விஸ்வரூபம் 2 – விமர்சனம்

0
249

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. நாம் படம் பார்த்த திரையரங்கில் 50 சதவீதமே ஆள்கள் வந்திருந்தார்கள். படத்தின் பெயர், கமல்ஹாசனின் பெயர் வருகையில் ஒரு கைத்தட்டல், விசில் சத்தம் இல்லை. பின்ட்ராப் சைலன்ஸ். 

தனது மக்கள் நீதி மய்யத்தை விளம்பரப்படுத்தி படத்தை ஆரம்பிக்கிறார் கமல். விஸ்வரூபத்தில் இந்தியரான கமல் ஆப்கானில் அல்கைதா தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பார். ஆனால், உண்மையில் அவர் ஒரு ரா உளவாளி என்பது தீவிரவாதி ராகுல் போஸுக்கு தெரிகையில் காலம் கடந்திருக்கும். ராகுல் போஸால் சுடப்படும் கமல் கடைசியில் அமெரிக்கா வந்து நியூயார்க் நகரை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் ராகுல் போஸின் திட்டத்தை முறியடிப்பார். 

இரண்டாம் பாகத்தில் முதல்பாகத்தில் விட்டுப்போன கதையின் முடிச்சுகளை அவ்வப்போது விடுவிக்கிறார். கமல் யார்? எப்படி தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டார்? கமலின் அம்மா எங்கு இருக்கிறார்? இப்படி சில தகவல்கள். இதைத்தவிர புதிதாக என்ன என்று பார்த்தால் நியூயார்க்கை காப்பாற்றியது போல் லண்டன் மாநகரை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். அதுவும் ராகுல் போஸின் கைங்கர்யம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இந்தியாவில் வைத்து கமலை ராகுல் போஸ் கொலை செய்ய முயற்சிக்க, அதனை முறியடிக்கிறார். சுபம்.

ஒரு சிக்கலான படத்தின் இரண்டாம் பாகம் எனும் போது எத்தனை எளிமையாகவும், தொடர்பு அறுந்து போகாமலும் கதையை சொல்ல வேண்டும். ஆனால், கமல் திரைக்கதையில் அதனை கோட்டைவிட்டிருக்கிறார். தேவைக்கு அதிகமாகவே முதல்பாகத்தின் காட்சிகளை படம் முழுக்க இட்டுநிரப்பியதை பார்க்கையில், இரண்டாம் பாகத்துக்கு என எந்த சரக்கும் இல்லாமல் களத்தில் இறங்கியது பளிச்சென்று தெரிகிறது.

யுகே வரும் கமல் அண்ட் டீமை தீவிரவாதிகள் கொல்லப் பார்க்கிறார்கள். முக்கியமான அதிகாரி கொல்லப்படுகிறார். அதைத்தொடர்ந்து தீவிரவாதிகள் கடலுக்கடியில் வைத்திருக்கும் குண்டை ஜஸ்ட் லைக் தட் கண்டுபிடித்து கமல் அண்ட் டீமே அதனை எடுக்க முயற்சிக்கிறது. அதற்கு உதவிக்கு முக்கியமான ஆள் வரவேண்டும். அவர் என்னடாவென்றால், ட்ராபிக்கில் இருக்கிறேன், சரியான நேரத்துக்கு வரமுடியுமா தொpயலை என்று ஏதோ பர்த்டேக்கு கேக் வெட்ற நேரத்தில் வர முடியாது என்பது போல் பேசுகிறார். ஐயா லண்டனே காணாமல் போகிற சமாச்சாரம், அந்த கவர்மெண்ட் இப்படியா தூங்கிக் கொண்டிருக்கும்? 

படத்தின் பிற்பகுதியில் கமலின் அம்மாவை காட்டுகிறார்கள். கமலின் சின்ன வயது காட்சிகள், அவருக்கு நடனம் எப்படி பரிட்சயமானது என்பதற்கான விடைகள் கிடைக்கின்றன. வில்லன் பெரிதாக ஏதாவது செய்வார் என்று பார்த்தால் ஹீரோயினை கடத்தி வைத்து ஹீரோவை மிரட்டுகிறார். பார்த்ததும் பட்டென்று போடாமல் கட்டி வைத்து… கழுத்தில் பாம் வைத்து… தப்பிக்க அவகாசம் தந்து… யப்பா முடியலை. 

படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று டெக்னிகல் ஏரியா ஸ்ட்ராங்காக உள்ளது. பின்னணி இசையைவிட பாடல்களில் ஜpப்ரான் வலிமையாக வெளிப்படுகிறhர். ஒரு ஸ்பை த்ரில்லரில் கொஞ்சம் கொஞ்சமாக மர்மத்தைவிடுவித்து மெல்ல ‘பெப்’ ஏற்றி இறுதியில் ஆக்ஷன் காட்சிகளில் பார்வையாளனை பிரமிக்க வைக்க வேண்டும். இதில் த்ரில்லும் இல்லை பெப்பும் இல்லை. 

படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் குறிப்பாக கமலின் அம்மாவாக வருகிறவர் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிரச்சனை கமல் மட்டும். ஒருசில காட்சிகள் தவிர பெரும்பாலானவற்றில் கண்ணை உருட்டி, பாரு நான் எப்படி நடிக்கிறேன் என்று காட்டிக் கொண்டேயிருக்கிறார். குறிப்பாக தனது அம்மாவை சந்திக்கும் காட்சியில். அல்சைமர் அம்மா மகன் நினைவில் கரைந்து போக, இவர் அம்மாவைப் பார்க்கிற பார்வை… இப்போது நாடகத்தில்கூட அப்படி நடிப்பதில்லை. கமல் சினிமாவுக்கான நடிப்பை குறைவாகவே தந்திருக்கிறார் என்ற பாலுமகேந்திராவின் விமர்சனம்தான் நினைவுக்கு வருகிறது. 

ஆண்ட்ரியா, பூஜா குமார் இருவரது பொறாமை கலந்த உரசல்கள் நன்றாக வந்துள்ளன. யுகே இந்திய எம்பஸி அதிகாரியான ஐயரை கமலும், ஆண்ட்ரியாவும் சேர்ந்து கலாய்க்கும் இடம் கிளாஸ். படத்தின் ஒரே நல்ல காட்சி என்று தாராளமாகச் சொல்லலாம். 

படம் எதைப்பற்றியது என்ற தீர்மானமில்லாமல் அலையும் திரைக்கதையே இதன் பிரதான குறை. இது ஸ்பை த்ரில்லர் என்றால், வில்லன் எப்படி நாசகார திட்டத்தை தீட்டுகிறான், நாயகன் எப்படி அதனை கண்டுபிடிக்கிறான், வில்லனை கடந்து எப்படி அதனை முறியடிக்கிறான் என்ற திசையில் பயணித்திருக்க வேண்டும். ஆனால், இதனை சட்டென்று முடித்துவிட்டு, வாய்ஸ் ஓவரில் கடந்து செல்ல வேண்டிய கமல், ஆண்ட்ரியாவின் ராணுவ பயிற்சி காட்சிகளை அலுக்கிறவரை காட்டுகிறார்கள். இதேபோல் விரிவாக காட்ட வேண்டியதை சுருக்கியும், முக்கியமில்லாததை விரித்தும் கதையை கந்தலாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் எடிட் செய்ததையும், இரண்டாவதாக எடுத்த மிச்சத்தையும் ஒட்டுப் போட்டு ஒப்பேற்றியதில் வந்த விளைவு இது.

படத்தின் ஆரம்பத்தில் வரும், இந்தப் படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை அறிவிப்பில் பளிச்சென்று எழுத்துப்பிழை தெரிகிறது. அதேபோல் ஆங்கில வசனங்களுக்கு தரப்படும் தமிழ் சப் டைட்டில் ஒவ்வொன்றிலும் எழுத்துப்பிழை. விஸ்வரூபம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டாம். ஒரு கோடியில் எடுக்கும் படத்தில்கூட இதுபோன்ற மலினமான பிழைகள் இருக்காது. கண்டிக்க வேண்டிய தவறு இது. இந்தப் படத்தில் கமலின் சின்சியாரிட்டி எத்தகையது என்பதற்கு இது சின்ன உதாரணம். 

விஸ்வரூபம் 2… கமலின் டிசாஸ்டர் படங்களில் இது முதலாவதாக இருக்கப் போகிறது. 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்