(December 8, 2015)

சாதாரண நேரங்களிலேயே இதுபற்றிய விழிப்புனர்வு நம்மிடையே இல்லை. அதுவும் வெள்ளம் போன்ற அசௌகரியமான நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான். நப்கின்களை எங்கு பெறுவது? யாரிடம் கேட்பது என்ற தயக்கம் நம்மை தொற்றிக்கொள்ளும். சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் கூட நாப்கின்களின் தேவை அதிகமானது. அறிவியல் பூர்வமாக இம்மாதிரியான அபாயகரமான நேரங்களில் மாதவிடாய் ஏற்படுவது வழக்கம்தான். வழக்கத்திற்கும் அதிகமான நாப்கின்களை பல நிறுவனங்கள் தயாரிக்கும். நிவாரண பணிகளை சென்னையின் பல பகுதிகளில் மேற்கொண்டு வரும் சினேகா மோகன்தாஸ் (Food Bank) பெண்கள் இம்மாதிரியான நேரங்களில் பெண்கள் படும் வேதனையை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

சினேகா மோகன் தாஸ்
சினேகா மோகன் தாஸ்

”நான் வசிக்கும் பகுதி சைதாபேட்டை. சைதாபேட்டையில் நான் இருக்கும் பகுதியிலேயே 1000 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எந்த பொருளையும் கடையில் சென்று வாங்க முடியவில்லை. இன்னொன்று கடைகளே முழுவதுமாக மூடியுள்ளன. படகில் சென்றுதான் எதுவாக இருந்தாலும் வாங்க முடியும். நான்கு நாட்கள் ரொம்ப அவதிப்பட்டோம். நாப்கின்களுக்குத்தான் நிவாரண பணிகளுக்கு செல்லும் போது நிறய டிமாண்ட் இருக்கு”, என்கிறார், சினேகா மோகன் தாஸ்.

வீடுகளிலேயே பெண்கள் சொல்லத்தயங்கும் விஷயங்களை எப்படி தன்னார்வலர்களிடம் கேட்டு நாப்கின்களை பெறுவார்கள்?

“நாப்கின்களை எதுக்கும் கொடுப்போம் என்றுதான் கொடுக்கத் தொடங்கினோம். ஆனால், அதற்குத்தான் கெடுபிடி. சில வீடுகளில் நாப்கின்களை சென்று கொடுக்கும் போது சின்ன பெண்கள் எல்லாம் அழுவார்கள். இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தோம் என கூறுவார்கள். சும்மா வாங்கி வச்சிக்கணும் என்று யாரும் எங்களிடம் நாப்கின்களை வாங்கவில்லை. அதற்கான தேவை அதிகரித்துள்ளது.”

சில இடங்களில் நாப்கின்களுக்கு குறை ஏற்படும்பொழுது பெண்கள் எப்படி உணர்வார்கள்?

“சில இடங்களில் ஆரம்பத்தில் நாப்கின்கள் பத்தவே இல்லை. மற்றவர்கள் கேட்கும் போது எங்கள் கையில் நாப்கின்கள் இருக்காது. பக்கத்தில் உள்ளவர்கள் நாப்கின்களை பகிர்ந்து கொள்வார்கள். இப்பொழுது, எங்களோட நிவாரண பொருட்களில் நாப்கினை கண்டிப்பாக கொடுக்கிறோம். உதாரணமாக, சைதாபேட்டையின் ஒரு பகுதியில் மட்டும் 3,000 நாப்கின்களை உபயோகித்துள்ளோம்.”

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இந்த வெள்ள காலத்தில் அதிகரித்துள்ளதாக நினைக்கிறீர்களா?

“இந்த நேரத்தில் அவர்கள் சங்கடப்படாமல் நேரடியாக வந்து கேட்கின்றனர். ஆண்களே அதை ஆர்வத்துடன் விநியோகிக்கிறார்கள். என்னோட தம்பியே அதை பெண்களுக்கு கொடுக்கிறான். அதைப்பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பெண்களுக்கு இது எவ்ளோ முக்கியம் என்பதை சங்கோஜத்தை தாண்டி ஆண்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இந்த மாதிரியான நேரத்தில் பெண்கள் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும்?

“மாதவிடாய் நேரத்தில் கண்டிப்பாக நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். சாதாரணமான நேரத்திலேயே நாப்கினை சிக்கனப்படுத்துகிறோம் என்று நிறைய பெண்கள் மாற்ற மாட்டார்கள். அதுவும் இப்போது நாப்கின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் பெண்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால், இது சிக்கனம் சம்பந்தப்பட்டது அல்ல. நம்முடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே நாம் உபயோகிக்கும் நாப்கின்கள் உடலுக்கு தீங்கானதுதான். இன்னுமதை தொடர்ந்து உபயோகித்தால் ஆபத்து அதிகமாகும்.

இதையும் படியுங்கள்:

ஆண்கள் நாப்கின் அணிவது எப்படி? பெண்கள் சொல்லி தருகிறார்கள் (வீடியோவுடன்)

”சிகப்பு ரத்தம் என்னை தீண்டத்தகாதவளாக்கியது”: 11 வயது குழந்தையின் மாதவிடாய் கதறல் (வீடியோவுடன்)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்