தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 110 டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்: ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ள சாலையை கடந்துதான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். அத்துடன், வேறு இடத்தில் இயங்கி வந்த குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை அதிகாரிகள், விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர். இதன் காரணமாக விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, அந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை என கேள்வி எழுப்பி தமிழக அரசைப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஏன் சிசிடிவி கேமிராக்களை பொருத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசுத் தரப்பில், கண்காணிப்புக் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், தமிழகம் முழுவதும் 110 டாஸ்மாக மதுபான கடைகள் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் உரிய அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்பட்டு வரும் 110 டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மதுக்கடைகளை மூடியதற்கான அறிக்கையை வரும் திங்களன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here