விண்மீன் துகள் ரோஹித் வெமுலா!

0
1040

(ஜனவரி 20, 2016இல் வெளியான செய்திக்கட்டுரை மறுபிரசுரமாகிறது.)

மனதில் பதிந்துவிட்ட புனைகதைகள்

“சஹாஸ்ர சிரஸ்ச புருஷ சாஹஸ்ரஜ்ஷா சஹாஸ்ரபததி” எனத் துவங்கும் ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் 90வது சூக்தம்மாக அமைந்திருக்கும் “புருஷ சூக்தம்” எனும் பாடலில் முதலில் படைப்பு கடவுளின் மகோன்னதத்தை விவரிக்கிறது.

ஆயிரம் சிரங்கள் கொண்டோன் புருஷன்
ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்
புவியெங்கும் பரந்து
நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.

இவை அனைத்தும் புருஷனே
முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்
அழிவற்ற பெருநிலையின் தலைவன் அவன்
பருவுலகு கடந்தோன்.

வேதகால முனிவரான நாராயண ரிஷியால் பாடப்பட்டது என கருதப்படும் இந்தப் பாடலில் கடவுளின் மகிமையைக் கூறிவரும் நேரத்தில் “ப்ரஹமனோஸ்யா முகமாஸ்தி” என, அதாவது
பிராமணன் முகமானான்
கைகள் அரசன்
தொடைகள் வைசியன்
பாதங்களில் சூத்திரன் தோன்றினான்
என இந்தியாவின் சாபக்கேடாக கடந்த இரண்டாயிரம் வருடமாக இருந்துவரும் நால்வருண ஜாதி அமைப்பு முறை அறிமுகப் படுத்தப்படுகிறது. “வேதம் வேதம்” எனப் பலரும் தலையில் வைத்துக் கொண்டாடும் ரிக் வேதத்தின் மெய்யான கோரமுகம் இதுதான்.

பிரம்மா மனுவுக்குச் சொல்ல, மனு மரீசிக்குச் சொல்ல, மரீசி பிருகுவுக்குச் சொல்ல, பிருகு மனுநீதி எனும் நூல் இயற்றினார் என்பது புராணக்கதை. இந்த மனு (அ) நீதிநூலில் 1:31 ஸ்லோகம் விராட் புருஷனாகிய பிரம்மாவின் தலை, புஜம்(தோள்), தொடை, பாதம் இவற்றிலிருந்து முறையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு ஜாதிகள் (வர்ணங்கள்) பிறந்தன என மேலும் நியாயம் கற்பித்ததோடு ஸ்லோகம் 1.91. சூத்திரனுக்கு விதிக்கபட்டுள்ள ஒரே பணி ஏனைய மூன்று வர்ணத்தாருக்கும் முகம் கோணாமல் பணிவிடை செய்வதுதான் எனவும் கூறுகிறது.
ஸ்ரீமான் கண்ணனால் உபதேசிக்கப்பட்டது எனக் கூறப்படும் பகவத் கீதை, அத்தியாயம்:4, சுலோகம்:13 சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் (நான்கு வருணங்களும் என்னுடைய படைப்பே) என்கிறது. அதாவது நானே நான்கு வர்ணத்தையும் உருவாக்கினேன் என்கிறது.

இந்த (அ)தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில்தான் மானுட சமூகத்தைப் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என அடுக்குகளாக ஆக்கி கூடவே இந்த நாலு சாதிக்கு அடுத்ததாக பிறக்க இடமில்லாததால் தரையில் பிறந்தவர்கள் தீண்டவும்தகாத தாழ்த்தப்பட்டவர்கள் எனும் நச்சு எண்ணம் நம்மில் விதைக்கப்பட்டிருக்கிறது.

உள்ளபடியே இவை எல்லாம் மோசடி. முற்றிலும் ஏமாற்று. முழுமையாக அதர்மம். சந்தேகத்துக்கு இடமின்றி பொய். மறுபேச்சுக்கு இடமின்றி போலி.

சமீபத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஜாதிய வன்முறையால் அல்லலுற்று மனம் நொந்து தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட ரோஹித் வெமுலா என்ற முனைவர் பட்டத்திற்கு இரண்டாம் ஆண்டு படித்துவந்த தலித் மாணவர் கூறுவதுதான் மெய்யாக உண்மை.

நாம் அனைவரும் விண்மீன் துகள்கள்!

stars

ஆம் ரோஹித் வெமுலா மட்டுமல்ல நீங்கள், நான், ஏன் அவரது அகால மரணத்துக்குக் காரணமாக இருந்த ஜாதிவெறியர்கள் உட்பட அனைவரும் விண்மீன் தூசுதான்.

நாம் எல்லோரும் விண்மீன் தூசுதான். அண்டத்தைப் போன்று நமது பிண்டமும் அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு மனிதனின் உடம்பில் ஏழு பில்லியன் பில்லியன் பில்லியன் அணுக்கள் உள்ளன. எண் தொகையில் இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு ஹைட்ரஜன் அணு. இந்த ஹைட்ரஜன் அணு பிரபஞ்சம் தோன்றிய பெரு வெடிப்பு – பிக் பேங் நிகழ்வின் முதல் நிமிடத்தில் ஏற்பட்ட அணு. அன்றிலிருந்து இன்றுவரை மாறவே இல்லை. எண் தொகையில் நான்கில் ஒரு பகுதி ஆக்ஸிஜன். பத்தில் ஒரு பகுதி கார்பன்.

எண் தொகையில் ஹைட்ரஜன்தான் முதலிடம் என்றாலும் எடையை வைத்துப் பார்த்தால் ஹைட்ரஜனைவிட எட்டு மடங்கு கூடுதல் எடை உடைய ஆக்ஸிஜன்தான் 65%; கார்பன் 18.5%; ஹைட்ரஜன் 9.5%; நைட்ரஜன் 3.2%; கால்ஷியம் 1.5%; பொட்டாஷியம் 1 சதவீதம். இந்த ஆறு தனிமங்கள் மட்டுமே நமது உடலில் 99% சதவீத அணுக்கள். ஆயினும் தங்கம், வெள்ளி, கோபால்ட் உட்பட மொத்தமாக சுமார் நாற்பத்தி ஒன்று தனிமங்கள் நமது உடலில் இருக்கும். ஆயினும் ஏனைய தனிமங்கள் மீதமுள்ள ஒரு சதவீத அணுக்கள்தான்.

ஹைட்ரஜனைத் தவிர ஏனைய அணுக்கள் எதுவும் பிரபஞ்சம் தோன்றிய போது இருக்கவில்லை. அவை எல்லாம் ஏதாவது ஒரு விண்மீனில் சமைக்கப்பட்டவை. விண்மீன்களின் கருவில் நிகழும் அணுக்கருப் பிணைவு (nuclear fusion) வழிதான் பல்வேறு தனிம அணுக்கள் பிரபஞ்சத்தில் உருவாகின்றன.

பெருவெடிப்பு நிகழ்வில் நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் தோன்றியபோது அதில் பெருமளவு ஹைட்ரஜன் மற்றும் சிறிதளவு ஹீலியம் மட்டுமே இருந்தது. எனவே, துவக்கத்தில் உருவான விண்முகில் அனைத்தும் ஹைட்ரஜன் மற்றும் சிறிதளவு ஹீலியம் மட்டுமே கொண்டதாக இருந்தன. இந்த விண்முகில்களிலிருந்து முதலாம் தலைமுறை விண்மீன்கள் தோன்றின. இந்த விண்மீன்களில் ஹைட்ரஜன், ஹீலியம் தவிர ஏனைய தனிமங்கள் இருக்காது. வெறும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மட்டுமே இருக்கும். அதிகமான ஹைட்ரஜனும், சிறிதளவு ஹீலியம் கொண்ட வாயுக்கூட்டத்திலிருந்து வாழ்வைத் தொடங்கிய இந்த விண்மீனின் பரிணாமத்தில், அதன் நிறைக்கு ஏற்ப, பல்வேறு விதமான கரு பிணைவுகள் ஏற்படும். விண்மீன் தனது வயது முதிரமுதிர பலப் புதுப்புதுத் தனிமங்களைப் பெற்றெடுத்து இறுதியில் இறந்து போகும்.

விண்மீன் சமையல்கட்டில் உருவாகும் மிகு எளிமையான பதார்த்தம் ஹீலியம்தான். விண்மீன் கருவில் வெப்பநிலை சுமார் ஒரு கோடி கெல்வின் அளவில் இருக்கும்பொழுது ஹைட்ரஜன் அணுக்கருக்கள் நேரடியாக இணைந்து ஹீலியமாக மாறுகின்றன. ஹைட்ரஜன் அணுக்கருவில் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே உள்ளது. எனவே இவ்வினை புரோட்டான் – புரோட்டான் சங்கிலிச் சுற்று (Proton – Proton chain) என்றழைக்கப்படுகிறது. நான்கு ஹைட்ரஜன் கருவிலுள்ள புரோட்டான்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கருவை இந்த வினைவழி உருவாக்கும். இரண்டு கோடி கெல்வினுக்குச் சற்று அதிகமான வெப்பநிலையில் ஹீலியம் அணுக்கருக்கள் வேறுவகையில் உருவாக்கப்படுகின்றன. இதனைக் கார்பன் -நைட்ரஜன் சுற்று (Carbon–Nitrogen Cycle) எனக் கூறுகிறார்கள். சாதாரண சாம்பார், அரைத்துவிட்ட சாம்பார் என்பது போல ஹீலியம் உருவாக இது இரண்டாவது வழி. இந்த வினையில் கார்பன் அணு வினைஊக்கியாக (catalyst) செயல்பட்டு ஹைட்ரஜன் அணுக்கருவை ஹீலியம் அணுக்கருவாக மாற்றமடையச் செய்கிறது. இறுதியில் முதலில் வினை தொடங்கக் காரணமாக இருந்த கார்பன் அணுக்கரு பயன்படுத்தப்படாமல் எஞ்சி, ஹைட்ரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியம் அணுக்கரு உருவாக்கம் பெறுகிறது.

விண்மீனின் மையப் பகுதியின் வெப்பநிலை 20 கோடி கெல்வின் ஆக உயர்ந்ததும் ஹீலியம் அணுக்கருக்கள் ஒன்றோடொன்று இணைய ஆரம்பிக்கின்றன. ஆல்பா துகள்களில் இரண்டு புரோட்டான் மற்றும் இரண்டு நியூட்ரான் இருக்கும். ஹீலிய அணுக்கருவிலும் இதே எண்ணிக்கையில் துகள்கள் உள்ளதால், ஹீலியத்தை ஆல்பாத் துகள் எனவும் அழைப்பர். எனவே இந்த வினையை ஆல்பா மும்மடி வினை (Triple Alpha Process) எனக் கூறுவர். இந்த வினையைத் தொடர்ந்து கார்பன் அணுக்கள் உருவாகும்.

இவ்வாறு உருவாகும் கார்பன் அணுக்கரு மேலும் மேலும் ஆல்பாத்துகளுடன் இணைந்து ஆக்ஸிஜன், நியான், மக்னீசியம், சிலிக்கன், சல்பர் என்று படிப்படியாக தனிம அட்டவணை வரிசைப்படி ஒவ்வொன்றாக உயர் தனிமங்கள் விண்மீன் சமையல்கட்டில் சமைக்கப் படுகிறது. இவ்வாறு தனிம வரிசையில் ஒவ்வொரு தனிமமாக உருவாகி அதன் இறுதியில் இரும்பு அணுக்கரு ஏற்படுகிறது. இரும்பு உருவாகும் நிலையில் விண்மீனின் மையப்பகுதியின் வெப்பநிலை 100 கோடி கெல்வின் அளவில் இருக்கும்.

பல கோடி ஆண்டுகள் விண்மீன் கருவில் அணுக்கரு பிணைவு நடைபெற்று இவ்வாறு பற்பல உயர் தனிமங்கள் சமைக்கப்படுகின்றன. பொதுவே விண்மீனில் இரும்புவரைதான் உருவாகும். இரும்பைவிட உயர் தனிமமான யுரேனியம் போன்ற தனிமங்கள் நோவா மற்றும் சூப்பர் நோவாவில் மட்டுமே ஏற்படும்.

நோவா அல்லது சூப்பர் நோவா என்பது விண்மீன்கள் வெடித்துச் சிதறுவதுதான். அப்படிப்பட்ட பிரளய நிகழ்வு ஏற்படும்போது பரவும் அதிர்வலைகள் அணுக்கருப் பிணைவைத் தூண்டவல்லது. வெடித்துச் சிதறும் விண்மீனில் உள்ள பல்வேறு தனிமங்களின் ஊடே அதிர்வலை பரவும்போது அங்கும் இங்கும் தனிமங்கள் கருப்பிணைவு செய்து இரும்பை விட அதிக கனமுடைய உயர் தனிமங்கள் உருவாகின்றன. சூப்பர் நோவா அல்லது நோவா வெடிப்பின் காரணமாக இந்த உயர் தனிமங்கள் அண்டத்தூசுடன் (Cosmic Dust) கலந்துவிடுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல லட்சோபலட்சம் விண்மீன்கள் வெடித்து உயர் தனிமங்களை விண்வெளியில் தூவியுள்ளன.

பூமி பிறந்த கதை

BigBang

ஒவ்வொரு விண்மீனும் வெடிக்கும்போது அந்த விண்மீனில் உருவான பல்வேறு தனிமங்கள் விண்வெளியில் தூவப்படுகிறது. விண்வெளியில் பரவும் இந்தப்பொருட்கள் காலப்போக்கில் வேறு ஒரு விண்முகிலைப் போய்ச் சேருகிறது. விண்மீனின் சாம்பல் படிந்து அந்த விண்முகில் பல்வேறு தனிமங்களைக் கொண்டு செறிவடைகிறது.

காலப்போக்கில் அந்த விண்முகிலிலும் புதிய விண்மீன் பிறக்கிறது. இப்புதிய விண்மீனில் முன்புபோல ஹைட்ரஜன் மட்டும் இல்லை. பெரும் நோவாவிலிருந்து சிதறிய உயர் தனிமங்களும் உள்ளன. இந்த விண்முகில்களில் தோன்றும் விண்மீன்களில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தவிர வேறு பற்பல உயர் தனிமச் செறிவு இருக்கும். எனவே இந்த விண்முகிலில் உருவாகும் விண்மீன் இரண்டாம் தலைமுறை. இரண்டாம் தலைமுறை விண்மீன்களோடு உடன் உருவாகும் திரள் வட்டில் (accretion disk) பல்வேறு விதமான தனிமங்கள் செறிவுடன் இருக்கும். இந்த விண்முகில் சுழலும்பொழுது உயர் தனிமங்கள் திரண்டு விண்மீனின் அருகே திடக் கோள்களாக (rocky planets) உருவாகின்றன. அப்படி ஒரு இரண்டாம் தலைமுறை விண்மீன் அருகே உருவானதுதான் நமது பூமி.

நமது சூரியன் நடுத்தர நிறையுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தவிர இரும்பு, தங்கம், யுரேனியம் என பற்பல உயர் தனிமங்கள் செறிவான விண்மீன். எனவே நமது சூரியன் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை விண்மீன். ஏற்கனவே இருந்து மடிந்து வெடித்துச் சிதறிய விண்மீன் சாம்பலிலிருந்து 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தான் நமது சூரியக் குடும்பம்.

பூமியில் உள்ள ஆக்ஸிஜன், இரும்பு, கால்சியம் உட்பட அனைத்து உயர் தனிமங்களும் வேறு ஏதோ ஒரு விண்மீனில் உருவாக்கப்பட்டு பெரும் நோவாவினால் விண்வெளியில் சிதறியவைதான். சுமார் 510 கோடி வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பெரும் விண்மீன் வெடிப்பைத் தொடர்ந்துதான் நமது சூரியன் உருவாகியிருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதாவது நமது சூரியன் தோன்றியதற்கு 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த ஒரு பெரும் நோவாவிலிருந்து சிதறிய பொருட்கள் வானில் இருந்த விண்முகிலை அடைந்து பின்னர் அந்த விண்முகிலிலிருந்து சூரியன் தோன்றியது எனக் கருதுகிறார்கள்.

சூரியன் போன்ற நடுத்தரமான நிறைகொண்ட விண்மீன்களில்தான் நமது உடலில் உள்ள கார்பன் உருவாகியது. இந்த உயிர் என்பதைக் கரிமப் பொருள் என்கிறோம். உயிருக்கு கார்பன் அவசியம். நமது உடலில் உள்ள அந்த கார்பன் எங்கே உருவானது? ஏதோ ஒரு விண்மீனில் கருப் பிணைவு வழியாக பல கோடி ஆண்டுகள் முன்பு கார்பன் உருவாகி, பின்னர் பிளானடேரி நெபுலாவாக விண்மீன் தனது மேலடுக்கை ஊதி வெளியே தள்ளியபோது கார்பன் விண்வெளியில் பரவியது. இந்தக் கார்பன்தான் எப்படியோ நமது சூரியன் உருவான விண்முகிலில் வந்து சேர்ந்து நமது உடலில் உள்ளது.

நமது எலும்பில் உள்ள கால்சியம் மிகு நிறை விண்மீன்களில் கருப்பிணைவில் சமைக்கப்பட்டு இரண்டாம் வகை சூப்பர் நோவா வெடிப்பின்போது விண்வெளியில் பரவியது. நமது இரத்தத்தில் உள்ள இரும்பு அணுக்கள் வெள்ளைக் குள்ள வகை விண்மீன்களில் கார்பன் திடீர் எனப் பிணைந்து Ia வகை சூப்பர் நோவாவாக வெடித்தபோது விண்வெளியில் பரவியது. தைராய்டில் உள்ள அயோடின், நரம்பு செல்களில் உள்ள செலினியம் முதலியன சூப்பர் நோவா பெரும் வெடிப்பின்போது நிகழும் பிரளயப் போக்கின் ஊடே உருவானவைதான்.

அதாவது இன்று பிரபஞ்சத்தின் மூலைமுடுக்கில் காணப்படும் எல்லா உயர் தனிமங்களும், இவ்வாறு விண்மீன் எனும் சமையலறையில் சமைக்கப்பட்டவைதான். பல கோடி ஆண்டுகள் முன்பு நடைபெற்ற பற்பல விண்மீன் வெடிப்பின் காரணமாக இன்று நாம் பிரபஞ்சத்தில் காணும் உயர் தனிமங்கள் எல்லாம் உருவாகி நம்மிடம் இருக்கிறதெனக் கூறலாம். அதாவது நாம் எல்லாரும் விண்மீன் சாம்பலில் விண்மீன் தூசு (stardust) வழியாகத்தான் உருவாக்கம் பெற்றுள்ளோம்.

விண்மீனின் கரு எனும் சமையல் அடுப்பில் அணுக்கருப் பிணைவு (nuclear fusion) எனும் சமைத்தல் வழிதான் பிற்காலத்தில் ஏனைய தனிமங்கள் உருவாகின. இவ்வாறு உருவான தனிமங்களைக் கொண்டு அமைந்த யாக்கை பிண்டங்களாகிய நாம் அனைவரும் விண்மீன் தூசு தான். நாம் என்றால் மனிதர்கள் மட்டுமல்ல புழு பூச்சி, தாவரம் என நாம் இந்த உலகில் காணும் அனைத்தும் விண்மீன் தூசுதான்.

யாரும் பிரம்மாவின் தலையிலிருந்தோ, காலிலிருந்தோ வந்தவர்கள் அல்ல. மெய்யாக வெகு காலத்திற்கு முன்பு இறந்துபோன ஏதேதோ விண்மீனின் எச்சங்களே நாம் என்பதுதான் உண்மை.
ஆயினும், இளைஞன் ரோஹித் வெமுலா தனது இறுதிக் கடிதத்தில் கூறியதுபோல “விண்மீன் தூசினால் ஆக்கப்பட்ட உன்னதமான படைப்பாகிய மனிதனைக் கல்வி பயிலும் இடமாகட்டும், தெருவீதி அரசியலாகட்டும், எங்குமே அவனது மனதை மதிப்பதில்லை. வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் கூட” என்ற நிலைதான் நிதர்சன அவலம்!. வெட்கக்கேடு.

இந்தக் கொடூர அவல நிலை மாற வேண்டும். நாம்தான் மாற்ற வேண்டும்; மாற்றுவோம்! உறுதியாக.

rohithvemula

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்