அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, இந்தப் புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “அமைச்சர் விஜயபாஸ்கர், எந்தக் குறையும் சொல்லப்படவில்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை”, என்றெல்லாம்கூட புலம்பி வருகிறார். அதுமட்டுமல்ல, நிர்வாகரீதியாக அவர் மிகச்சிறப்பாகவும், வேகமாகவும் வேலை செய்வதாகவும், அதனால் திட்டமிட்டு, காழ்ப்புணர்வோடு வழக்கு புனையப்பட்டு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவருடைய வேலைகள் பற்றியெல்லாம் நாங்கள் குறை சொல்ல விரும்பவில்லை. இதில் அந்தப் பிரச்சினையே வரவில்லை. ஆனால், அவர் கொள்ளையடித்து இருக்கிறாரா இல்லையா? தெருவில் செல்லும் குப்பனோ, சுப்பனோ நீதிமன்றத்துக்கு சென்று புகார் சொல்லவில்லை. புகாரை நீதிமன்றத்தில் பதிவு செய்திருப்பது வருமான வரித்துறை. இதற்கு அமைச்சரின் பதில் என்ன?

stalin

அவர் நியாயமாக, நேர்மையாக செயல்படுபவர் என்றால், லஞ்சம் வாங்கவில்லை, மடியில் கனமில்லை என்று நினைத்தால், உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வந்ததும், தலைவர் கலைஞர் அவர்கள் அவரை அழைத்து, ராஜினாமா செய்ய சொன்னாரோ, அதேபோல, திரு. தயாநிதி மாறன் அவர்கள் மீது வழக்கு பதிவான அடுத்த நிமிடமே அவரை ராஜினாமா செய்ய சொன்னாரோ, அதுபோல, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிபிஐ விசாரணையை சந்திக்கும் ஆற்றலை பெற்று, அவரிடம் நியாயம் இருந்தால் தண்டனையில் இருந்து வெளியேறி, நிரபராதி என நிரூபித்து விட்டு வர வேண்டும். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என்பதுதான் என்னுடைய கருத்து.” என்றார்.

இதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here