விவசாயிகளின் பிரச்னை குறித்துப் பாப் பாடகர்களுக்கு புரிகிறது; மோடி அரசுக்கு புரியவில்லை – ராகுல் காந்தி

Rahul Gandhi alleged that the three laws are designed to destroy the agriculture system in India and give the entire business to 2 to 3 friends of Prime Minister Narendra Modi.

0
171

விவசாயிகளின் பிரச்னை குறித்துப்  பாப் பாடகர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையிலும் இந்தப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எந்த விதத்திலும் அக்கறை காட்டவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும், குறிப்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்தும் இன்று (பிப்.22) காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளாவில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் உணர்கிறார்கள்.. ஆனால் தலைநகரில் இருக்கும் அரசால் விவசாயிகளின் வலியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. விவசாயிகளின் பிரச்னை குறித்து பல்வேறு பாப் நட்சத்திரங்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசுக்கு விவசாயிகளின் பிரச்னையை சரி செய்வதில் அக்கறை இல்லை” என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.

முன்னதாக, கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இன்னும் ஒரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறும் கேரள மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். 

டெல்லியில் 87ஆவது நாளாக இன்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இதுவரை மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 18 மாதங்கள் வரை விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இருப்பினும். விவசாய சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here