விகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்

ஐ.டி. பணியாளர் மன்றத் தலைவி பரிமளாவின் கண்டனச் செய்தி

0
1055

விகடன் குழுமத்தின் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து FITE தொழிற்சங்கத் தலைவி பரிமளாவின் செய்தி:

கார்பொரேட் உலகின் சட்ட விரோத பணிநீக்கங்கள் – விகடன் மட்டும் விதிவிலக்கா என்ன?

1926 இல் சிறிய அளவில் ஆரம்பித்த ஆனந்த விகடன் பத்திரிக்கை, இன்று வார இதழ்,மாத இதழ்,விளம்பரங்கள் என 26 நிறுவனங்களாக வளர்ந்து ஊடகத் துறையில் ஆண்டுக்கு சுமார் 140 கோடி வர்த்தகம் (turnover) செய்கின்ற ஒரு பெரும் கார்பொரேட் நிறுவனமாக மாறி இருக்கிறது. அத்தோடு தமிழ்ச் சமூகத்தின் ஒரு முக்கிய முற்போக்கு ஊடகமாகவும் இருக்கிறது. இந்த பெரிய வளர்ச்சிக்குப் பின்னால் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது, விகடன் நிர்வாகமும் மறுக்காது.

விகடன் குழும நிறுவனங்களின் அனைத்து அச்சு பணிகளையும் செய்யும் அச்சகம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல ஆண்டுகளாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக நிரந்தர தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். மாதத்திற்கு 50 லட்சம் பிரதிகள் விகடன் குழுமம் வெளியிடுகிறது.

சமீப காலமாக நடப்பது என்ன?

இந்த அச்சகத்தில் செய்யப்பட்டுக்கொண்டு இருந்த வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த செலவில் செய்து கொடுப்பவர்களோடு ஒப்பந்தம் போட்டு வேலையை முடிப்பது என்ற அவுட்சோர்ஸ் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. திருச்சியில் வேறு ஒரு அச்சகம் தொடங்கப்பட்டு இருக்கிறது. நிரந்தர தொழிலாளர்களுக்கு பதில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள்.

தற்போது அம்பத்தூர் அச்சகத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களில் 100 பேர் விகடன் நிர்வாகத்தால் மிரட்டப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேலையை விட்டு போக மறுத்த தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பதை நிர்வாகம் நிறுத்தி இருக்கிறது. அச்சகத்தில் உள்ள அச்சிடப்படாத காகித பண்டல்களை எடுத்துச் செல்ல நடந்த முயற்சியை தொழிலாளர்கள் தட்டிக் கேட்டு, ‘நிர்வாகம் தங்களுக்கு ஏன் வேலை தர மறுக்கிறது?’ எனக் கேட்டு போராடி இருக்கிறார்கள். தொழிலாளர் நல அலுவலகத்தில் முறையிட்டு இருக்கிறார்கள்.

தொழிலாளர் அலுவலகத்தில் நிர்வாகம் அச்சகம் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாக பொய்யான தகவலை கூறி இருக்கிறது. இதன் அடிப்படையில் தொழிலாளர் நல அதிகாரி போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார். இந்த அறிவுரை அடிப்படையில் விகடன் நிர்வாகம் முன் அனுமதி இன்றி தொழிலாளர்கள் ‘வேலை நிறுத்தம்’ செய்தார்கள் என்ற பொய்யான காரணத்தை காட்டி சட்ட ரீதியாக அவர்களை பணி நீக்கம் செய்வதை நோக்கி செல்கிறது.

உலகம் முழுவதும் முதலாளித்துவ நிறுவனங்கள் தங்கள் லாப விகிதத்தை குறையாமல் பார்த்துக்கொள்ள குறைந்த செலவில் ஒப்பந்த முறையில் வேலையை முடித்தல் (outsourcing), நிரந்தர தொழிலாளர்களை குறைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் (contract workers) எண்ணிக்கையை அதிகரித்தல் என்ற முறையை நோக்கி தீவிரமாக நகர்கின்றன. விகடன் நிர்வாகத்தின் அச்சக தொழிலாளர்களின் பிரச்சினையும் இதன் ஒரு பகுதியே.

ஆண்டுக்கணக்கில் இரவும் பகலும் உழைத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், எதிர்கால பாதுகாப்பு என எதைப் பற்றியும் எந்த கவலையுமின்றி எந்த நியாயமான காரணமும் இல்லாமல் அச்சகத்தை மூடுவது என்பது விகடன் நிர்வாகத்தின் ஒரு சட்ட விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கையே ஆகும். விகடன் நிர்வாகத்தின் சட்ட விரோத பணி நீக்க நடவடிக்கைகளை கண்டித்து எ.ஐ.டி.யு.சி (AITUC) யின் தமிழ் நாடு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனை சேர்ந்த அச்சக தொழிலாளர்கள் 22.03.2018 அன்று சேப்பாக்கத்தில் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

தொழிலாளர்கள்,விவசாயிகள், மாணவர்கள், பெண்கள்,மீனவர்கள் என தமிழ்ச் சமூகத்தின் எந்த மூலையில் இருந்து குரல் எழுந்தாலும் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பி ஓர் முற்போக்கு ஊடக நிறுவனமாக அடையாளப்பட்டு இருக்கும் விகடன் நிர்வாகம் தனது சொந்த தொழிலாளர்களின் நியாயமான குரலை நசுக்குவது நியாயமா?

விகடனின் வளர்ச்சியில் தங்கள் வாழ்வை கரைத்த தொழிலாளர்களின் வேலையை சூழ்ச்சியாக சட்டத்தின் துணை கொண்டு பறிக்க நினைப்பது முற்போக்கானது ஆகுமா?

நிறுவனங்கள் லாப வெறியில் நடத்தும் தொழிலாளர்களின் சட்ட விரோத பணிநீக்கத்தை, உழைப்பு சுரண்டலை தொடர்ந்து எதிர்த்து வரும் விகடன் அதே லாப நோக்கத்திற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பத்தையும் நிர்கதியாய் வீதியில் விடலாமா?

எனவே இது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், விகடன் போன்ற முற்போக்கான ஊடக நிறுவனத்திற்கு அறமாகாது என ஐ.டி.பணியாளர்கள் மன்றம் கருதுகிறது.

விகடன் நிர்வாகம் வாழ்வாதாரத்திற்காக, தங்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என பைட் தொழிற்சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் போராடும் ஜனநாயக சக்திகள் அனைவரும் விகடன் குழும அம்பத்தூர் அச்சக தொழிலாளர்கள் கோரிக்கைக்கு துணை நிற்க வேண்டும் என ஐ.டி தொழிலாளர்களின் பைட் தொழிற்சங்கம் கேட்டுக்கொள்கிறது.

பரிமளா
தலைவர், ஐ.டி பணியாளர்கள் மன்றம் (FITE), தமிழ்நாடு

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்: இங்கே, இப்போதே உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்