விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

0
348

நடப்பு பருவத்தில் நேரடி நெல் சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் 5 லட்சம் ஏக்கருக்கு உழவு மானியம் வழங்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யுமாறு, விவசாயிகளை கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார். நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும்போது, சுமார் 40 முதல் 45 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகிவிடும் என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நேரடி நெல் விதைப்பு முறையை ஊக்குவிக்கும் வகையில், சிஆர்.1009, சிஆர்.1009-சப்.1″, கோ 50, ஏடிடி 50, டி.கே.எம் 13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேளாண்துறை உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடப்பு பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் உழவு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, 5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உழவு மானியம் வழங்க 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, உள்ளூர் பாசன வசதியின் துணையோடு, நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யும் இதர மாவட்ட வேளாண் பெருமக்களும், உழவு மானியத்தை பெற்று , நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெறுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here