டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்செங்கோட்டில் டிஎஸ்பி-யாக இருந்தவர் விஷ்ணுபிரியா. 2015 செப்டம்பரில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார். விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக கொண்டிருக்கும் போதுதான் விஷ்ணுபிரியாவின் மரணம் நிகழ்ந்தது.

விஷ்ணு பிரியா வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை செய்து கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை. வழக்கை கைவிடுவதாக தெரிவித்திருந்தது.

இதற்கு எதிராக விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி எதிர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவித்துள்ளது.

விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்வதற்கு முன்பு உயரதிகாரியிடம் பேசியது குறித்து அறிக்கையில் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள் அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்