”வீரம்மா தினமும் 25 ரூபா சம்பாதிக்க கையெல்லாம் முள் காயம் படறா”

வறுமை வீரம்மாவுக்கு தினசரி உண்மை.

0
724
தினசரி செலவுக்கு நெரிஞ்சி முள் காயைப் பறிக்கும் வீரம்மா.

மதுரை பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள விவசாயிகள் கூறுகிறார்கள். மதுரை விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்தித்து வரும் சவால்களைப் பற்றி அறிய மதுரையிலுள்ள கிராமப்புறங்களில் ஒன்றான வீரபாண்டி எனும் பகுதிக்குச் சென்றேன்; 60 வயதைக் கடந்தும் ஓய்வின்றி காய்ந்த காட்டில் வாட்டும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எதையோ தேடிக் கொண்டிருந்தார். வறண்ட காடாக இருக்கும் இந்த நிலங்கள் பொங்கல் காலங்கள் நெருங்கிவிட்டால் அறுவடை செய்யும் நிலம். மேலும், இப்பகுதி அலங்காநல்லூருக்கு அண்மையில் உள்ளதால் மார்கழி வந்தாலே திருவிழா களை கட்டிவிடும். அத்தனை களையையும் இழந்த நிலத்தில் வாட்டும் வெயிலில் என்ன செய்கிறார் என்ற கேள்வியோடு அணுகிய நமது கேள்விக்கு அவர் அளித்த பதில் அதிர்ச்சியாய் இருந்தது. முட்கள் அதிகமுள்ள செடியிலிருந்து தேடித் தேடி சிறு சிறு சுண்டல் போன்ற தானியத்தைப் பறித்தபடி, இது யானை நெருஞ்சி முள்ளு, தண்ணி இல்லாம நாங்க என்ன பண்றது அதான் இதப் பறிச்சு வித்து நாளக் கழிக்கிறோம் என்றார் வீரம்மா. அப்படி எவ்வளவு கிடைக்கும் என்றதற்கு ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் என்றார். நம்மில் பலருக்கு இது காலை நேரப் பேருந்து போக்குவரத்துத் தொகை, தண்ணீர் பாட்டில் வாங்கும் விலை, காபி அல்லது டீயின் விலைதான். ஆனால் இதுதான் அவர்களின் வாழ்வை நடத்த உதவும் தொகை. செடியெங்கும் சிறு சிறு முட்கள். அதில் பறிக்க கை வைத்து கை முழுக்க காயம்; 25 ரூபாய்க்கு இத்தனை இன்னலா எனப் பார்ப்பவரைக் கலங்கவைக்க கூடிய காட்சி. (குறிப்பு: நெரிஞ்சி முள் காய் சிறுநீரகக் கல்லை அகற்றும் அருமருந்து; இதைத்தான் கஷ்டப்பட்டுப் பறிக்கிறார் வீரம்மா)

நெரிஞ்சி முள் காயம் பட்ட வீரம்மாவின் கை.
நெரிஞ்சி முள் காயம் பட்ட வீரம்மாவின் கை.

இந்த 25 ரூபாய்க்காக எட்டு கிலோமீட்டர் நடந்துவந்து பறித்துவிட்டு மீண்டும் நடந்தே தன் வீட்டை அடைவதாக தெரிவித்தார். கணவர், இரண்டு மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்தி என எங்கள் வீட்டில் மொத்தம் 12 பேர். நாங்கள் அனைவரும் உழவுதான் செய்கிறோம். ஆனாலும் எங்களிடம் சொந்த நிலம்கூட இல்லை. ஒத்தி மற்றும் குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்து அதை வைத்துதான் வருடத்தைக் கடத்திவந்தோம். முன்னர் இரு போகம் என இருந்தது; ஆனால் இன்று ஒரு போகத்திற்கே இல்லை எனப் போய்விட்டது. போனால் போகட்டும் என வேற வேலை தேடிப் போக எங்களிடம் படிப்பறிவும் இல்லை. விட்டுச்செல்ல மனமும் இல்லை. வறுமையினால் எங்கள் பேரன், பேத்திகளைக்கூட பத்தாம் வகுப்பு வரைதான் படிக்கவைக்க முடிந்தது. அதுவும் அரசுப் பள்ளிகளின் உதவியால்தான். காலத்திற்கும் கடன் தொல்லை போகாது என்பதைப் போல் வாழைத் தோட்டத்தில் அத்தனையும் தண்ணீர் இன்றி பட்டு போய்க்கொண்டுள்ளது. கையில் இருந்த நகையை அடகு வைத்து நெல் மற்றும் வாழை விதைத்தோம். மழை வரும் என நம்பித்தான் எல்லாம் செய்தோம். ஆனால் ஆறுதலுக்குக்கூட துளி மழை இல்லை. சரி அதற்காக கருகவிட முடியுமா? அருகில் உள்ளவர்களிடம் கடனுக்குப் பணம் வாங்கி தண்ணீர் அடித்தும் பயிர் தப்பவில்லை. இனி கேட்டால்கூட எங்களை நம்பி எவரும் பணம் தரமாட்டார்கள். இந்த நடவில் போட்ட முதல் கூட எடுக்க முடியாது.

கடவுளிடம் முறையிட்டு நாளை ஓட்டுறோம். விவசாயம் செய்தாலும்கூட தங்கள் வீட்டில் ரேஷன் அரிசி சாதம்தான். கடன் பெற்று நடவு செய்வதால் அதிகபட்சம் 10 மூட்டை நெல்லைத் தவிர்த்து எல்லா விளைச்சலையும் விற்றுவிடுவோம். அரசு தரும் ரேஷன் அரிசி மூலம் பசியின்றி ஏதோ இருக்கிறோம். இதப்போல காய், கீரை ஏதாச்சும் விற்று குழம்பு செலவு, வீட்டு செலவப் பாத்துக்க வேண்டி இருக்கும். ஆனால் இம்முறை அதுவும் கிடைக்குமா தெரியல. கடன்காரங்க இப்பவே காச கேட்க ஆரம்பிச்சுட்டங்க. என்னா பண்ணப்போறோமோ என்றார்; கூட்டுறவு வங்கியில் கடன் பெறவில்லையா என்று கேட்டேன். அதற்கு வங்கியா அதெல்லாம் போறது இல்ல. வங்கிக்குப் போறதுன்னா நகை அடகு வைக்கத்தான். வங்கியில கடன் தர்றது இல்ல, தந்தாலும் அது ஒரு பகுதி விவசாய செலவுக்குக்கூட போதாது. பேத்தி, மருமகன்னு இருக்க நகைய எல்லாம் அடகு வைச்சி விவசாயம் பண்ணுவோம். அப்புறம் அதத் திருப்பி மறு விளைச்சலுக்கு வைப்போம். இப்படியேதான் மாத்தி மாத்தி பணத்துக்கு நகைய வச்சுப்போம். மேல ஆகுற தொகைக்கு அக்கம்பக்கம் கடன் வாங்கி நடவு, அறுவடைய முடிப்போம். சரி அரசு தர உதவித்தொகை, நிவாரணம் போன்றவை கிடைக்குதா என்றால் அதெல்லாம் எங்களுக்கு கிடைக்குறது இல்ல எங்க கிட்ட நிலம் கிடையாது. ஒத்தி அல்லது குத்தகைக்குத்தான் விவசாயம் பண்றோம்.

இதுல எதுவும் அரசு நிவாரணம், உதவித்தொகை வந்தா அத நிலத்தின் சொந்தமானவர்களுக்குத்தான். அவங்க பெயரில் பட்டா இருப்பதால் அரசின் நிவாரணமும் இவர்களைச் சென்றடைவதில்லை. வருடந்தோறும் வறுமையின் பிடியில் வாடினாலும் செய்துவரும் விவசாயத்தைக் கைவிடவில்லை வீரம்மா. தான் உள்ளவரை விவசாயம் தான். தனது பேத்தி, பேரன் காலத்தில் மாறி வேற பொழப்ப தேடித்தான் வாழ்க்கைய பார்க்கணும் என்றார். இதில் நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் தொழில் துறையின் வளர்ச்சிக்குச் சலுகைகளை வாரி வழங்கும் அரசுகள் விவசாய வளர்ச்சிக்கான சரியான திட்டங்கள் மற்றும் உதவிகளை வகுக்கவில்லை. விவசாய நிலங்களில் வீட்டு மனைகள், தோல் உற்பத்தி நிறுவனங்கள், பனியன் தயாரிப்பு நிறுவனங்கள், ரசாயன தொழிற்சாலைகள் எல்லாம் நமது மண்ணை நாசம் செய்து வருகின்றன. தொழில் நிறுவனங்கள் பல நீர் நீலைகளை கழிவுக்கிடங்காக மாற்றிவிட்டன. குளிர்பான கம்பெனிகள் நிலத்தடியிலுள்ள நீரையும் துளையிட்டு எடுத்து நிலத்தடி நீரின் மட்டத்தைக் குறைத்துவிட்டன. எஞ்சி உள்ள நீர் நிலைகளும் முறையாக தூர் வாரப்படாமல், பராமரிக்கப்படாமல்தான் உள்ளது. தொழில் வளர்ச்சியைவிட தன்னிறைவான உணவு உற்பத்தி நமக்கு மிக அவசியமாகும். உழவு மெல்லச் சாகும் என்பதை விவசாயிகள் படும் பாட்டினை அறிந்துதான் சொல்லியுள்ளனர். ஆனால் தற்போது உழவர்களும் ஊருக்கு ஊர் உயிரிழந்து வருகின்றனர்.

இதையும் பாருங்கள்: “பயிர் இல்லேன்னா எங்க உயிர் இல்ல”

இதையும் பாருங்கள்: இப்படி ஒரு பஞ்சத்த பாத்ததில்லை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்