மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,146.86 கோடி நிலுவை வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மிக முக்கியப் பிரமுகர்கள் (விவிஐபிக்கள்) பயணத்துக்காக தனி விமானம் ஒதுக்கிய வகையில் இத்தொகை நிலுவை வைத்துள்ளது மத்திய அரசு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலமாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அந்த நிறுவனம் கடந்த 26-ஆம் தேதி அளித்த பதிலின் படி, மிக முக்கியப் பிரமுகர்கள் பயணத்துக்கு தனி விமானம் ஒதுக்கிய வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ரூ.211.17 கோடி நிலுவை வைத்துள்ளதாக கூறியுள்ளது.

அதேபோல், அமைச்சரவைச் செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ரூ.543.18 கோடியும், வெளியுறவு அமைச்சகம் ரூ.392.33 கோடியும் நிலுவை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கான விமானம் ஒதுக்கியது மற்றும் மீட்புப் பணிகளுக்கான விமானம் ஒதுக்கியதற்கான கட்டணங்களை மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவை வைத்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் தகுந்த வசதிகளைச் செய்துள்ளது.

இந்த நிலுவைத் தொகைகள் கடந்த ஜனவரி 31-ஆம் தேதியின் படி ரூ.325 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.1,146.86 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தத் தனி விமானத்துக்கான கட்டணங்களை, அரசு கருவூலத்திலிருந்து பாதுகாப்புத் துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம் ஆகியவை செலுத்தி வருகின்றன.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை ரூ.50,000 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here