நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பயனுள்ள வீட்டு மருத்துவம் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

1.நெஞ்சுச்சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கிப் பின் ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.தலைவலி:
ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை எடுத்து, அதனுடன் சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3.தொண்டைகரகரப்பு:
சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.தொடர்விக்கல்:
நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5.வாய்துர் நாற்றம்:
ஒரு பாத்திரத்தில் படிகாரத்தை போட்டு காய்ச்சி, பின் ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் போகும்.

6.உதட்டுவெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் பூசி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7.அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் நன்றாகக் கொதிக்க வைத்து பின் அதனை ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் குணமாகும்.

8.குடல்புண்:
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரிச் சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9.வாய்வுத்தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரிரோடு சேர்த்து உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் குணமாகும்.

10.வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11.மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12.சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13.பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாற்றை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14.மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடாக்கி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15.சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16.தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17.மூலம்:
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18.தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19.மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20.வரட்டு இருமல்:
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்