விக்னேஷ் சிவனின் சாதி அரசியல் – கோலிவுட் வேதாளம்

0
922
Keerthy Suresh & Suriya

வேதாளத்தை கடந்த சில வாரங்களாகப் பார்க்கவில்லை. சரியாகச் சொன்னால் 3 ஆம் தேதி சந்தித்தது. எனக்கு பல வேலைகள். வேதாளம் தனது வழக்கமான தலைமறைவு யாத்திரையை மேற்கொண்டிருந்தது. சந்திப்பு தள்ளிப் போனதால் காலையிலேயே கிளம்பினேன். வேதாளம் அறையில் இருந்தது.

“ஆண்டாள் விவகாரம் ரொம்ப பெருசா போயிட்டிருக்கு போலிருக்கு” என்று சிரித்தது. “கலைஞர் ஆரோக்கியமா இருந்திருந்தா கச்சிதமா எதாச்சும் விளக்கம் சொல்லி வாயை அடைச்சிருப்பாரு. இப்போ அதுக்கு ஆளில்லையா… தெருவுக்கு வந்திட்டானுங்க.”

எனக்கு ‘திக்’கென்றது. கரண்ட் மேட்டர் என்று கரண்ட் கம்பியில் கை வைத்திருக்கிறது. “செம மூடுல இருக்கிற போலிருக்கே” என்றேன் பயத்தை வெளிக்காட்டாமல்.

“தேவதாசி முறையை உருவாக்கி அது தெய்வீகமானது, தேவதாசிகள் கடவுளுக்காக தங்களை அர்ப்பணித்தவங்கன்னு தேவதாசி முறைக்கு ஆதரவா கொடி பிடிச்ச கூட்டம், இப்போ தேவதாசிங்கிறது கேவலமானதுன்னு தெருவுக்கு வந்திருக்கே… நான் கேட்கிறேன். இத்தனை வருஷமா தேவதாசின்னு எத்தனை ஆயிரம் பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சிருப்பீங்க? அதுக்கெல்லாம் உங்களுக்கு என்னடா தண்டனை தர்றது. நியாயமா நீங்க பொட்டுகட்டி தேவதாசின்னு முத்திரை குத்துனதுக்கு நாங்கதாண்டா உங்களை ஓடஓட தொரத்தி அடிக்கணும். நீங்க மன்னிப்பு கேள்னு போராட்டம் நடத்துறீங்களா?”

“கொஞ்சம் மெதுவா பேசறியா? நித்யானந்தாவோட சிஷ்யைன்னு ஒரு சின்ன பொண்ணு நாதாரி நாதரின்னு பேசி வீடியோ வெளியிட்டிருக்கு. நாதாரிங்கிறது ஒரு சாதியை குறிக்கிறது. நியாயமா அந்தப் பொண்ணை அரெஸ்ட் பண்ணி நான் பெயிலபிள் கேஸ்ல உள்ள போட்டிருக்கணும். ஏன் செய்யலை?”

“ஏன்?”

“நமக்கு வாய்ச்ச முதலமைச்சரும், அமைச்சர்களும் அப்படி. 3 சதவீதம்பேர் என்ன சொன்னாலும் நியாயமான நடவடிக்கை எடுக்கவே தொடை நடுங்குவாங்க. மத்த 97 சதவீதம் பேர் நியாயமான கோரிக்கை வச்சாலும் போலீசு வன்முறையை ஏவுறாங்க. இதுதான் தமிழ்நாட்ல நடந்துகிட்டிருக்கு.”

“எதிர்த்து கேள்வி கேட்க வேண்டியதுதானே?”

“அதுக்கான இடம் இது இல்ல. நீ தானா சேர்ந்த கூட்டம் பார்த்தியா?”

“பார்த்தேன். உன்னோட விமர்சனமும் படிச்சேன். நீ விக்னேஷ் சிவனோட அரசியல் பத்தி எழுதுவேன்னு நினைச்சேன்.”

“அரசியலா?”

“அவரோட நானும் ரௌடிதான் படத்துல வர்ற பார்த்திபனோட வில்லன் கேரக்டர் பேரு கிள்ளிவளவன். திருமாவளவன் மாதிரி சுத்தத் தமிழ்ப் பெயர். அவரோட போட்டோ சேரியில இருக்கிற குடிசையில இருக்கும். தானா சேர்ந்த கூட்டத்துல எல்லோரும் அயோக்கியனுங்க. ஆனா, அக்ரஹாரத்துல இருக்கிற கீர்த்தி சுரேஷும் அவங்க வந்து சேர்ந்த குடும்பமும் மட்டும் ரொம்ப நல்லவங்க. கீர்த்தி சுரேஷ் யாருன்னு தெரியாதாம். ஒரு அக்ரஹார குடும்பத்துல வந்து சேர்ந்துப்பாங்களாம். ஏன் என்னன்னு கேட்காமல அவங்க அவரை சேர்த்துப்பாங்களாம். ஒரு பிராமண குடும்பம் கீர்த்தி சுரேஷ் யார் என்னன்னு தெரியாமலே பெரிய தொகையை தானமா கொடுப்பாங்களாம்… என்னடா கதை விடுறீங்க?”

“மொத்த படமே கதைதானே?”

“மொதல்ல வர்ற சொடக்கு பாட்டுல சூர்யா அரசியல்வாதி பாக்கெட்லயிருந்து காசு எடுத்து கோவில் பூசாரியோட தட்டுல காசு போடுவார் அப்பவே எனக்கு படம் பிடிக்காமப் போச்சு. அரசியல்வாதி அடிக்கிறது கொள்ளைன்னா இவங்க செய்யிறது மட்டும் என்னவாம்?”

“காலையிலேயே ரொம்ப ஹாட்டா இருக்கிற. பிரிட்ஜ்ல பீர் கீர் வச்சிருக்கியா?” என்று பிரிட்ஜை திறந்தேன். உள்ளே காற்று நுழைய இடமில்லாத அளவுக்கு பட்வைசர் மேக்னம் பீர் போத்தல்கள்.

“கையை வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டே” என்று வேதாளம் பாய்ந்து வந்து கதவை மூடியது.

“இவ்வளவு வச்சிருக்க. எங்க ஆட்டைய போட்ட?”

“வேணும்னா ரெண்டு எடுத்துக்க. கேள்வி எல்லாம் கேட்காத. ஆமா, ரஜினியோட ஆன்மிக அரசியல் என்னாச்சு” என்று பீரிடமிருந்து பேச்சை மாற்றியது.

“போர் வரலையே. போர் வந்தாதானே அவரு கட்சி பெயரை அறிவிப்பாரு.”

“அதுவரைக்கும்…?”

“படம் நடிப்பாரு… பணம் பண்ணுவாரு…ஒகி புயல், கதிராமங்கலம்னு மக்கள் தெருவுல இறங்கி போராடுறப்போ, போராடுறதுக்கும், அறிக்கை விடுறதுக்கும் ஆள் நிறைய இருக்கு, நாம 234 தொகுதியில போட்டியிட்டு ஸ்ட்ரைட்டா கோட்டைக்குப் போவோம்னு தலையை சிலிப்பிப்பாரு…”

“உங்களுக்கெல்லாம் மானம், ரோசம் எதுவுமில்லையா?”

“இதுவரைக்கும் நாமன்னு சொல்லிகிட்டு இப்போ உங்களுக்கு எங்களுக்குன்னு பிரிச்சுப் பேசற?”

“என்ன இருந்தாலும் நான் இந்த காலகட்டம் கிடையாதே… நூற்றாண்டுகள் பழக்கம் உண்டு.”

“அதாவது தேவதாசி முறையை கொண்டுவந்த தலைமுறை?”

“ஐயோ… அதுக்கு இந்த தலைமுறையே பெட்டர். ரொம்ப சூடா இருக்க ரெண்டு பீர் குடியேன்.”

ஒரு பீர் போத்தலை எடுத்து திறந்தேன். மனக்குமுறலைப் போல் பீர் நுரைத்து வழிந்தது.

இதையும் படியுங்கள்: ”ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்