அஜித் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் உருவாக்கியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம்இன்று(வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.

இந்நில்நியில், நேர்கொண்ட பார்வை திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும் போதும் அஜித் ரசிகர்கள் அதைக் கொண்டாடினர் மகிழ்ந்தனர். படத்தின் போஸ்டர் முதல் டீசர், பாடல்கள் என எல்லாவற்றையும் தல ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். இந்தப் படத்தில் அஜித் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே வந்தது.

இந்நிலையில், நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. சில இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. சிறப்பு காட்சிகளை காண நேற்று இரவு முதலே அஜித் ரசிகர்கள் தியேட்டர் வளாகங்களைச் சூழ்ந்தனர். 

தியேட்டர்கள் முன்பாக அஜித் ரசிகர்கள் பிரம்மாண்டமான முறையில் கட் அவுட், பேனர்கள் அமைத்து, பட்டாசுகள் வெடித்து, குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் கொண்டாடினர். பல இடங்களில் தியேட்டர் முன்பு அமைக்கப்பட்ட கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

இதனால், சென்னையின் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர். 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் கொண்டாட்டம் ட்விட்டரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியா அளவிலான ட்விட்டரில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் தொடர்பாக மட்டுமே#NerKondaPaarvaiFromToday, #NerKondaPaarvaiFdfs, #NKPFestivalBegins ஆகிய ஹேஷ்டேக்குகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்குகளில் அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)