காக்கிச் சட்டை. பாக்கெட்டில் பிஸ்டல், வாக்கி டாக்கி என பெண்கள் காவல் துறையில் சாதித்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம், சமத்துவம் எனபது இல்லை. டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் மரணம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. விஷ்ணுப்பிரியாவின் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று, காவல் துறையில் ஆண், பெண் சமத்துவத்தைப் பற்றியது. கோகுல்ராஜின் மரணம் தொடர்பாக விஷ்ணுப்பிரியாவுக்கு அழுத்தம் தந்த மேலதிகாரிகள் அனைவரும் ஆண்கள். எல்லாத் துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கம் இருப்பதுபோல் காவல் துறையிலும் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. காவல் துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு, மேலதிகாரிகளின் அழுத்தம், பெண்களுக்கான வாய்ப்புகள் ஆகியவை எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பற்றி தமிழகத்தில் குறிப்பாக சென்னையின் பல பெண் காவல் கண்காணிப்பாளர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். சிலர் பேசத் தயங்கினாலும் சில பெண் காவலர்கள் ஆண், பெண் சமத்துவம் இந்தத் துறையில் இல்லை என்பதை ஒப்புக்கொள்கின்றனர். சில பெண் கண்காணிப்பாளர்களின் கருத்துகளை கேட்போம்.

முத்தேழு, தி.நகர் காவல் நிலையம்

”பெண்கள் மென்மையானவர்கள். காவல் துறையாகவே இருந்தாலும் இதில் இருக்கக்கூடிய பெண்களில் பாதிப்பேர் மென்மையாகத்தான் இருக்காங்க. ஆனால், ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்கள். ஆனால், இந்தத் துறையில ஊக்கம் இல்லை. ஒரு பெண் நல்லா பணிபுரியிறாளா அவள தட்டிக் கொடுத்து மேல தூக்கிவிடணும். எங்களுக்கு வழிகாட்டியா மேலதிகாரிகள் இருக்கணும். ஆனால், அந்த ஊக்கமும் வழிகாட்டுதலும் கிடைக்குதானு சந்தேகம்தான். அந்த ஊக்கக் குறைவுதான் விஷ்ணுப்பிரியாவின் மரணத்துக்குக் காரணம். ஆனால், நமக்கான வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படும்போது அதவிடக்கூடாது அதுக்காக தொடர்ந்து போராடணும். காவல் நிலையத்துல எங்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுதுன்னா, அத எல்லா மேலதிகாரிகள்கிட்டயும் சொல்ல முடியாது. நாம நல்லா அந்த அதிகாரிகள்கிட்ட பழகிருந்தா சொல்லலாம். பெண் அதிகாரிகள் நேர்மையா இருந்தா எந்தத் தொந்தரவும் வராதுனு நம்பினோம். ஆனால், அப்படிப்பட்ட நல்ல நேர்மையான விஷ்ணுப்பிரியா இறந்தது எங்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கு.”

நவநீதம், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்

”35 வருடமாக காவல் துறையில் இருந்தேன். எல்லா வகையான மனிதர்களுக்குமிடையில் வேலை செய்திருக்கேன். நல்லவங்க, கெட்டவங்க, பெண்களைத் தவறாக நடத்துபவர்கள், லஞ்சம் வாங்குகிறவர்கள் என அனைத்து விதமான மேலதிகாரிகளையும் பார்த்திருக்கன். எல்லாத் துறையிலயும் பாலின வேறுபாடு இருக்கும். இப்பக் காவல் துறையில நேர்மையாக வேலை செய்யும் பெண்களுக்குப் பாதிப்புகள் ஏற்படுது. ஆணாதிக்கம் காவல் துறையிலயும் இருக்கு. வீட்ல இருக்கு. நான் ஒரு அதிகாரி. அதுக்காக, என் வீட்ல காலையில எழுந்து எனக்காக எதாவது வேலை செய்வாங்களா? நான்தான் செய்யணும். அடிப்படையிலேயே பெண்களுக்கு அங்கீகாரம் வீட்லயும் பணியிடங்கள்லயும் கிடைப்பது இல்ல.”

நித்யகுமாரி, ஆவடி காவல் நிலையம்

”காவல் துறை என்றாலே பொதுவாகவே அதிக அழுத்தம் தரக்கூடியதுதான். எப்பயுமே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்தத் துறை என்றால் நெருக்கடி ஏற்படும்தான். மேலதிகாரியாகவே இருந்தாலும் அவர்கள் சிலருக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊடகம், அரசாங்கம் என அவர்களும் சிலருக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால், விஷ்ணுப்பிரியாவின் மரணத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. நல்ல அதிகாரி இறந்துட்டாங்கன்னு நாங்க வருத்தப்படுறோம்.”

அகிலா, அடையாறு காவல் நிலையம்

“இந்தத் துறைக்கு வந்துட்டாலே தைரியம் இருக்கணும். முக்கியமா மன தைரியம். கஷ்டம் இருக்கும் எல்லாருக்கும். குடும்பத்தப் பாக்கவே முடியாது இந்தத் துறைக்கு வந்துட்டா. பிள்ளைங்களுக்குப் பாடம் கூட சொல்லிக் கொடுக்க முடியாது. வேலை வேலைனு இருக்கணும். ஆனால், அப்படி இருந்தாலும் நமக்குப் பேர் வராது. இதெல்லாம்கூட சில நெருக்கடிய உண்டாக்கும். அதனால், யார் என்ன சொன்னாலும் நம்ம முன்னேற்றத்த நோக்கிப் போய்க்கொண்டே இருக்கணும்.”

செந்தில்வடிவு, கிண்டி காவல் நிலையம்

“எங்களுக்கு நெருக்கடி ஏற்படும்போது அதப்பத்தி இயல்பா சிந்திக்கிறதுக்கு நேரம் இல்லை. நேரம் கொடுக்குறது இல்லை. அந்த நேரம் கொடுத்தாலே போதும். எல்லாத்துக்கும் பதில் வந்துரும்.”

யுவராணி, மயிலாப்பூர் காவல் நிலையம்

”பெண் காவலர்களுக்கு இந்த மாதிரி நெருக்கடி வரும்போது மேலதிகாரிகள் திட்டுவாங்க. இது எல்லா இடத்துலயும் இருக்கு. நான் என்னோட மேலதிகாரிகள் பேச்சக் கேட்டு நடக்கணும். இல்லன்னா திட்டுவாங்க. நானே பல திட்டுக்கள் வாங்கியிருக்கேன். சகிப்புத்தன்மை இருக்கணும். மன தைரியமும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் இந்தத் துறைக்கு வரவே கூடாது. இனிமேல் வர்ற காலங்கள்ல எல்லாம் நல்லா படிச்ச பொண்ணுங்கதான் இந்தத் துறைக்கு வருவாங்க. அவங்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை அதிகமா இல்ல. அப்படி இருக்கும்போது இந்த மாதிரியான விபரீத முடிவுகள அவங்க எடுப்பாங்க. அப்படி நடக்காம இருக்க பொறுமை ரொம்ப முக்கியம்.”
பல பேர் இதைப்பற்றி பேசவே தயங்குகிறார்கள். மேலதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினால், “இதைப்பற்றி பேச மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்கிறார்கள். இவர்கள் மத்தியில் யாரையும் யோசிக்காமல், “விஷ்ணுப்பிரியாவின் மரணம் மேலதிகாரிகள் நெருக்கடியாலே நிகழ்ந்தது” என தைரியமாகச் சொன்ன விஷ்ணுப்பிரியாவின் தோழி மகேஸ்வரியைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இவர்கள் பேசியதிலிருந்து பல விஷயங்கள் தெளிவாகிறது. ஒன்று, எந்தத் துறையாக இருந்தாலும் பெண்கள் மென்மையாக இருக்க வேண்டும் எனப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். காக்கிச்சட்டை அணிந்தாலும், ”நீ பெண்தான்” எனக்கூற இந்த சமூகம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. இரண்டாவது, காவல் துறையில் எல்லோருக்கும் மனஅழுத்தம் இருக்கிறது. குடும்பப் பொறுப்பு என்ற ஒன்று இருப்பதால் பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. காவல் துறையில் மேலதிகாரிகள் சொல்லும் பேச்சைக் கேட்டு நடப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எந்தப் பெண் காவலர் சுயமாக யோசித்துச் சுதந்திரமாக செயல்படுகிறார்களோ அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

”நாம உண்டு, நம்ம வேலை உண்டு” என இருப்பதே தவறுதான். ஆனால் அப்படி இருப்பவர்களுக்குத்தான் தொந்தரவுகள் வருவதில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் விஷ்ணுப்பிரியா போன்ற நேர்மையான பெண் அதிகாரி இறந்ததும், மகேஸ்வரி மனநிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் எதிர்பார்த்ததே. மேலும், மரணம் நிகழ்ந்தவுடனேயே எஸ்பி செந்தில்குமார், “இந்த மரணத்தில் எந்தவிதக் குழப்பமும் இல்லை” என்கிறார். ஒரு பெண் காவல் அதிகாரியின் மரணத்தை எவ்வளவு எளிதாக மேலதிகாரி எடுத்து கொண்டார் என்பதை இது காட்டுகிறது. எப்போது அடிப்படையிலேயே பாலின சமத்துவமும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுமோ அப்போதுதான் விஷ்ணுப்பிரியா போன்ற கண்ணியமான காவல் அதிகாரிகளை நாம் இழக்க மாட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here