வாழ்க்கையில் நிறைய கண்ணீர் விட்டு இருக்கேன் – மலேசியாவில் ரஜினி பேட்டி

0
569
Rajinikanth

நட்சத்திர கலைவிழாவுக்காக மலேசியா சென்ற கமல், ரஜினி தங்கள் பங்களிப்பாக விவேக்கின் கேள்விகளுக்கு மேடையில் பதிலளித்தனர். கஷ்டமான கேள்விகள் வேண்டாம் என்ற உஷாரான அறிவிப்புடன் பேட்டியை தொடங்கினார் ரஜினி. அவரிடம் விவேக் கேட்ட கேள்விகளும், ரஜினியின் பதில்களும்.

கேபி சார் உங்களுக்கு நடிப்பை தூண்டினாரா இல்லை உங்களுக்குள் இருந்த ஸ்டைல் கேபி சார் மூலமாக வெளிவந்ததா?

இப்ப நான் எப்படி இருக்கேனோ எப்போதும் அப்படித்தான் இருப்பேன். நான் பஸ் கண்டக்டராக இருக்கும் போது கூட வேற பஸ்களில் அரை மணி நேரத்தில் 40 டிக்கெட்டுகள் கொடுத்தால் நான் பத்து நிமிடங்களில் அந்த டிக்கெட்டுகளை கொடுத்து விடுவேன். கர்நாடக பஸ்ஸில் நான் வேலை பார்த்த போது ஆண்கள் பஸ் பின்னால் அமருவார்கள். பெண்கள் பஸ் முன் பகுதியில் அமருவார்கள். நான் எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு பஸ் முன் பகுதியில் தான் இருப்பேன் அப்போது தலைமுடி அதிகமாக இருக்கும். காதுக்கு பின் பறக்கும் முடிகளை கையால் கோதிவிட்டு ஸ்பீடா டிக்கெட் டிக்கெட் என்று கொடுப்பேன். இதை கேபி சார் பார்த்து இருக்கிறார். டேய் சினிமாவுக்கு நீ போனா இந்த ஸ்டைல் புதுசு. ஜனங்களுக்கு பிடிக்கும் இதை எப்பவும் மாற்றாதே என்று அட்வைஸ் பண்ணார். அதை நான் அப்படியே மெயின்டெயின் பண்றேன்.

உங்களுடைய குறைந்தபட்ச ஆசை என்ன? அதிகபட்ச ஆசை என்ன?

குறைந்தபட்சம் ஒரு ஸ்கூட்டர் வாங்கணும் 2 பெட்ரூம் உள்ள அபார்ட்மென்ட் வாங்கணும் ஒரு டீசன்ட் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ ஆசை. அதிகபட்சம்னா என்னை வாழ வைத்த தமிழ் மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான்.

எப்ப நீ ங்க ரொம்ப ஜாலியாக இருந்திங்க? எப்ப நீங்க ரொம்ப மனசு வருத்தபட்டிங்க?

படம் ஹிட்டானால் ஜாலியா சந்தோஷமாக இருந்திருக்கேன். படம் சரியாக போகவில்லை என்றால் வருத்தப்பட்டு இருக்கேன். நிறைய சந்தோஷப்பட்டு இருக்கேன். வாழ்க்கையில் நிறைய கண்ணீர் விட்டு இருக்கேன்.

முதல் முறையாக மலேசியா பயணம் செய்தது பற்றி?

1977 நினைத்தாலே இனிக்கும் படபிடிப்புக்கு நானும் கமலும் வந்திருக்கோம். எனக்கு அதுதான் முதல் முறை. அப்போது கமல் பெரிய நடிகர். நான் அப்போது தான் சினிமாவுக்கு வந்தேன். கமலை அழைத்து செல்ல தனி கார் வரும். ஆனால் ரஜினி எங்கே என்று கேட்டு என்னையும் அழைத்துச் செல்வார். அரவணைத்து என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டார். சூட்டிங் முடிந்த அன்று நானும் கமலும் இரவில் மலேசியாவில் ஜாலியா என்ஜாய் பண்ணிருக்கோம். காலை நான்கு மணிக்கு வந்து தூங்குவோம். கேபி சார் வருவாங்க. என்ன இந்த பசங்க இப்படி பன்றாங்க என்று .அப்படியே பேசிட்டு போய்டுவாங்க. கமலும் நானும் இதை மறக்கவே மாட்டோம்.

பைரவி டு எந்திரன், சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர் இந்த பயணம் பற்றி?

என் 45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த அளவு என் படங்களில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லி இருக்கிறேன்.

வாழ்வின் நிறைவில் நீங்கள் என்னவாக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்?

ஒரு நடிகனாக வந்தேன் மகிழ்வித்தேன் நடிகனாக போய்ட்டேன் என்று என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது.

இதையும் படியுங்கள்: ஆதார் தகவல்கள்: ’பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல் இது’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்