அமெரிக்க படைப் புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட மக்காசோள விவசாயிகளுக்கு 186 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை 4 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சேலம் மட்டுமல்லாமல் நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட17 மாவட்டங்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 216 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட மக்கா சோளப்பயிர்கள் புழுக்கள் தாக்கி சேதம் அடைந்துள்ளதாகவும், இதனால் 3 லட்சத்து 7 ஆயிரத்து 495 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது.

பூச்சித்தாக்குதலை பேரிடராக அறிவித்து அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, மக்காசோள பயிரில் புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 186 கோடியே 25 லட்சத்து 7 ஆயிரத்து 782 ரூபாய் இழப்பீடாக வழங்க ஒதுக்கிடு செய்துள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு ஒதுக்கீடு செய்த இந்த தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 வாரங்களில் வழங்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த தொகையை உறுதியளித்தப்படி 4 வாரங்களில் விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here