இன்று முதல் தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இது குறித்த அறிக்கையில் தமிழகஅரசு, “பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ளது.

இந்தஅறிவிப்பினைத் தொடர்ந்து இன்று(திங்கள்கிழமை) அனைத்து ரக ஆவின் பால் பாக்கெட்டுகளும் விலை உயர்ந்துள்ளது. இதுவரை ரூ.22.50 க்கு விற்பனை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற பிரிமியம் பால் பாக்கெட் இன்று முதல் ரூ. 25.50க்கு விற்பனை செய்யப்பட்டது. (அட்டைதாரர்களுக்கு ரூ.24.50)

ரூ.20.50 க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை நிற கிரீன்மேஜிக் பால் பாக்கெட் இன்று ரூ.23.50 க்கு விற்கப்பட்டது. (அட்டைதாரர்களுக்கு ரூ.22.50)

ரூ.18க்கு விற்பனை செய்யப்பட்ட நீல நிற ‘நைஸ்’ பால் பாக்கெட் ரூ.21க்கு விலை உயர்ந்துள்ளது. (அட்டைதாரர்களுக்கு ரூ.20).

இதுவரை ரூ.17க்கு விற்பனை செய்யப்பட்ட டயட் பால் பாக்கெட் இப்போது ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது (மாத சந்தா அட்டைதாரர்களுக்கு ரூ.19.50)

பால் விலை ரூ.6 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்கள் இனி மாதந்தோறும் லிட்டருக்கு கூடுதலாக ரூ.180 கட்ட வேண்டும்.

ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதேபோல் டீ கடைக்காரர்களும், டீ, காபி விலையை விரைவில் உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆவின் பாலகங்களில் ஒரு கிலோ நெய் ரூ.460க்கு விற்பனையாகி வருகிறது. வெண்ணெய் அரைகிலோ ரூ.220 க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் நெய், வெண்ணெய், பால் பவுடர் விலை உயரும் என தெரிகிறது. இதுபற்றி ஆவின் அதிகாரிகள் விரைவில் விலையை முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று ஆவின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)