை மேலாளர், தேவைப்பட்டால் டிவிடி போட்டுத் தருகிற சகல தொழில்நுட்ப வசதிகளும் இருப்பதாகச் சொன்னார். செக்ஸ் கடைகளைவிட பெரிதாக செக்ஸ் அருங்காட்சியகம் ஒன்றும் நியூயார்க்கில் இருக்கிறது. செக்ஸை வெளிப்படையாகப் பேசுவது, அதைப் பற்றிய தவறான எண்ணங்களையும் பயங்களையும் போக்குகிறது. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் இப்படி வெளிப்படையாகப் பாலுறவைப் பற்றி அறிந்துகொள்கிற கல்வி சாதனங்கள் கிடையாது. நியூயார்க் போன்ற பெருநகரங்களிலும் மாநிலத் தலைநகரங்களிலும் இதற்கான வாய்ப்பு இருக்கிறது.

13. வெள்ளை மாளிகை முன்பு தொழுகை

chapter13
வெள்ளை மாளிகையின் எதிரில் முப்பத்தைந்து வருடங்களாக அணுஆயுதங்களே வேண்டாம் என்று அகிம்சைப் போர் நடத்தி வரும் கோனி.

எந்த லிஃப்டிலும் 13 ஆம் எண்ணைப் பார்க்க முடியவில்லை. 13 ஆம் எண் துரதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது என்கிற மூட நம்பிக்கை சமூகமயமாகியுள்ளது. எங்கு நோக்கினாலும் 12க்குப் பிறகு 14தான். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டட லிஃப்டில் மட்டும் 12, 13, 14 என்று மாடிகளின் வரிசை தவறாமல் குறிப்பிடப்பட்டிருந்தது. ”ஆவிகளைப் பார்க்கலாம்; பேசலாம்” என்கிற அறிவிப்புகளை நியூயார்க்கின் நகர வீதிகளில் சில இடங்களில் பார்க்க முடிந்தது.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையைப் பார்க்கச் சென்றபோது அணு ஆயுதங்களுக்கு எதிராக அமைதிப் போராட்டம் நடத்திவரும் கொன்செப்சியன் பிக்கியோட்டா எனப்படும் கோனியைச் சந்தித்தேன். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ந்தேதி முதல் இரவு முதல் வெள்ளை மாளிகை முன்பு அகிம்சைப் போராட்டம் நடத்தி வருகிறார் இவர். சக மனிதர்கள் மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிப்பது அநீதி என்பதுதான் இவரது செய்தி. ஸ்பெயினில் பிறந்தவர் இவர். ”அணு ஆயுதங்களை உருவாக்காதீர்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு வறுமையை ஒழியுங்கள்” என்பதுபோன்ற பதாகைகளைத் தாங்கியபடி இருக்கிறார். ”இந்தப் பூங்காவில் குளிரில் நடுங்கி மனிதர்கள் செத்துப்போவதை நான் பார்த்திருக்கிறேன்; பூங்காவுக்கு எதிரில் வெள்ளை மாளிகையில் உலகின் அதிகாரம் மிகுந்த மனிதர் இருக்கிறார்.” என்று சொல்லும் கோனியின் மன உறுதிக்கு காந்தியடிகளின் வாழ்க்கைதான் முன்னுதாரணம். காந்தி தேசத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் அவருக்கு அளவில்லாத சந்தோஷம். “யாரும் வந்து புதிதாக உலகத்தை மாற்றப்போவதில்லை; நம்முடைய மக்களிடம் நாம்தான் பேச வேண்டும்” என்றார்.

கோனியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தொழுகைக்கான அழைப்புச் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு முதியவர் பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு சிறிய குப்பியில் கொண்டு வந்திருந்த நீரில் ‘ஒலு’ (சுத்தம்) செய்துவிட்டு அங்கே வீதியோரத்தில் தொழுதார். தொழும் முன்னர் “தொழுகை எளிதானது; எங்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட நேரத்தில் தொழலாம்” என்று சொல்லிவிட்டுத் தொழுதார். வெள்ளை மாளிகை முன்பு வழக்கம்போல ஆயுதங்களைச் சோதிக்கும் வாகனங்கள் வலம்வந்துகொண்டிருந்தன. எந்த உலோகங்களையும் வெடிபொருள்களையும் இனம்காணும் சக்தி வாய்ந்த வாகனங்கள் அவை. சுற்றுலாப் பயணிகள் வெள்ளை மாளிகையைப் பின்னணியாகக் கொண்டு தங்கள் ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். வீடில்லாத பலர் வெள்ளை மாளிகைக்கு முன்புள்ள பூங்காவில் காற்று வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

பின்குறிப்பு:
மாட்டிறைச்சி எனக்குப் பிடித்தமான உணவாக இருந்தது. விஸ்கான்ஸின் மாநிலத் தலைநகரான மேடிசனில் இருந்த மூன்று நாட்களும் Corned Beef சாப்பிடக் கிடைத்தது. உருளைக்கிழங்கை Hash Brown என்ற பெயரில் அதிகமதிகம் காலை உணவில் பார்க்க முடிந்தது. ஆறு நகரங்களுக்குப் பயணப்பட்ட நான் பெரும்பாலும் அமெரிக்க, சீன, மெக்சிக உணவகங்களுக்கே சென்றேன். சில முறை நண்பர்களுக்காக இந்திய உணவகங்களுக்குச் சென்றேன். அமெரிக்காவில் இருந்த ஒரு மாதத்தில் அதிகமதிகம் பிற கலாச்சார உணவுகளை அறிவதில் ஆர்வமாக இருந்தேன்.

14. வெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்.

americannightscover
வாஷிங்டன் மெட்ரோவில் ஒரு கறுப்பினத் தோழி.

அமெரிக்காவில் சென்ற இடங்களில் அரிசோனா தவிர பிற இடங்களில் ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து பயன்படுத்துவதற்கு சவுகரியமானதாக இருந்தது. வாஷிங்டனிலும் நியூயார்க்கிலும் மெட்ரோ ரயிலை அதிகமாகப் பயன்படுத்தினேன். மெட்ரோ ரயில் பயணங்களின்போது பார்த்த கறுப்பினப் பெண்களின் பலசடைப் பின்னல்கள் மிகுந்த நுட்பமான சிகை அலங்காரமாகத் தெரிந்தன. அவர்களில் சிலரிடம் கேட்டபோது இந்த பலசடைப் பின்னல்களுக்கு இரண்டு மணி நேரம்கூட தேவைப்படும் என்றார்கள். நான் அங்கிருந்தபோது (ஏப்ரல் 2014) அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் பலசடைப் பின்னல்கள் போடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரும்பாலும் கறுப்பினப் பெண்கள் இந்த சிகை அலங்காரத்தைச் செய்வதால் இந்த உத்தரவு அவர்களுக்கு எதிரானது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. மூன்று மாத காலப் போராட்டத்திற்குப் பின்னர் ஆகஸ்ட் 2014லிருந்து கறுப்பினப் பெண்கள் தங்களது பாரம்பரிய தலை அலங்காரத்தை ராணுவத்தில் கடைபிடிப்பதில் பிரச்னை இல்லை என்று அமெரிக்க ராணுவம் அறிவித்தது. அமெரிக்கக் கடற்படையில் இப்போது இந்தப் பிரச்னை எழுந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஒரு நாள் இரவு வாழ்க்கைத்துணைவி சுபஸ்ரீக்குத் தொலைபேசி செய்தபோது மார்டின் பெர்னால் எழுதிய பிளாக் ஏதினா புத்தகங்களை வாங்கும்படி சொன்னாள். பண்டைய கிரேக்க நாகரிகம் எகிப்திடமிருந்தும் ஆப்ரிக்காவின் பிற பகுதிகளிடமிருந்தும் மேற்கு ஆசியாவிடமிருந்தும் பெற்றுக்கொண்ட கலாச்சார, மொழி அறிவைப் பற்றிய புத்தகங்கள் இவை. கலப்பற்ற ஐரோப்பிய கலாச்சாரப் பெருமிதம் பற்றிய கட்டுக்கதைகளை மொழியியல், அறிவியல் அடிப்படைகளில் தகர்த்த புத்தகங்கள் இவை. தனித்த கிரேக்க ஆரிய கலாச்சாரம் என்று ஒன்றுமில்லை. பழமையான கிரேக்க நாகரிகம் என்று முன்னிறுத்துப்படுவது ஆப்ரிக்க, ஆசிய பண்பாடுகளின் தாக்கமும் கலந்து எல்லாமுமாய்தான் இருந்தது என்பதே இந்த நூல்களின் அடிப்படை. கேம்ப்ரிட்ஜ் கல்விப் புலத்திலிருந்தபடியே அறிஞர் மார்டின் பெர்னால் இந்த வாதங்களை முன்வைத்து உலகின் கவனத்தை ஈர்த்தார்.
“வெள்ளை முடிக்குக் கறுப்பு வேர்கள் இருக்கிறதா?” என்கிற ஜனரஞ்சகமான கேள்விகளை இந்தப் புத்தகங்கள் தூண்டின. வரலாற்றில் எந்த மக்களுடைய பங்கு நிராகரிக்கப்பட்டதோ அதனை மீட்டெடுத்த ஆவணங்கள் இவை. வெள்ளை முடிக்குக் கறுப்பு வேர்கள் இருக்கலாம் என்கிற இந்த வாதங்கள் வெள்ளை மேலாதிக்கவாதிகளால் இன்றளவும் மறுக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களை ஒன்றுபடுத்தவும் கலப்புதான் இயல்பானது என்பதைச் சொல்லவும் அறிவியலையும் மொழியியலையும் மார்டின் பெர்னால் பயன்படுத்தினார். உலகம் முழுவதும் மனித இனம் கலந்துதான் வாழுகிறது; பண்டைய கிரேக்க நாகரிகம் என்பது ஒருபடித்தானதல்ல; அறிவு கொடுக்கல் வாங்கலும் பல்வேறு இனங்களின் ஒன்றுகூடலும் காலங்காலமாக நடந்து வருவதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் குவிந்துகிடக்கின்றன.

15. எல்லாப்புகழும் இறைவனுக்கே.

chapter15
வாஷிங்டன் பூங்காவில் ஆரத்தழுவும் அன்புச் சொந்தங்கள். ஏப்ரல் இங்கு வசந்தகாலம். செர்ரி மலர்கள் பூத்திருக்கின்றன.

ஒரு மாத கால பயணம் முடிந்து இந்தியா திரும்பும் நாள். பிட்ஸ்பர்கிலிருந்து அதிகாலை 6.30க்குக் கிளம்பும் டெல்டா விமானத்தில் ஏறி நியூயார்க்கின் ஜான் எஃப்.கென்னடி விமான நிலையத்துக்கு வர வேண்டும். என்னை அழைத்துக் கொண்டு தங்கை மூமினும் மச்சான் ஹூ ஜியாமிங்கும் அதிகாலை மூன்று மணிக்கே காரில் பிட்ஸ்பர்க் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். மழை பெய்துகொண்டிருந்த்து. சரியாகப் போய் சேர்ந்தோம். விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டு தங்கைக்கும் மச்சானுக்கும் சொன்னேன். ஆனால் திடீரென்று விமானத்திலிருந்து இறங்கச் சொன்னார்கள்; விமானி சரியான நேரத்துக்கு வரவில்லையாம். வேறு விமானத்தில் மாற்றிவிடப் போவதாகச் சொன்னார்கள். மதியம் 3.30க்கு நியூயார்க்கிலிருந்து லுஃப்தான்ஸாவில் ஃப்ராங்ஃபர்டுக்குப் புறப்பட வேண்டும். கொஞ்சம் பதற்றமானது. ஆண்டவனை வேண்டிக்கொண்டேன். காலை 11.30க்கு பிட்ஸ்பர்கில் புறப்பட்டு மதியம் 1.30க்கு நியூயார்க் செல்லும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு டிக்கெட்டை மாற்றித் தந்தார்கள். மழை விடாமல் பெய்தது. மழையால், டெல்டா விமானத்திலிருந்து அமெரிக்கன் ஏர்லைனுக்கு உடமைகளை மாற்றுவதும் தாமதமாகி வந்தது. தங்கையும் பதற்றத்தில் காரிலேயே வேண்டுமானாலும் நியூயார்க் அழைத்துச் செல்கிறேன் என்றாள். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
வாஷிங்டனில் மாலை விமானம் ஒன்று ரத்தாகி ஓர் இரவு முழுக்க வாஷிங்டன் விமான நிலையத்தில் தங்க நேர்ந்ததை தங்கை சுட்டிக்காட்டினாள். அதே சமயம், விமான நிறுவனங்களில் பணிபுரியும் சில்வியாவும் ரோத்தும் தொடர்ந்து பணியாளர்களிடம் சொல்லி அடாத மழையிலும் உடமைகளை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு மாற்றி உதவினார்கள். நியூயார்க் போய்ச் சேர்ந்ததுமே சர்வதேச முனையத்திற்கு மாறி உடமைகளை லுஃப்தான்ஸாவிடம் ஒப்படைத்தேன். அங்கும் மழை பெய்துகொண்டேயிருந்தது. விமானத்தில் நியூயார்க்கைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் இரண்டு மக்செய் நகரத்து பிரெஞ்சுப் பெண்கள் அருகில் இருந்தார்கள். அதில் ஒருத்தி மழை காரணமாக விமானத்துக்கு ஏதாவது ஆகிவிடுமா என்று பயந்தவாறு பேசினாள்; இன்னொருத்தி அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினாள். தனது தோழி பயப்படுகிறாள் என்றும் ஒன்றும் ஆகாது என்று சொல்லும்படியும் அவள் என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் சொன்னாள். ”எனக்கு பிரெஞ்சு தெரியாது; இருந்தாலும் பயப்பட ஒன்றுமில்லை; இறைவன் மிகப்பெரியவன்” என்றேன். பிரெஞ்சு மட்டுமே பேசத்தெரிந்த அந்தப் பெண் நான் சொன்னது புரிந்ததுபோல கனிவாகப் புன்னகைத்தாள்.

பீர் முகமது
செய்தியாளர். சுதந்திர சிந்தனையாளர். பதினோரு வருடங்களாக ஆங்கில, தமிழ் அச்சு ஊடகங்களில் பணிசெய்தவர். கடந்த ஐந்து வருடங்களாக காட்சி ஊடகங்களில் பணியாற்றியவாறே சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார். ஊடகங்களின் மூலமாக ஜனநாயகத்தின் பலன்களை கடைசி மாந்தருக்கும் கொண்டு செல்ல விழைகிறார். இவரது வாழ்க்கைத்துணையான சுபஸ்ரீ தேசிகன் எழுத்தாளர்; அறிவியல் சிந்தனையை மக்கள்மயமாக்க விரும்புகிறவர்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here