பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வுக்கு கேமரா, மைக்ரோ போன் வசதி கொண்ட ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும், விடையைத் தேர்வு செய்யும் வகையிலான கேள்வித்தாள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆன்லைன்வழி தேர்வுகள் கிடையாது என்றும் மாணவர்கள் வீட்டில் இருந்த படி ஏ4 தாளில் தேர்வு எழுதி கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த புதிய முறையில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான கேள்விகள் மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும் என்றும் 90 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விடைகளை ஏ4 தாள்களில் 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி,ஸ்பீட் போஸ்ட் மூலம் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரையின் பேரில், சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.