விமான எரிபொருளை (ஏடிஎஃப்) சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவருவது தொடர்பான ஆலோசனை அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு அதிக வரி கிடைத்து வருவதால் அவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில், ‘அசோஸாம்’ தொழிலக கூட்டமைப்புடனான பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போத ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங் கூறுகையில், “கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
அவற்றின் காரணமாக விமானப் போக்குவரத்துத் துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. உரிய நேரத்தில் வங்கிகளும் ஆதரவளிக்க மறுக்கின்றன. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு உடனடித் தீர்வு காண வேண்டும்” என்றார்.
அவருக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதில் மத்திய அரசு மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில அரசுகளும் இடம்பெற்றுள்ளன.
மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே எந்தவொரு பொருளையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடியும். விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு விமானப் போக்குவரத்துத் துறையில் மட்டுமல்லாமல், மற்ற துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனாவுக்கு முந்தைய நிலையை விமானட் போக்குவரத்துத் துறை இன்னும் எட்டவில்லை. அத்துறைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக வங்கிகளிடம் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது” என்றார்.