விநாயர் சதுர்த்தியை ஒட்டி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிகளை அறிவித்திருப்பது வரவேற்கத்தது. சென்னையைப் பொறுத்தவரை இந்த விதிமுறைகளை மீறப்படுகிறதா என்கிற கண்காணிப்பு ஓரளவுக்கு சாத்தியமாகலாம். அதேசமயம் சென்னையைத் தாண்டி இந்த விதிமுறைகள் தமிழகத்தின் மற்ற இடங்களில் கண்காணிக்கப்படுமா என்பது கேள்விதான். அரசு கண்காணிப்பு என்பதைத் தாண்டி, தொடர்புடைய ஒவ்வொருவரும் இயன்ற அளவில் தமக்கென்று கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும்.

vinayagar

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட விநாயகர் சதுர்த்தி இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டதில்லை. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட விரும்புவோர் அவரவர் வீடுகளில் களிமண் சிலைகளை வாங்கி வைத்து பூஜித்து அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து விடுவார்கள். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சதுர்த்தியை பிரபலமாக்கிய ஊடகங்கள் மூலம் இங்கே அந்த ‘கலாச்சாரம்’ தொற்றிக் கொண்டது. வேதியியல் வண்ணங்கள், தெர்மோகோல், கிலோ கணக்கில் செயற்கை பூக்கள் என சூழலியலுக்கு மாசு உண்டாக்கும் விஷயங்கள் இந்தக் கொண்டாட்டத்தில் நிறைய உண்டு. எளிமையை நோக்கி திரும்புதலே தனிப்பட்ட சூழலியலைக் காப்பற்ற நாம் செய்யும் முதல் நடவடிக்கையாக இருக்கும்.

விநாயர் சதுர்த்தியின் போது, என் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் கோயில் யானைகள்! யானையைக் கடவுளாக்கி வணங்கும் இதே நிலத்தில்தான் யானைகளைக் கட்டிவைத்து அவற்றை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் மனோபாவமும் உள்ளது. இன்னமும் பல கோயில்களில் விழாக் காலங்களில் தும்பிக்கை நீட்டி யாசகம் கேட்கின்றன. தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, கொட்டடியில் அடைத்து புண்பட்டு வாடும் இவற்றுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? தொன்றுதொட்டு பழக்கம் என்ற பலவும் நாகரிக உலகத்தில் கைவிடப்பட்டிருக்கின்றன. அதுபோல கொத்தடிமை விலங்காக கோயில்களில் அடைந்து கிடக்கும் யானைகளை நாகரிக சமூகம் எப்போது விடுவிக்கும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்