ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடந்த ஊழலை பாதுகாப்புத் துறை அமைச்சர் சீதாராமன் மறைக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்ச ஏ.கே. ஆண்டனி கூறியுள்ளார். மேலும் ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு விட்டார் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

2000-த்தில் அப்போது ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடம், விமானப் படை தரப்பில் இருந்து 126 போர் விமானங்கள் படைக்கு வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கப்பட்டது. நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் எதிரிகளின் அச்சுறுத்தல் அதிகமாகி வந்த சூழலில் நவீன வான் போர் கருவிகளைக் கொண்டிருப்பது முக்கியமான ஒன்றாகும்.

தற்போதுள்ள சூழலில் நாட்டின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகி விட்டன. எனவே விமானப் படைக்கு 126-க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்க வேண்டிய சூழலில் உள்ளோம். ஆனால் தேவைக்கு ஏற்ப செயல்படாமல் மோடி அரசானது வெறும் 36 விமானங்களை மட்டுமே வாங்குவதற்கு ஒருமனதாக ஒப்பந்தம் செய்திருப்பதன் மூலம், நாட்டின் பாதுகாப்பினை கேள்விக்குறிக்குள்ளாக்கியிருப்பதுடன், விமானப் படைகளின் போர் தயாரிப்பு நிலையையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்ததைவிடவும், 9 சதவீதம் குறைவான விலையிலையே ரபேல் விமானங்களை வாங்க பாஜக ஒப்பந்தம் செய்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியிருந்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட குறைவான விலைக்கு வாங்குவது உண்மை என்றால் கூடுதலாக விமானங்களை வாங்க வேண்டியது தானே, ஏன் 126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்குகிறீர்கள் என ஏ.கே.ஆண்டனி கேள்வி எழுப்பினார்.

பொது நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியில் நிர்மலா சீதாராமன் இறங்கியிருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு ஒரு போர் விமானத்தை ரூ.1,670 கோடி விலையில் வாங்குகிறது .

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது ரகசிய ஒப்பந்தம் என்பதால் விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு கூறி வருகிறது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.

பாதுகாப்பு கொள்முதல் குழு 126 விமானங்களை வாங்குவதற்காக செய்த ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிந்துரையானது தற்போதும் நடைமுறையில் உள்ளது. எனவே எப்போது இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும், விமானங்களின் எண்ணிக்கையினை குறைத்தது யார் என்றும் தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here