தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த 12,240 குடும்பங்கள், அதாவது சுமார் 53,501 பேர் மொத்தம் 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது .

கேரளா மாநிலத்தின் வயநாடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கேரள மாநிலத்தில் வடக்கு பரவூர் பகுதிதான் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, 22 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கியின் செறுதோனி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டன. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இடுக்கி, எடமலையார் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரியாறு வழியாக வந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. கடும் வெள்ளம் வந்து கொண்டு இருப்பதால் கொச்சி நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கடும் மழை காரணமாக இடுக்கி, பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தபட்டது.

கேரளாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கப்பல்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. மீட்புப் பணியில் 32 ராணுவ விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர் இடுக்கி பகுதியில் தரையிறங்க வேண்டிய சூழலில் அங்கு மோசமான வானிலை காரணமாக வயநாடு பகுதியில் தரையிறக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையானது செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தால் வீடு, நிலம் இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், முகாம்களில் வாழும் அனைத்து குடும்பங்களும் ரூ.3,800 நிவாரண உதவியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கேரள கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மாநில காங்கிரஸ் கட்சியினர் செய்திட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மழையால் கேரளா பேரழிவை சந்தித்துள்ளது; பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டமைப்பது ஒரு கடினமான பணியாக இருக்கும். நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்குமாறு கேட்கிறோம் என்று கேரள முதல்வர் டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார்.

வெள்ளப்பாதிப்பை பார்வையிடுவதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கேரளா வரவுள்ளார். வெள்ள நிலவரங்களை முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளார்.

https://twitter.com/madhavpramod1/status/1027792913143492608

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here