சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், விஜய் படத்தை நாங்கள் தயாரிப்பதாகச் சொல்லப்படுவது யூகம் மட்டுமே என அந்நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.

இன்றைய தேதியில் ரஜினிக்கு இணையாக லாபம் சம்பாதித்து தரும் நடிகராக விஜய் பார்க்கப்படுகிறார். மெர்சல் வெற்றிக்குப் பிறகு அவரது சந்தை மதிப்பு மேலும் உயர்ந்திருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் சர்கார் வெற்றிபெற்றால் விஜய்யின் பிசினஸ் கிராஃப் மேலும் உயரும்.

விஜய்யின் அடுத்தப் படத்தை அட்லி இயக்குகிறார், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது என்ற தகவல் கடைகோடி விஜய் ரசிகரையும் சென்றடைந்திருக்கும் நிலையில், ஏஜிஎஸ்ஸின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கும் தகவல் அதிர்ச்சிகரமானது.

“விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அது கில்லி, துப்பாக்கி போல் ஒரு பக்கா மாஸ் படமாகவே இருக்கும். விஜய் சாரின் அடுத்தப் படத்தை நாங்கள் தயாரிப்பதாக இங்கே நிறைய யூகங்கள் நிலவுகிறது. விஜய் சாரின் படத்தை தயாரிப்பது என்பது எங்களின் கனவு மற்றும் நீண்டநாள் விருப்பம். அந்த வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தை நீங்கள்தானே தயாரிக்கிறீர்கள் என்றதற்கு, “விஜய் சாரின் எல்லா படங்களுக்கும் இப்படியான யூகங்கள் வருவதுண்டு. அவர் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது மிகப்பெரிய கௌரவம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் சிஇஓ வின் பேச்சிலிருந்து விஜய்யின் அடுத்தப் படத்தை அவர்கள் தயாரிப்பது உறுதியாகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அப்படியானால் விஜய் – அட்லி இணையும் படத்தை தயாரிக்கப் போகும் நிறுவனம் எது? ஏஜிஎஸ்ஸுக்கு அந்த வாய்ப்பு உறுதி செய்யப்படுமா?

விரைவில் இவற்றிற்கு பதில் கிடைக்கும் என நம்புவோம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்