பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதலால் பிரதமர் மோடிக்கு ஆதரவான நிலை உருவாகி இருக்கிறது என்று கூறிய பாஜக தலைவர் எடியூரப்பா பேச்சுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலகோட் தாக்குதலால் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 22-இல் பாஜகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கர்நாடகா பாஜக தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியது.

கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 27-ஆம் தேதி இந்திய விமானப்படை பாலாகோட் தீவிரவாத முகாமில் தாக்குதல் நடத்தியது. இதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்கு தேசம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது . 40 வீரர்களை இழந்ததற்கு தகுந்த பதிலடி என்று பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாலகோட் தாக்குதலை தேர்தல் லாபத்துடன் ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் எடியூரப்பா.

இது தொடர்பாக அவர், “ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. காற்று பாஜகவின் பக்கம் வீசுகிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகள் பதுங்கும் இடங்களை அழித்துள்ளதால் நாட்டில் மோடி ஆதரவு அலையை உருவாகியுள்ளது. இதன் தாக்கம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தெரியும்.

இதனால், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 22-இல் பாஜகவுக்கு வெற்றி கிட்டும்” என அவர் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது .

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் எடியூரப்பா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசுகையில், “இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை பாஜக அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா சர்ச்சைக்குரியவாறு பேசியுள்ளார். 40 வீரர்களைப் பலிகொடுத்து இருக்கிறோம். அதனால், 22 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று பேசியுள்ளார். நான் கேட்கிறேன், மக்களவைத் தேர்தலில் 300 இடங்களில் பாஜக வெற்றி பெற இன்னும் எத்தனை வீரர்களை உயிர்த்தியாகம் செய்ய வைக்கப் போகிறது? எத்தனை பெண்கள் விதவையாகப் போகிறார்கள், எத்தனை வீரர்களின் குடும்பங்களை நீங்கள் அழிக்கப்போகிறீர்கள். பாஜக போன்ற கட்சியையும், அரசையும் நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது.

பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் இருந்துவரும்போது, நம்முடைய பிரதமர் மோடி, பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசுவதைத் தேசம் பொறுத்துக்கொள்ள முடியாது. பாஜக தேர்தல் தொகுதிகளைக் கணக்கிட்டு வருகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here