விடைத்தாளில் ரூ.100 வைக்கவும்: மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர் அறிவுரை

0
267

உத்தரப் பிரதேசத்தில் பொதுத்தேர்வில் எப்படி மோசடி செய்யலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு யோசனை வழங்கிய பள்ளி முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில், இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகள் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியுள்ளன. 

லக்னோவிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள மாவே மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்குத் தயாராவது குறித்து தனியார்ப் பள்ளி தலைமை ஆசிரியரான பிரவீன் என்பவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, அதனைப் பள்ளி மாணவர் ஒருவர் ரகசியமாகத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

அந்த வீடியோ பதிவில், மாணவர்கள் மற்றும் ஒரு சில பெற்றோர்கள் மத்தியில் பேசும் தலைமை ஆசிரியர்  பிரவீன், மாநில அரசு விதித்துள்ள கடுமையான நடவடிக்கைகளையும் மீறி பொதுத்தேர்வுகளில் எப்படி மோசடி செய்து என்பது குறித்துப் பேசுகிறார். 

இந்த வீடியோவை, அந்த மாணவர் முதல்வர் யோகி ஆதித்யநாத் புகார் மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுவே தலைமை ஆசிரியர் கைதாவதற்கு முக்கிய காரணமாகும். 

2 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் பிரவீன் பேசியதாவது, எனது பள்ளி மாணவர்கள் யாரும் தேர்வில் தோல்வியடைய மாட்டார்கள் என நான் சவால் விடுக்கிறேன்… அவர்கள் எதைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 

நீங்கள் உங்களுக்குள்ளும் பேசிக்கொண்டே தேர்வு எழுதலாம். எதையும் கண்டு அச்சமடையத் தேவையில்லை. அரசுப் பள்ளி தேர்வு மையங்களில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்கள் தான். யாரிடமும் மாட்டிக்கொண்டால் கூட நீங்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. 

இதற்குக் கூட்டத்தில் இருக்கும் பெரும்பாலானோர் இது நல்ல விஷயமாக இருக்கிறது எனக் கூறுகின்றனர். 

தொடர்ந்து, பேசும் பிரவீன், எந்த கேள்விக்கும் விடை அளிக்காமல் விட்டுவிடாதீர்கள்.. விடைத்தாளில் ரூ.100 மட்டும் வையுங்கள்.. ஆசிரியர்கள் உங்களுக்கு நிச்சயம் மதிப்பெண் தருவார்கள். நான்கு மதிப்பெண் கொண்ட கேள்விக்கு நீங்கள் தவறான பதில் அளித்திருந்தாலும், அதற்கு அவர்கள் 3 மதிப்பெண்கள் வழங்குவார்கள் என்கிறார். தொடர்ந்து, அவரது உரையை ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என்று கூறி நிறைவு செய்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here