நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாகக் கூறி ரூ. 47 லட்சம் மோசடி செய்த திரைபட இயக்குநர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் நரேஷ் கோத்தாரி. இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவரிடம் அறிமுகமான இயக்குநர் வடிவுடையான்,  கடந்த 2016-ம் ஆண்டு விஷாலை வைத்து ரூ.7 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க உள்ளதாகவும், அதற்காக விஷாலிடம் கால்ஷீட் பெற்றுள்ளதற்கான ஆவணங்களையும் காட்டியுள்ளார்.

அதனை நம்பி நரேஷ் கோத்தாரி வடிவுடையானிடம் 3 தவணைகளாக ரூ.47 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் வடிவுடையான் சொன்னபடி படம் எடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனை அடுத்து சந்தேகமடைந்த நரேஷ் கோத்தாரி விஷால் தரப்பில் கால்ஷீட் குறித்து கேட்டதற்கு அது போன்ற எந்த கால்ஷீட்டும் வடிவுடையானுக்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நரேஷ் கோத்தாரி வடிவுடையான் தன்னை மோசடி செய்துவிட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குநர் வடிவுடையான் ஏற்கெனவே பொட்டு, சௌகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.