விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவிய சென்னை இளைஞர்: நன்றி தெரிவித்த நாசா

0
156

சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளருக்கு நாசா நன்றியைத் தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதில் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் நீலம் மற்றும் பச்சை நிறப்புள்ளிகளாகக் காணப்படுகிறது. அவற்றில் பச்சைப் புள்ளிகள் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட குப்பைகளாகவும், நீல நிறப் புள்ளிகள் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை தற்போது அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால்  சரியாக கண்டறியமுடியவில்லை. வரும் அக்டோபர் மாதம் நிலவின் அப்பகுதி வெளிச்சம் நிறைந்ததாக இருக்கும். எனவே அப்போது அப்பகுதியில் அதிக புகைப்படங்களை எடுக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை, சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் (33) தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். 

விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்தனர். விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியதாக அறியப்படும் இடத்தில் இருந்து 750 மீட்டர் தொலைவில் அதன் பாகத்தை கண்டறிய உதவிய சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா நன்றியும், பாராட்டும் தெரிவித்தது. 

இதுதொடர்பாக சண்முக சுப்பிரமணியன் கூறுகையில் எனக்கு விண்வெளி அறிவியல் தொடர்பாக சிறு வயது முதல் தனி விருப்பம் இருந்து வருகிறது. இதுவரை எந்தவொரு விண்வெளி ஆய்வு தொடர்பான நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள நான் தவறியதில்லை. அவ்வகையில், நாசா வெளியிட்ட இரு புகைப்படங்களையும் அடுத்தடுத்து வைத்து ஆய்வு செய்தேன். அதில் ஒன்று நாசாவால் ஏற்கனவே எடுக்கப்பட்டது. மற்றொன்று புது புகைப்படம் ஆகும். இந்த ஆய்வு சற்று கடுமையாகவும், நிறைய நேரத்தை செலவிடக்கூடியதாகவும் அமைந்தது. ஒருவழியாக எனது கண்டுபிடிப்பை டிவிட்டரில் அக்.3-ஆம் தேதி பதிவிட்டேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here