விமான உதிரிபாகங்கள் கொள்முதலில் ஊழல் ; மத்தியப் பாதுகாப்புத் துறை மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் உக்ரைன் அரசு

0
222

ஏஎன்-32 விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்கியதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி லஞ்சம் வழங்கியதாக உக்ரைன் அரசு குற்றச்சாட்டு கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உக்ரைன் தேசிய ஊழல் எதிர்ப்பு அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது .

இந்திய விமானப்படையின் போக்குவரத்துப் பிரிவில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர ரக ஏஎன்-32 வகை விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி உக்ரைன் அரசின் (Spetstechno export) ஸ்பெட்ஸ்டெக்னோ எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும், மத்திய பாதுகாப்பு துறைக்கும்(விமானப்படை) இடையே உதிரிப்பாகங்கள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த உதிரிப்பாகங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு சப்ளை செய்வதாக இருந்தது. உக்ரேன் நிறுவனம், இந்த உதிரிப்பாகங்கள் சப்ளை செய்வது தொடர்பாக குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.

இந்த ஒப்பந்தம் நடந்து 11 மாதங்களுக்குப் பின் உக்ரைன் நாட்டு தேசிய ஊழல் தடுப்பு அமைப்புக்கு , ஒப்பந்தம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி(26 லட்சம் டாலர்கள்) கைமாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது, ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியது, கையொப்பம் இட்டது ஆகியவற்றின் அடையாளங்கள் குறித்து உக்ரைன் ஊழல்தடுப்பு அமைப்பு விசாரிக்கத் தொடங்கியது.

மேலும், குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தொடர்பு, பணம் பரிமாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துபாயில் உள்ள நூர் இஸ்லாமிக் வங்கி ஆகியவற்றிடம் விசாரணை நடத்த முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த வங்கிக்கும், குளோபல் மார்கெட்டிங் நிறுவனத்துக்கும் உக்ரைன் அரசு கடிதம் எழுதி, பணப்பரிமாற்ற விவரங்களைக் கேட்டுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் அரசின் ஊழல் தடுப்பு அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதி, விசாரணைக்கு உதவும்படி கோரியுள்ளது. இந்தக் கடிதத்தை கீவ் நகரில் உள்ள இந்தியத்தூதர் வாயிலாக அனுப்பியுள்ளது உக்ரைன் அரசு. இந்த ஊழல் விவகாரம் தற்போது வெளியாகியுள்ளது.

Courtesy : The indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here