நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ள விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
விஜய் மல்லையா 2017ல் ‘டியாஜியோ’ நிறுவனத்திடம் பெற்ற 2.80 கோடி ரூபாயை தன் மகன் சித்தார்த் மற்றும் மகள்களுக்கு வழங்கி உள்ளார்.இது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்பதால், விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டது.
வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை. நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. இனியும் காத்திருக்க முடியாது.அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜன., இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18 ல் தீர்ப்பு வெளியாக உள்ளது..