பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார்.
தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வந்திருக்கிறது. தமிழகத்திலும் அதை நாங்கள் செய்வோம் என்று பேசினார்.
இந்நிலையில், வாரிசு அரசியல் குறித்த அமித்ஷா பேச்சுக்கு திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை-உறவினர்களை-பினாமிகளைக் கொண்டு அரசு கசனாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் – வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.
அவர்கள் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நாட்டை நாசப்படுத்தி – தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.