விநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்தவகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான தினை மாவு பனை வெல்லக் கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என பார்க்கலாம். 

தினை மாவு பனை வெல்லக் கொழுக்கட்டை

 தேவையானவை:

 தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்), பனைவெல்லம் – தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் – அரை கப், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:

தினை மாவை வெறும் கடாயில் வறுத்து உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும். 

பனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவி, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். 

இத்தகைய சத்தான, ருசியான கொழுக்கட்டை உணவுகளுடன் சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக கொண்டாடுங்கள்.