விஸ்வ இந்து பரிஷத்தின் ரதயாத்திரையை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”இந்திய திருநாடு சமய சார்பற்ற ஜனநாயக நாடாகும். நம் நாட்டில் அனைத்து சமுதாய மக்களும் சமய நல்லிணக்கத்தோடு அண்ணன்-தம்பி, மாமன்- மச்சான் உறவு பாராட்டி சகோதரத்துவத்துடன் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றோம். சமய நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அவ்வப்போது சிலர் செயல்படுவது நமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தியாவில் ராமராஜ்ஜியம் உருவாக்குவோம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்ற முழக்கத்தோடு விஸ்வ இந்து பரிஷத் எதிர்வரும் 20.03.2018 அன்று ரதயாத்திரை கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு எனது கடையநல்லூர் தொகுதி புளியரை வழியாக வருவதாக அறிவித்துள்ளனர்.

இவ்வறிவிப்பு வந்த உடனேயே திருநெல்வேலி மாவட்டத்தில் பதற்றம் உருவாக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் இந்த ரதயாத்திரை தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரதயாத்திரை தமிழக எல்லையில் நுழையுமானால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் சென்று ரதயாத்திரை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் முடிவு செய்துள்ளனர்.

இதே கோரிக்கை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதோடு, ரதயாத்திரை தடுத்து நிறுத்தும் போராட்டத்திலும் பங்கேற்பதென முடிவு செய்திருக்கின்றனர். முன்பு இதுபோன்ற ரதயாத்திரை நடத்தப்பட்டு இந்திய திருநாட்டில் மதக்கலவரங்கள் உருவாகி பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் சந்தித்து ரதயாத்திரை-ரத்த யாத்திரையாக மாற்றப்பட்ட கொடூர சம்பவம் நம் நெஞ்சங்களிலிருந்து இன்னும் மறையாமல் கரைபடிந்த வரலாறாகவே இருந்து வருகிறது.

இந்த ரதயாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாக தெரிவிப்பது சரியான காரணமாக இருக்க முடியாது. அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை, சமய நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பது தமிழக அரசின் கடமையாகும். எனவே இந்த ரதயாத்திரையை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டுமென மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்