விக்கிபீடியாவில் முதலிடம் பிடித்த தமிழ்; இந்தி சமஸ்கிருதத்தை வீழ்த்திய தமிழ்

0
334

விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது.

சர்வதேச அமைப்புகளான கூகிள் மற்றும் விக்கிப்பீடியாவின் கூட்டு முயற்சியில் இந்திய அளவில் கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்த அனைத்து மொழி விக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதலிடம் பெற்றுள்ளது.

 தமிழகத்தில் அதிகம் தேடப்படும் தலைப்புகள், இந்திய அளவில் முக்கியமான தலைப்புகள் என அனைத்தும் இந்தச் சமூகம் பயன்படும் தலைப்புகளில் எழுத வேண்டும் என்று முன்முடிவோடு தரத்தில் சமரசமின்றி எழுதப்பட்டவை. அனைத்தும் தன்னார்வத்தில் எடுத்துக் கொண்டு தமிழ் உள்ளடக்கத்தை இணையப்பரப்பில் அதிகரிக்கும் நோக்கோடு எழுதப்பட்டவை. இனி நீங்கள் கூகிள் இத்தலைப்புகளில் தேடும் போது காணக்கிடைக்கும் முதல் பதிலே இந்தப் போட்டியில் எழுதப்பட்டதாக இருக்கலாம். இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு இந்த முன்னெடுப்பு முக்கியமானதே.

நீங்கள் கூகுள் உள்ளிட்ட எந்த தேடுபொறியில் எந்தவொரு விடயத்தை தேடினாலும் பெரும்பாலான சமயங்களில் முதல் முடிவாக விக்கிப்பீடியாவே காட்டப்படும். கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாவில் உலகின் பெரும்பாலான மொழிகளில் எண்ணற்ற தலைப்புகளில் கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.

துறைசார் வல்லுநர்கள் முதல் பொது மக்கள் வரை யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியாவில் புதிய தலைப்பில் கட்டுரை படைக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் மேலதிக தகவல்களை சேர்க்கலாம். அவை தக்க வழிமுறைகளுக்கு பின்னர் பதிப்பிக்கப்படும்.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விக்கிமீடியா – கூகுள் இணைந்து நடத்தும் இந்த போட்டியின் முக்கிய நோக்கமே, குறிப்பிட்ட காலகட்டத்தில் இணையத்தில் தமிழ் மொழியில் அதிகளவில் உள்ளடக்கங்களை உருவாக்குவதே என்று கூறுகிறார் வேங்கைத் திட்டம் 2.0 குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மென்பொறியாளருமான நீச்சல்காரன் என்று அறியப்படும் இராஜாராமன்

“தமிழில் வேங்கைத் திட்டம் 2.0 என்றும் ஆங்கிலத்தில் டைகர் என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியானது கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. ஒருபுறம், விக்கிப்பீடியாவில் எழுவது குறித்து சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், மற்றொரு புறம் எழுத ஆர்வம் இருந்தும் அதற்கு வசதியில்லாத சுமார் 50 பேர் விண்ணப்பத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மடிக்கணினி மற்றும் இணைய வசதி ஆகியவை இந்த திட்டத்தின் வாயிலாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.”

போட்டிக்காக இந்திய மொழிகளில் மொத்தம் எழுதப்பட்ட கட்டுரைகளில் இது 24% ஆகும். கட்டுரை எண்ணிக்கை மட்டுமல்லாமல் பங்கெடுத்தவர்கள் எண்ணிக்கையிலும் முதலிடம் என்பது பெருமைதான். 

இருநூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதிய முனைவர் Kumbakonam Jambulingam , “வேங்கை மங்கை” பாத்திமா ரினோசா, வெ. வசந்த லட்சுமி ஆகியோரின் பங்கும் முக்கியமானது. கி. மூர்த்தி, தகவலுழவன், Mahalingam Rathinavel, Arularasan Gurusamy ஆகியோர் நூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதி வெற்றியை உறுதி செய்தனர்.

 போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், நடுவர்கள், பரப்புரையாளர்கள், செய்தி வெளியிட்ட ஊடகங்கள், தொடர்தொகுப்பு நிகழ்விற்கு உதவியவர்கள் என இந்த வெற்றிக்குப் பின்னர் உள்ளனர்.

வேளச்சேரி பயிலகம், மதுரை மன்னர் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி ஆகியோ உதவியுள்ளனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு சில மாதங்களில் நடக்கவுள்ளது. 

2018-2019இல் நடைபெற்ற முதலாமாண்டு போட்டியில், தொடக்கம் முதலே அதிக கட்டுரைகள் எழுதுவதில் இந்திய மொழிகளுக்கிடையே முன்னிலையில் இருந்து வந்த தமிழ் மொழியை, கடைசி கட்டத்தில் பஞ்சாபி மொழி பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பெற்றது. அதே போன்று, இந்த ஆண்டும் தமிழ் – பஞ்சாபி ஆகிய மொழிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வந்த சூழ்நிலையில் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்று நீச்சல்காரனிடம் கேட்டோம்.

“முதலாம் ஆண்டில் கடைசி நேரத்தில் வெற்றியை இழந்தது தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்களுக்கிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, முதலாம் ஆண்டை போலல்லாமல் இந்த ஆண்டு போட்டியில் திட்டமிட்டு செயல்பட முற்பட்டோம். அந்த வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்துவது, எழுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவது, ஊக்கமளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அதுமட்டுமின்றி, எதிர்பாராத வகையில், சில தனிப்பட்ட நபர்கள் வியப்பளிக்கும் வகையிலான பங்களிப்பை அளித்ததே இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம்,” என்று அவர் கூறுகிறார்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போட்டியின் இறுதி முடிவுக்கு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 2,959 கட்டுரைகளுடன் தமிழ் மொழி முதலிடமும், 1768 கட்டுரைகளுடன் பஞ்சாபி (குர்முகி எழுத்து வடிவம்) இரண்டாமிடமும், அடுத்தடுத்த இடங்களை பெங்காலி, உருது, சந்தாளி, இந்தி உள்ளிட்ட மொழிகளும் பெற்றன. இந்தியாவை பொறுத்தவரை இணையத்தில் அதிக உள்ளடக்கங்களை கொண்ட மொழியாக விளங்கும் இந்தியில் 417 கட்டுரைகளை 26 பேர் படைத்திருந்த நிலையில், தமிழ் மொழியில் அதைவிட 2,542 அதிக கட்டுரைகளை 62 பேர் படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here