சென்னை – புதுச்சேரி – கன்னியாகுமரி இடையே நீர்வழி போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள அரும்பார்த்தபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை 45ல் கட்டப்பட்டுள்ள ஒரு கிலோமீட்டர் நீள பாலத்தை காணொலி மூலம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ரூ 35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், வில்லியனூர், அரியூர், கண்டமங்கலம், மானவெளி, கோரிமேடு, ஆரோவில் மற்றும் அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து காணொலி மூலம் உரையாற்றிய நிதின் கட்கரி, போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தவும், பாதுகாப்பான பயணத்துக்காகவும், ரயில் தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்கவும், ரயில்களின் தடையில்லாத போக்குவரத்துக்காகவும் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தேசிய நெடுஞ்சாலை-45 நான்கு வழி சாலையாக மாற்றப்படுவதன் மூலம் கன்னியாகுமாரி வரை தடையில்லா போக்குவரத்துக்கான வழி ஏற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ‘புதுச்சேரி – சென்னை இடையே நீர்வழிப் போக்குவரத்தை அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அது எனது கனவு திட்டமும் தான்.விரைவில் சென்னை – புதுச்சேரி – கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்கப்படும். அத்துடன் புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் வடமாநிலங்களில் முக்கிய நகரங்களும் நீர்வழி போக்குவரத்து மூலம் இணைக்கவும் மத்திய அரசு உதவி செய்யும்” என்றார்.