வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த 1000 டன் அளவு வெங்காயத்தைத் தனியார் வர்த்தகர்கள் இறக்குமதி செய்யவுள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. சென்ற வாரம் சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாயாக அதிகரித்தது. டெல்லி உள்ளிட்ட சில முக்கிய சந்தைகளிலும் வெங்காயத்தின் விலை 100 ரூபாயைத் தாண்டியது. அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளால் இப்போது வெங்காயத்தின் விலை 60 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த 1 லட்சம் டன் வரையில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எம்.எம்.டி.சி. நிறுவனம் வெங்காயத்தை இறக்குமதி செய்யவுள்ளது. தனியார் வர்த்தகர்கள் தரப்பிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் 1,000 டன் வெங்காயத்தை தனியார் வர்த்தகர்கள் இறக்குமதி செய்யப்போவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்திலும் அதிகப்படியான வெங்காயத்தை தனியார் வர்த்தகர்கள் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளனர். இறக்குமதியை எளிதாக்கும் நோக்கத்தில் இறக்குமதிக்கான விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் தளர்த்தியது.

வறட்சி, வெள்ளம் காரணமாக இந்த ஆண்டின் காரிஃப் பருவத்தில் வெங்காய உற்பத்தி 40 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்தது. இதனால் வெங்காயத்துக்கான தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கியது.

போதிய அளவுக்கு வெங்காயம் இருப்பில் இல்லாததாலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுபோன்ற சூழலில்தான் வெங்காய இறக்குமதியை அரசு ஊக்குவித்தது. அதேபோல, வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here