வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்

0
501

ஒவ்வொருமனிதனுடையநாவில்இருந்துவரும்சொற்கள்மற்றவர்களைதாக்கும்விதத்தில்அமையக்கூடாதுஅவர்களைபரவசப்படுத்தக்கூடியவிதத்தில்அமையவேண்டும்.வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்

ஒவ்வொரு மனிதனுடைய நாவில் இருந்து வரும் சொற்கள், மற்றவர்களை தாக்கும் விதத்தில் அமையக்கூடாது. அவர்களை பரவசப்படுத்தக் கூடிய விதத்தில் அமைய வேண்டும். ஒரு சிலர் தங்கள் பணியாளர்களிடம் ‘இந்தக் காரியத்தைச் சென்று முடித்து வா’ என்று சொல்வார்கள். முடித்து விட்டு வந்தவுடன் “வேலை முடிந்ததா?” என்று கேட்டால், கார் ஏறியது முதல் காரியம் முடிந்தது வரையான அனைத்து வேலைகளையும் அடுக்கிக்கொண்டே செல்வார்.

உடனே முதலாளி கோபப்பட்டு “வேலை முடிந்ததா, இல்லையா?” என்பார். அதற்காகத் தான் ரத்தின சுருக்கமாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தவரை எதிர்மறை சொற்களை பேசாமல் இருப்பது நல்லது. நேர்மறைச் சொற்களை உச்சரிக்க உச்சரிக்க நேர்த்தியான வாழ்வு அமையும். நாம் சொல்லும் சொற்கள், வெல்லும் சொற்களாக அமைய வேண்டும். அதற்குத்தான் அவ்வையார், ‘நயம்பட உரை’ என்று சொல்லி வைத்தார்.

ஒரு மனிதன் வாழ்வில் நாணயத்தோடு வாழ்ந்தால் தான் மதிப்பு அதிகம். நாணயம் என்பது நீதி, நேர்மை, ஒழுக்கத்தோடு, சொன்ன சொல் மாறாமல் நடந்துகொள்வது. அந்த நாணயத்தோடு, நாம் சொல்லக் கூடிய சொல் சுருக்கமாகவும், மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்க வேண்டும். அதைத் தான் ‘நா நயம்’ என்கிறோம். நாவால் உரைக்கும் சொற்கள் நயம்பட இருக்க வேண்டும். பேசுவது என்பது எல்லோருக்கும் அமையாது. சிலர் சிடுசிடுவென்று பேசுவர். சிலர் வம்பு வரும்படி பேசுவர். சிலர் அழகாகப் பேசுவதாக அடுத்தவரைப் புண்படுத்துவர். சிலர் அன்பாகப் பேசி அனைவரையும் தம் வசம் இழுப்பர். பழகும் நண்பர்கள் அனைவரும் நண்பர்களாகவே இருக்க, பேச்சில் நாம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அதைத்தான் வள்ளுவர் ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்று சொல்கிறார். ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் ‘பேச்சுக்கலை’ என்பது ஒரு பெரும் கலை. இந்தப் பேச்சுக்கலை மட்டும் ஒரு மனிதனிடம் இருந்தால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எவ்வளவு பொல்லாத மனிதராக இருந்தாலும் கூட சமாளித்து விட இயலும். அதற்கு சரஸ்வதி தேவியின் அருட் கடாட்சம் தேவை. பேச்சுக்கலை உள்ளவர்களிடம் பெரிய மனிதர்கள் கூட ஐக்கியமாகி விடுவார்கள். பெண்பால் புலவராக வாழ்ந்த அவ்வையார், வளவளவென்று பேசிக் கொண்டிருக்கும் அந்தக் காலத்திலும், ரத்தினச் சுருக்கமாக கருத்துக்களை எடுத்துரைத்தார். அவை நூற்றுக்கணக்காக இருந்தாலும், ‘ஒரு பானை சோற்றிற்கு ஒருசோறு பதம்’ என்பதைப் போல, ஒரு சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.

அவ்வையின் ஆத்திச்சூடியில் ‘அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், நன்றி மறவேல்’ போன்றவற்றை கடைப்பிடித்தாலே அற்புதமான வாழ்க்கை அமையும். அறம்செய்ய விரும்பவேண்டும், கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், நன்றி மறக்கக்கூடாது என்று இரண்டேசொற்களால் இனிதாகப் புரியும் படி சொல்லி இருக்கிறார், அவ்வையார். இன்று வளரும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாடல்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சமுதாயத்தில் கண்ணியமான மனிதனாக இருந்தாலும், கடமை தவறாமல் இருந்தாலும், பணப்புழக்கம் அதிகம் உள்ளவராக இருந்தாலும் நாணயமானவராக, நம்பிக்கைக்குரிய விதத்திலே வாழவும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் அனைவரும் உங்களைப் போற்றிக் கொண்டாடுவர்.

கம்ப ராமாயணத்தில் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று கம்பர் வர்ணிப்பார். “கண்டேன் அந்த கற்பினுக்கு அணியை என் கண்களால்” என்ற ஒரே வரியின் மூலம், சீதையைக் கண்டதையும், அவள் கற்புத் தவறாமல் இருப்பதையும் அழகாகச் சொல்கிறார். ‘கண்டேன்’ என்பது ஒரு சொல். அதைக் கேட்டதும் ராமனுக்கு ஆனந்தம். அடுத்து ‘சீதை எப்படி இருக்கின்றாளோ?’ என்ற சந்தேகம் ராமனுக்கு வராமல் இருக்க, ‘அந்தக் கற்பினுக்கு அணியை’ என்பார் அனுமன். அடுத்து முத்தாய்ப்பாக ‘என் கண்களால்’ என்று சொல்வதன் மூலம், யார் சொல்லியும் அறிந்து வரவில்லை. நானே நேரில் கண்டுவந்தேன் என்பதை எடுத் துரைக்கிறார். அனுமன் கூறியதைக் கேட்டு ராமனே மெய்மறந்து நின்றதாக கம்பர் சொல்கிறார்.

இதுபோன்று நல்ல சொற்களை உச்சரிப்போம். நலமான வாழ்வை ஏற்போம். உச்சரிப்புகள் தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்.

நம் இல்லங்களில் கூட நல்ல வாக்கியங்களை ஆங்காங்கே எழுதி பதித்து வைக்கலாம். அதைப் படிக்கப் படிக்க நமக்கு வளர்ச்சி கூடும். அதனால் தான் சிலர் ‘வாழ்க வளமுடன்’, ‘வளர்க நலமுடன்’, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘கந்தா வருவாய் கருணை புரிவாய்’ போன்ற வார்த்தைகளை எழுதிப் பதித்து வைத்திருப்பர். சிலர் தொலைபேசியை எடுத்தவுடன் ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்வர்.

Courtesy:  maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here