உலகின் பல நாடுகளில் கொரேனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதுவும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகளை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்து, அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட விதிமுறைகளை வெளியிட்டு இருந்தது.

இந்த விதிமுறைகளை திருத்தி தற்போது புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கட்டாய தனிமைப்படுத்துதல் என்ற பிரிவு நீக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஆபத்து நாடுகள் உள்ளிட்ட எந்தவொரு நாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு வரும் பயணிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் வகுக்கப்பட்ட நிலையான நெறிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படுவார்கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள். மாறாக அவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்க மாட்டார்கள்.

இதைத்தவிர மீதமுள்ள வழிகாட்டுதல்கள் அப்படியே செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

முன்னதாக, ஆபத்து நாடுகள் உள்ளிட்ட எந்த நாட்டில் இருந்தும் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவதுடன், ஏற்கனவே வகுக்கப்பட்ட நிலையான நெறிமுறையின்படி நடத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதைப்போல தொற்று உறுதி செய்யப்படுவோருடன் தொடர்பில் இருந்தவர்களும் உடனடியாக அடையாளம் காணப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட வெளிநாட்டு பயணிகள், அவர்களுக்கு தொற்று குணமடைந்த (நெகட்டிவ்) பின்னரும் ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதும், இந்தியா வந்த 8 வது நாளில் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here