வீசாட்டின் வெற்றிக்கதை

0
282

பொதுவாக சீனா என்றாலே போலிப்பொருட்கள், விலை குறைந்த காப்பிகள் என்ற எண்ணம் பரவலாக நிலவுகிறது. இன்னும் பல துறைகளில் சீனா அப்பட்டமாகவே மேற்கத்திய முன்மாதிரிகளைக் காப்பி அடித்தே வருகின்றது. ஆனால் சீனா மற்றவர்களைப் பார்த்து காப்பியடிக்கும் நிலை மாறி தற்போது சீனாவை மேற்கத்திய நிறுவனங்கள் காப்பியடிக்க முற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா தனக்கென பிரத்யேக இணையதளத்தை உடையது என்பதை நாம் அறிவோம். இந்த இணையதளம் சீன அரசால் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட இணையதளமாகும். உலகெங்கும் பிரபலமான ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணையதளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டவை. ஆனால் இந்த இணைய தளங்களுக்குப் பதிலாக மாற்றுத் தளங்கள் சீனாவில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு கூகுள் தளத்திற்குப் பதிலாக பைடூ, ஃபேஸ்புக், ட்விட்டருக்குப் பதிலாக வீபோ, யுடியூபிற்குப் பதிலாக யோகூ எனத் தடை செய்யப்பட்ட அனைத்துத் தளங்களுக்கும் சீன மாற்றுகள் உண்டு.
இதுபோன்ற சீன மாற்றுகள் மேற்கத்திய தளங்களின் அப்பட்டமான போலிகளாக இல்லாமல் அவற்றுக்கு ஒரு படி மேலே சென்றுவிட்டன. இதற்கு ஓர் உதாரணமாக வீசாட் செயலியை எடுத்துக்கொள்ளலாம். இந்தச் செயலி அடிப்படையில் வாட்ஸ்அப் போன்ற செய்திகள் பரிமாறிக்கொள்ளும் சாட் செயலி தான் என்றாலும் அதன் வளர்ச்சி இன்று பல கிளைகளாக பரந்து விரிந்துள்ளது. தற்போதைய வீசாட் செயலி ஒரு செய்தி பரிமாறும் மெசஞ்சர் செயலியாகவும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளமாகவும், அமேசான் போன்று இணையதள வர்த்தகத் தளமாகவும், பேபால் போன்ற பணப் பரிவர்த்தனை செயலியாகவும் இன்னும் பல பரிணாமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

உதாரணத்திற்கு இந்த ஒற்றைச் செயலி ஒன்றின் மூலமாக ஒருவர் காலை அலுவலகம் செல்லும்போது அவர் வாகனம் பழுதாகிவிட்டது என்றால் அதனை சரிசெய்யும் மெக்கானிக் சேவையைப் பெற முடியும்; பின்னர் அந்தச் செயலியிலி ருந்தே ஓலா போன்ற டாக்ஸி சேவையைப் பதிவு செய்ய முடியும். அலுவலக உணவு இடைவேளைக்கு உணவுகளைப் பெற முடியும். சர்வதேச உணவு விதிமுறைப்படி அந்த உணவுகளைப் படம்பிடித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும். மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர்களுடனான திரைப்படம் ஒன்றிற்குத் திட்டமிட முடியும்; திரைப்பட டிக்கெட்டைப் பதிவு செய்ய முடியும். காலையில் சரிபார்க்கப்பட்ட வாகனம் முதல் உணவு மற்றும் திரைப்படம் வரை அவற்றைக் குறித்து விமரச்சனங்களைப் பதிவு செய்து தரம் கொடுக்க முடியும். குறிப்பாக இவை அனைத்திற்கும் வீசாட் மூலமாகவே கட்டணம் செலுத்தவும் முடியும். சீனாவில் பொட்டிக்கடையில் கடலை மிட்டாய் வாங்கினாலும் அங்கே வீசாட் மூலம் பணம் செலுத்தும் அளவிற்கு இந்தச் சேவை வளர்ந்துள்ளது. இவை அனைத்திற்கும் தனித் தனி செயலிகள் என்றில்லாமல் இந்த ஒற்றைச் செயலியில் இருந்து வெளிவராமலே செய்து முடிக்க முடியும்.

இவற்றால் வீசாட்டிற்கு மற்றொரு சிறப்பு, தங்களது பயனாளர் குறித்த அத்தனை தகவல்களும் வீசாட்டிடம் சேரும். அதாவது ஒருவர் எங்கு உள்ளவர், அவர் எங்கு செல்கிறார், எதில் செல்கிறார், எதற்காக செல்கிறார், என்ன வாங்குகிறார், எவ்வளவு செலவு செய்து வாங்குகிறார் என்பது முதற்கொண்டு சீனாவில் எங்கு எப்பொழுது எத்தனை மக்கள் கூடுகின்றனர் என்பது வரையிலான தகவல் வீசாட்டிடம் சேரும். இவை அனைத்தையும் பெரும் நிறுவனங்களின் விளம்பரச் சேவைக்காக அந்நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும்.

இதுதான் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சீனாவிடமிருந்து காப்பியடிக்க நினைப்பது. இதன் முயற்சியாகவே ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலி மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. கூகிள் சமீபத்தில் கூகிள் அசிஸ்டன்ட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. சாட் பாட்கள் எனப்படும் செயற்கை அறிவு மூலம் இதனை இந்நிறுவனங்கள் சாதிக்க முனைந்துள்ளன. ஆக சீன மக்கள் அனுபவிக்கும் இத்தகைய பலன்கள் கூகுள், ஃபேஸ்புக் மூலம் கிடைக்க இருகின்றது என்று சந்தோஷப்படுபவர்கள் சற்று பொறுங்கள்.

இத்தகைய சேவைகள் சீனாவில் வெற்றி பெற முதல் காரணம் சீன அரசு கூகுள், ஃபேஸ்புக் போன்ற தளங்களைத் தடை செய்து சீன நிறுவனங்களுக்குத் தளம் அமைத்துக் கொடுத்ததும்தான். சீன அரசு இப்படிச் செய்வதற்கு வேறு பல சுயநலன்களும் உள்ளன. தங்கள் மக்களைக் குறித்த அத்துணை தகவல்களும் தங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பது நோக்கம். கூகுள், ஃபேஸ்புக் போன்ற சேவைகளை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் அனைத்தும் அமெரிக்கக் அரசின் உளவு நிறுவனங்களுக்குச் செல்கின்றன. சீனாவிற்கென்று கடுமையாக கட்டுப்படுத்தப்பட்ட இணையதளத்தை வழங்கியதன் மூலம் தங்கள் மக்களின் பயன்பாட்டுத் தகவல்களை தாங்கள் உளவு பார்க்க முடிவதோடு அதனை வேறெவரும் பார்க்க இயலாத வண்ணம் தடுத்தும் விட்டது சீனா. இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சீன மக்கள் பின்னர் அதை ஏற்றுக்கொள்ளப் பழகி விட்டனர். தற்போது இத்தகைய சேவைகள் மூலம் தாங்கள் அனுபவிக்கும் பலன்களைக் குறித்து பெருமிதம் கொள்ளும் மக்கள் அதற்கென அவர்கள் விலையாய் கொடுத்துக்கொண்டிருப்பது தங்கள் சுதந்திரம் என்பதை உணரவில்லையா? அல்லது அத்துடன் வாழப்பழகி விட்டனரா என்பது கேள்விக்குறி.

இந்நிலையில் தற்போது சீன அரசு புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி தங்களால் சேகரிக்கப்படும் இணையதளப் பயன்பாட்டுத் தகவல்களை வைத்து குடிமக்களைச் சீன அரசு தரம்பிரிக்க இருக்கிறது. இதன் மூலம் அரசு நிர்ணயித்த அளவுகோலுக்கு கீழ் உள்ள மக்களின் அடிப்படைச் சலுகைகளை சீன அரசு நிறுத்தப் போவதாக தெரியவந்துள்ளது.

இந்த தரம் பிரிக்கும் திட்டம் எந்தெந்த அளவுகோல்களை வைத்து நடத்தப்படும் என்பதும் இந்தத் திட்டத்தை சீன அரசு எப்படி செயல்படுத்தப் போகிறது என்பது குறித்தும் தற்போது எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லை. ஆனால் இது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால் மக்களின் தனிமனித சுதந்திரத்திலும் அரசு ஊடுருவும் அபாயம் உள்ளது; தங்களது தகவல் குறித்து அஜாக்கிரதையாக இருக்கும் மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.
-வாஃபிக் ஷா (தொழில்நுட்பச் செய்தியாளர்)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்