மக்களிடையே வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 58 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில், மக்களிடையே வெறுப்பூட்டும் வகையிலான பேச்சுகள் தொடர்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 58 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில், தற்போது பதவியிலிருக்கும் மக்களவை உறுப்பினர்களில் 15 பேர் மீதும், மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர் மீதும் வெறுப்பூட்டும் வகையிலான பேச்சுகள் தொடர்பான வழக்குப் பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாட்டாளி மக்கள் கட்சி, ஏ.ஐ.எம்.ஐ.எம் (All India Majlis-e-Ittehadul Muslimeen ), ஏஐயூடிஎஃப் ( All India United Democratic Front) ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 17 பேர் மீதும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகளைச் சேர்ந்த தலா ஐந்து பேர் மீதும், தெலுங்கு தேசம் கட்சியில் மூன்று பேர் மீதும், காங்கிரஸ் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியில் தலா இருவர் மீதும், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி திமுக கட்சிகளில் தலா ஒருவர் மீதும், சுயேட்சைகள் இருவர் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளது. பெண்களுக்கெதிரான வழக்குகளில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அதிக வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்: படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்களுக்கு சம்பளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here