விவேகம் முழுக்க ஆக்ஷன் படமாகி நஷ்டமானதால் குடும்ப ஆடியன்ஸை தியேட்டருக்கு கொண்டுவரும் மெகா பிளானில் சென்டிமெண்டில் மூழ்கி சிவா எடுத்த முத்து விஸ்வாசம். சிவா மூழ்கியதுடன் நம்மையும் மூச்சுத்திணற வைக்கிறார்.

தூக்குதுரை தேனி கொடுவிளார்பட்டியின் பெரிய தலக்கட்டு. வீடு நிறைய சொந்தபந்தம். பத்து வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவில் மற்றவர்கள் குடும்பமாக பங்ககொள்ள, தூக்குதுரை மட்டும் தனிமரமாக நிற்கிறார். பத்து வருஷத்துக்கு முன்னாடி கோபித்துக் கொண்டு போன பொண்டாட்டியையும், அப்போது கைக்குழந்தையாக இருந்த மகளையும் அழைத்துவரும்படி சொந்தங்கள் கெஞ்ச, துரை மும்பைக்கு ரயிலேறுகிறார். தூக்குதுரைக்கு நிரஞ்சனா என்ற டாக்டர் எப்படி மனைவியானார், அவருக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை, அது எப்படி முடிவுக்கு வந்தது என்பதே விஸ்வாசம்.

viswasam-stills-9JPGjpg

தூக்குதுரையாக கறுத்த, வெளுத்த முடிகளுடன் அஜித் இரண்டுவிதமான நடிப்பை தந்திருக்கிறார். ஆச்சரியம் ஆனால் உண்மை. தனது ஸ்பீடு பிரேக் மாடுலேஷனை தவிர்த்து ப்ளோவாக பேசியிருக்கிறார் அஜித். அதிலும் மதுரை ஸ்லாங். அமர்க்களம். இதையே அடுத்தடுத்தப் படங்களுக்கு கன்டினியூ செய்யுங்க. பேரழகி என்று நயன்தாராவிடம் வழிவது, தன்னை மாப்பிள்ளை கேட்டுவரும் நயன்தாராவையும், அவரது அப்பாவையும், வந்த நோக்கம் அறியாமல் இவர் பேசிக் கொண்டு போவதும் செம. இரண்டாவது பகுதியில் பாசமிகு அப்பாவாக நெகிழ்கிறார். காட்சிகள் செயற்கையாக இருப்பதால் நாம் நெளிகிறோம்.

அளவெடுத்து தைத்தது போல் கச்சிதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி வழக்கம்போல் ஸ்கோர் அள்ளுகிறார் நயன்தாரா. அவர் அஜித்தை பிரிவதற்கு ஒரேயொரு பலவீனமான காட்சிதான் படத்தில் உள்ளது. அதனை தனது நடிப்பால் பூசி மெருகேற்றுகிறார். இதேபோல் பல இடங்கள்.

ரோபோ சங்கர், தம்பி ராமையா, விவேக், யோகி பாபு என்று பலர் இருந்தும் காமெடி பக்கத்தில்கூட அண்டவில்லை. தம்பி ராமையாவுக்கு மீசை இல்லைன்னா யார் கேட்கப் போகிறார்கள். அதற்காக இப்படியொரு மோசமான கடா மீசையை வரைய வேண்டுமா? கோவை சரளா படத்தில் யார்? கீச்சு கீச்சென்று கத்தி கடுப்பேற்றுகிறார். ஜெகபதி ஒரு ஐயோ பாவ வில்லன். அவர் அஜித் மகளை கொலை செய்ய முயற்சிப்பதற்கு குழந்தைகள் பின்னணியிலேயே ஒரு காரணத்தை வைத்திருப்பது சரி. அதனை இத்தனை குழந்தைத்தனமாகவா வைக்க வேண்டும்?

உங்கூட இருக்கிறப்போ பாதுகாப்பா உணர்றேன் என்ற மனைவி, உங்கூட மகள் இருக்கிறப்போ பயமா இருக்கு என்று பிரிந்து செல்கிறார். இறுதியில், மகளே அப்பாவுடன் இருக்கிறப்போ பாதுகாப்பாய் இருப்பதாக சொல்வதுதான் படத்தின் கதை என்று விஸ்வாசத்துக்கு கவித்துவமாய் பொழிப்புரை சொல்லலாம். அதாவது புறக்கட்டுமானம் ஓகே. ஆனால் அதை சொல்லியிருக்கும்விதம்…?

தூக்குதுரை ஒரு அடாவடி பேர்வழி, எப்படி? காரணமே இல்லாமல் நாலைந்து பேரை துரத்தி துரத்தி அடிக்கிறார். நயன்தாரா ஒரு டாக்டர், எப்படி? கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மாட்டியிருக்கார். நயன்தாரா மெடிக்கல் கேம்ப் போடுகிறார், எங்கே? பக்கத்தில் வீடோ, ஆள்களோ இல்லாத ஒரு அழகான ஆற்றங்கரையோரம்.

இன்னொரு காட்சி. மனைவியையும், மகளையும் அழைக்க சோகமாக ரயிலில் போகிறார் அஜித். பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தோம் என்கிறார் கூடப்போகும் தம்பி ராமையா. உடன் பிளாஷ்பேக் காட்சியில் அஜித்தை காட்டுகிறார்கள். தம்பி ராமையா உச்ச குரலில் தூக்கு துரைன்னா அட்டகாசம், தூக்குதுரைன்னா அடாவடி என்று கத்துகிறார். எங்கே? அதே ரயிலில். இங்கே பிளாஷ்பேக்கில் பாட்டு தொடங்குகிறது. பாட்டுக்கு இப்படியொரு லீடை இதுவரை பார்த்ததில்லை. அதேபோல், அஜித் மகளை கொல்ல கத்தியுடன் துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அரை இஞ்ச் இடைவெளியில் அஜித் கத்தியை தடுத்து காப்பாற்றிக் கொண்டேயிருக்கிறார். ஒரு காட்சியில் மகள் பொதுக்கழிப்பறைக்குள் மாட்டிக் கொள்கிறாள். அடியாள்கள் கதவை உடைக்கிறார்கள், கடப்பாரையால் சன்சேடை இடிக்கிறார்கள், சிலர் கூரையேறி கூடத்தால் அடிக்கிறார்கள், அட, அண்டர்கிரவுண்டில் இருந்துகூட கடப்பாரை போடுகிறார்கள். ஐயா இயக்குநரே… அந்தப் பெண் பயந்திச்சோ இல்லியோ நாங்க பயந்திட்டோம். சரி, இத்தனை அடாவடி எதற்கென்று பார்த்தால், அந்த பத்து வயது பெண் தனது அம்மாவிடம், அம்மா இவர்கூட இருக்கிறப்போ இதுவரை இல்லாத ஒரு ஃபீலிங் வருதுன்னு சொன்னேனில்லியா. அது என்னன்னு தெரிஞ்சிடுச்சி. உங்கூட இருக்கிறப்போ நான் பாசமா ஃபீல் பண்றேன். இவர்கூட இருக்கிறப்போ பாதுகாப்பா ஃபீல் பண்றேன் என்கிறது. ஆமாம், பத்து வயசு பெண் பேசுகிற டயலாக் இது.

பாடல்கள் அதன்போக்கில் வந்து போகின்றன. இரண்டு பாடல்கள் கேட்க வைக்கின்றன. பின்னணி இசையில் சகல இசைக்கருவிகளும் ஒலிக்கின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங்கில் குறை இல்லை. படத்தில் வேலையில்லாதது காஸ்ட்யூமருக்கு. நயன்தாராவுக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகாக பொருந்துகிறது என்றால், அஜித்துக்கு எந்த காட்சியிலும் ஒரே வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி (ஒருவர் எழுபது பிளஸ் வயதில் நாற்பது பிளஸ்ஸாக காட்ட மெனக்கெடுகிறார். இவரோ நாற்பது பிளஸ் வயதில் எழுபது பிளஸ் நரையில், இப்படிதான் இருப்பேன் வேணும்னா பார்த்துக்கோ என்கிறார். என்னே ஐரணி). கறுத்த தாடி தலைமுடியுடன் இருக்கும் அஜித்தும் அவரது அல்லக்கைகளும் பத்தே வருஷத்தில் நரைத்து கிழப்பருவம் எய்ய, நயன்தாராவும், அவருடன் இருப்பவர்களும் பத்து வருடத்துக்கு முன் பார்த்த அதே இளமையுடன் இருக்கிறார்கள், கடவுளுக்கு தோத்திரம்…!

கிளைமாக்ஸில், மூளையில் ரத்தக்கட்டியுடன், பிழைக்க முடியுமா என்ற நிலையில் வில்லனிடம் உதை வாங்குகிறார் அஜித். ரத்த சிதறலாக கிடக்கும் அஜித்துடன் லாஜிக்கும் ரத்தம் கக்கி கிடப்பதை உங்களால் பார்க்க முடிந்தால், ஸாரி இது உங்களுக்கான படமில்லை. ஐயோ பாவம் மகளுக்காக எப்படி அடிவாங்குகிறார் என்று கண்கலங்கினால், நீங்கதான் விஸ்வாசத்தின் ஆடியன்ஸ். இரண்டாம்வகையினர் தமிழகத்தில் அதிகம் என்பதால் விஸ்வாசம் வெற்றிபெறும். இந்த வெற்றி விமர்சனத்துக்கும் நிதர்சனத்துக்கும் இடையிலான வித்தியாசம்.

விஸ்வாசம் – சென்டிமெண்ட் ஓவர்டோஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here