தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை, மே 28) நிறைவடைகிறது கத்திரி வெயில். மேலும், தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளம் – கர்நாடக மாநில கடற்கரையான தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது உருவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழையானது அந்தமான் கடல்பகுதி, தென்கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தீவிரமடைந்து தெற்கு வங்காள விரிகுடா, மாலத்தீவின் பெரும்பாலான பகுதிகள், கன்னியாகுமரி பகுதிக்கு இந்த காற்றழுத்த தாழ்வு நகர்ந்து மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

தென்மேற்குத் திசையிலிருந்து மேற்கு திசை நோக்கி 50 கி.மீ. வேகம் வரையான பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கன்னியாகுமரி கடற்பகுதி, கேரள, கர்நாடக கடற்கரைப் பகுதி, லட்சத்தீவுகள் ஆகிய இடங்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக வட உள்தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

பதிவாகியுள்ள மழை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 நிலவரப்படி, அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியாற்றில் 70 மி.மீ மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் பவானி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், அரியலூர், பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்