ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. கணினி இணயதள உலகத்தை சாட்டிங், ஜி-மெயில், மெசேஞ்சர், பேஸ் புக் ஆகியவை ஆட்டிப் படைப்பதைப் போல, ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களை வாட்ஸ் ஆப் சேவை வசீகரித்தது.

 வாட்ஸ் ஆப்பைப் போன்ற வேறு செயலிகள் இருந்தாலும், மக்களிடையே பிரபலமாகாத காரணத்தால் அவை வாட்ஸ் ஆப்பிற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பேஸ் புக் நிறுவனம் 2014-இல் வாங்கியதில் இருந்து, இளைஞர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால், இந்தியாவில் 20 கோடியாக இருந்த வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2019-இல் 40 கோடியாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது.
 இதன் மூலம் வாட்ஸ் ஆப் சேவை இல்லாத ஸ்மார்ட் போன் இல்லை என்பதாகியுள்ளது.

 வாட்ஸ் ஆப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் 2015-இல் கணினி வாட்ஸ் ஆப் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், ஸ்மார்ட் போனில் இண்டர்நெட் ஆன் செய்யப்பட்டு இருந்தால்தான் கணினி வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்த முடியும். வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களுக்கு இடையூறாக இருந்துவரும் இந்த முறையால், வாட்ஸ் ஆப் கணினிப் பயன்பாடு பெருமளவில் பிரபலமாகவில்லை. இதற்கு தீர்வு காண வாட்ஸ் ஆப் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. ஸ்மார்ட் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தாலும், கணினியில் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கைப் பயன்படுத்தும் புதிய செயலியை உருவாக்கி வருவதாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், ஓர் வாட்ஸ் ஆப் கணக்கை ஸ்மார்ட் போன் மட்டுமில்லாமல் டேப், கணினி போன்ற பல்வேறு கருவிகளிலும் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

 வாட்ஸ் ஆப் வர்த்தக கணக்கைப்போல், “வாட்ஸ் ஆப் “மணி’’ எனும் பணப் பரிமாற்றம் செய்வதற்கான பிரத்யேக செயலியை வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மக்களின் வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்ப வாட்ஸ் ஆப் நிறுவனம் பல்வேறு வகையிலான சேவைகளை அவ்வப்போது அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால், பயன்பாட்டாளர்களின் தகவல்களின் பாதுகாப்புக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதி அளித்தால்தான் மக்களிடம் நிலைத்திருக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here